news-details
ஆன்மிகம்
இயேசு ஆண்டவரின் மூன்று முகங்கள்

திருவிவிலியத்தில் உள்ள புதிய ஏற்பாட்டு நூல்கள், ஆண்டவர் இயேசுவின் வாழ்வைத் தெளிவாகவும் நேரடியாகவும் பேசுகின்றன. அந்த முறையில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய  கூற்றுகளை ஆய்ந்தறியும்போது, அவரைப் பற்றிய வெளிப்பாடுகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இத்தூண்டுதலின் விளைவாக ஏற்பட்ட எண்ண அலைகள்தான் இக்கட்டுரை.

இயேசுவின் முதல் முகம், துன்புறும் கிறித்தவர்கள்

அக்காலத்தில் சவுல் கிளர்ந்தெழுந்து கிறித்தவர்களைத் துன்புறுத்தவும், கைது செய்யவும் தமஸ்குவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அப்போது ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியதால் தரையில் விழுந்த சவுலிடம், “சவுலே, சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்ற குரல் கேட்டது. அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக் கேட்க, “நீ துன்புறுத்தும் இயேசு  நானேஎன்ற பதில் கிடைத்தது (திப 9:1-6).

இயேசுவின் இக்கூற்று நம்மை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. ஏனெனில், கிறித்தவர்கள் துன்புறும்போதெல்லாம் இயேசுவே துன்புறுகிறார் என்று பொருளாகிறது. எனவேதான், துன்புறும் கிறித்தவர்களை ஆண்டவர்  இயேசுவின் முதல் முகம் என்கிறோம். அண்மைக் காலத்தில் வடஇந்தியாவில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கிறித்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இத்தாக்குதலில் துன்புறுவது கிறித்தவர்களல்லர்; மாறாக, இயேசு ஆண்டவர்தாம் என்பது புலனாகிறது. கிறித்தவர்களின் கூட்டத்தைத் திரு அவை என்கிறோம். திரு அவைக்குக் கிறிஸ்துவின் மறையுடல் என்னும் ஓர் இறையியல் கருத்து உள்ளது. திரு அவைக்கு இயேசுவே தலையாக உள்ளார் (கொலோ 1:18). எனவேதான் கிறித்தவர்கள் துன்புறும்போது கிறிஸ்துவே துன்புறுகிறார். கிறித்தவர்கள் பிளவுபட்டிருக்கும் போதும் கிறிஸ்துவே பிளவுபட்டிருக்கிறார்.

இயேசுவின் இரண்டாவது முகம் - துன்புறும் மக்கள்

மத்தேயு நற்செய்தியாளர் உலக முடிவைப் பற்றி 25-ஆம் அதிகாரத்தில் எடுத்துரைக்கிறார். உலக முடிவின்போது மானிட மகன் உயிரோடிருப்பவர்களையும் இறந்தோரையும் தீர்ப்பிட வருவார். நல்லவர்கள் அவரது வலது பக்கம் நிற்பர். தீயவர்கள் அவரது இடது பக்கம் நிற்பர். நல்லவர்களைப் பார்த்து, “நான் பசியாக இருந்தேன், உணவு தந்தீர்கள்; தாகமாய் இருந்தேன், தண்ணீர் தந்தீர்கள்.....” என்றெல்லாம் கேட்பார். அப்பொழுது நல்லவர்கள், “ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாக இருந்தீர், உமக்கு உணவு அளித்தோம்? தாகமாய் இருந்தீர், தண்ணீர் தந்தோம்?.....” என்றெல்லாம் கேட்பார்கள் (மத் 25:31-46). அதற்கு மானிட மகன், “மிகச் சிறியவராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:40) எனப் பதில் கூறுவார். இக்கூற்றை ஆய்வு செய்கையில் இயேசு ஆண்டவரின் இரண்டாவது முகம், துன்புறும் மக்கள் எல்லாரும் ஆவர். துன்புறும் மக்கள் சாதி, மதம், இனம், நாடு ஆகியவற்றையும் கடந்து நிற்கும் மக்களாவர். அத்தகைய துன்புறும் மக்களுக்கு உதவி செய்கின்றபோதெல்லாம் இயேசுவுக்கே உதவி செய்கிறோம். துன்புறும் மக்களைப் புறக்கணிக்கும் போதெல்லாம் இயேசுவையே புறக்கணிக்கிறோம்.

இயேசுவின் மூன்றாவது முகம் - இயற்கை

புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் ஆழ்ந்த கிறிஸ்தியல் இருக்கிறது. இப்பின்புலத்தில் புனித பவுல் கூறுகின்ற வார்த்தை நம்மை வியக்க வைக்கிறது: “இந்நாள் வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கிறது (உரோ 8:22).

இங்கே படைப்பு என்னும் வார்த்தை இயற்கையைச் சுட்டிக் காண்பிக்கிறது என்று பொருள் கொள்ளலாம் அல்லவா! அப்படியானால், இயற்கை சுரண்டப்படும் பொழுதெல்லாம் இயேசுவே சுரண்டப்படுகிறார் என்பதுதானே பொருள்! ஆகவேதான் இயேசு ஆண்டவரின் மூன்றாவது முகம் இயற்கை என்கிறோம். மேலும் புனித பவுல், “விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையும் கிறிஸ்துவின் தலைமையின் கீழ் ஒன்று சேர்க்கவேண்டும் (எபே 1:10) என மொழிகிறார். அதாவது, இயற்கையை அல்லது படைப்பு அனைத்தையும் கிறிஸ்துவில் ஒன்றுசேர்க்கவேண்டும் என்பதே கடவுளின் திட்டம் என்று உறுதியாக உரைக்கிறார்.

ஆகவே, இயற்கையை அழிக்கும்போது இயேசுவையே அழிக்கிறோம் என்பதுதானே பொருள்! இயற்கையை நிறைவுபெற விடாமல் அதனை அழித்து, கனிம வளங்களைக் கொள்ளையடித்து நாசம் செய்கிறோம். இது கடவுளுக்கு எதிரான துரோகச் செயலாகும். “நிலம் என்னுடையது; நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அந்நியரும் இரவற்குடிகளுமே (லேவி 25:23) என்கிறது திருவிவிலியம்.

மனிதர்கள் நிலத்தின் காவலாளிகள். கடவுள் மட்டுமே நிலத்தின் உரிமையாளர். எனவே, இயற்கையை அழிப்பது, சுரண்டுவது கடவுளுக்கு எதிரான பாவமாகும். இயற்கை ஆண்டவர் இயேசுவின் மூன்றாவது முகம்.

இயற்கையின் அம்சங்களாகிய நிலம், நீர், காற்று இவைகளை மாசுபடுத்தும் பொழுது இயேசுவையே மாசுபடுத்துகிறோம். ஆதலால் இயற்கையைப் பேணுவோம், பாதுகாப்போம். ஏனெனில், இயற்கையை அன்பு செய்வதே இறைப்பணியாகும்.