news-details
சிறப்புக்கட்டுரை
நம்பிக்கை மனத்தைச் சார்ந்தது! (உளவியல் பார்வையில் நம்பிக்கை)

நட்ட நடுராத்திரி. ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் உச்சக் குரலில் கூரையைப் பிய்க்கும் அளவில்கீங்....கீங்...கீங்...’ என்று அலறும் பச்சிளம் குழந்தை. உறக்கத்தின் உச்சத்திலிருந்த அந்தத் தாய் முதல் சத்தத்திலேயே விழித்து, ஏதோ அப்போதுதான் முதல் முறையாக குழந்தை அழுவதைக் கேட்பதுபோல பரபரப்போடு எழுந்து, குழந்தையை ஆரத்தழுவி, ‘கண்ணே மணியேஎன்று முத்தமிட்டு, குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் தாய் ஒருபுறம்.

இதே நிகழ்ச்சி மற்றொரு வீட்டிலும் அரங்கேறியதுகீங்....கீங்...கீங்...’ என்று அலறல். கேட்டும் கேட்காததுபோலதூங்கு, தூங்குஎன்ற கோபக்குரலில் தட்ட, இன்னும்கீங்...கீங்..கீங்...’ என்று குழந்தை உரக்கக் கத்த, எரிச்சலோடும் வெறுப்போடும் கோபக்கணைகளோடும், ‘சனியன் தூங்க விடாது; ஏன்தான் இப்படி இரவில் கத்துதோ? எனக்குன்னு வந்து வாய்ச்சதுஎன்று வேண்டா வெறுப்போடு குழந்தையைத் தூங்க வைத்த அந்தத் தாயின் கைகளில் இருக்கும் வேகம், தூக்குவதில் இருக்கும் சலிப்பு, அரவணைப்பில் இருக்கும் அவசரம். இந்த அனுபவம் தொடரும்போது...?

இந்த இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக வளரும் என எண்ணுகிறீர்கள்? முதல் குழந்தைதான் எனச் சொல்வீர்கள். அது சரியே. அந்த முதல் குழந்தை வளர வளர அந்தத் தாயின்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறது. ‘என் தேவைகளைச் சந்திக்க ஒருவர் உண்டு; அவர் என் தாய்; அவரே என் தாய்; நான் அழைத்தவுடன் அவள் ஓடி வருவாள்; எனக்காக எதையும் செய்வாள்; நான் பயப்படும்போது எனக்குத் துணையாவாள்; அவளின் மடிதான் உலகம்; அவளின் அரவணைப்பே சுகம்; அவளின் குரல் கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம்.’

இந்த உணர்வுகளோடு வளரும் குழந்தைக்குப் பாதுகாப்பான, சுதந்திரமான குடும்பச் சூழலை அமைத்துத் தருகிறது. இது மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தப் பாதுகாப்பான சூழலே தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் சுய மதிப்பையும் வளர்க்கின்றது.

இந்தக் குழந்தை தாய் அருகில் இருந்தாலும், தொலைவில் சென்றாலும், வெளியே போனாலும், உள்ளும் புறமும் நம்பிக்கையையும் பக்குவத்தையும் பெற்ற குழந்தையாய் வளரும். தேவையின்றி அழவோ, அடம்பிடிக்கவோ செய்யாமல் தன்னுடைய விளையாட்டைத் தொடரும். தன் தாயிடம் நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட குழந்தை, இப்போது தன் உறவு வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறது. தந்தை, உடன் பிறப்புகள், உடனிருக்கும் மற்றவர்கள் இவ்வாறு எல்லாரிடமும் தன் நம்பிக்கை வளையத்தை விரிவுபடுத்தியும் உறுதிப்படுத்தியும் கொள்கிறது. குடும்பத்திற்கு வெளியே உள்ள உறவுகளோடும், புதிய மனிதர்களோடும் தன்னுடைய வட்டத்தை இன்னும் விரிவாக்கிக் கொண்டே போகின்றது. இவை அனைத்தும் பிறந்த முதல் மூன்று வயதிற்குள் நடந்து முடியும்.

உறவு மற்றும் உலக அனுபவம்

இப்படித் தன்னைச் சுற்றியுள்ள உலகம் நம்பிக்கை தருவதாகவும் அன்புள்ளதாகவும் அரவணைப்பதாகவும் ஆதரிப்பதாகவும் தட்டிக் கொடுப்பதாகவும், அந்தக் குழந்தை உணர்கிறது. அதுவே அந்தக் குழந்தையின் நம்பிக்கையாக மாறுகிறது. அந்தக் குழந்தை பார்க்கின்ற மனிதர்கள், சமூகம், சுற்றம், உலகம், சிந்தனை, செயல், எண்ணம் எல்லாம் நேர்மறையாகவே அமையும்.

மாவிதையை விதைத்தால் மாமரம்தான் வளரும். ‘தாயைப்போலப் பிள்ளைஎன்பார்கள். இந்தக் குழந்தை எப்படித் தாயைப் போல மாறுகிறது? நேர்மறை உணர்வுகளோடு வாழும் ஒரு தாய், அதே உணர்வுகளை அந்தக் குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தையும் நேர்மறை உணர்வுகளை உள்வாங்கி நிறைவோடும் ஆரோக்கியத்தோடும் மகிழ்வோடும் வளரும். தாயிடம் கொண்ட நம்பிக்கை தனிமனித நம்பிக்கையாக உருவாகி, குடும்ப நம்பிக்கையாக மாறி, சமூக நம்பிக்கையாக வளர்ந்து, உலக நம்பிக்கையாகப் பரிணமிக்கும். இதுவே இறைநம்பிக்கைக்கு முதல் படியாக விளங்கும்.

இறைநம்பிக்கை என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. திடீரென்று முளைத்துக் கிளம்புவது அல்ல; அது விதைக்கப்படுகின்றது, வளர்க்கப்படுகின்றது, உருவாக்கப்படுகின்றது, நெறிப்படுத்தப்படுகின்றது. தாயிடமிருந்து கிடைக்கும் முதல் நம்பிக்கை அனுபவமே இறைநம்பிக்கைக்கு வித்தாக அமைகின்றது. எனவே, மனித வாழ்வில் நமக்குக் கிடைக்கும் அந்த முதல் நேர்மறை அனுபவமே நம்முடைய நம்பிக்கை வாழ்வுக்கு அடித்தளமாக அமைகின்றது. ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், இந்த மண்ணில் பிறக்கையிலே; அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலேஎன்ற ஆழமான வளர்ச்சி உளவியல் தத்துவத்தை அன்றே பாடிவிட்டார் ஒரு கவிஞர்.

இரண்டாம் நிகழ்வில் வந்த குழந்தையின் நிலை என்னவென்று பார்ப்போம். அந்தத் தாயின் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளான அந்தக் குழந்தை எதிர்மறை உணர்வுகளைத் தாயிடமிருந்து உள்வாங்கிக்கொள்கிறது. அதே உணர்வுகளோடு வளர்ந்து தன்னுடைய தந்தை, உடன்பிறப்புகள், சுற்றம், சமூகம், உலகம், இறைவன் என்று எல்லாரும் கெட்டவர்களாக, தனக்குத் தீங்கு விளைவிப்பவர்களாக அந்தக் குழந்தையின் கண்களுக்குத் தென்படும். இந்தக் குழந்தை அவநம்பிக்கை என்ற அனுபவத்தை முதன்முதலில் அந்தத் தாயிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதே அவநம்பிக்கை அனுபவத்தை உலகமும் இறைவனும் தருவதாக உணர்கின்றது.

ஒரு மனித வளர்ச்சிக்கு இரண்டு முக்கியக் காரணிகள் உள்ளன. ஒன்று, ‘இயற்கை; மற்றொன்று, ‘வாழும் சூழல்.’ இவை இரண்டும் நம்பிக்கை வாழ்விற்கு இன்றியமையாதவை. இயற்கை என்று கூறுகின்றபோது பெற்றோர்களின் அன்புறவினால் வெளிப்படும் உயிர் அணுக்கள் குழந்தையின் உருவாக்கத்திற்கு மூலதனமாக மாறுகின்றது. எனவேதான் பெற்றோரின் சாயல், நிறம், உருவம், உடலமைப்பு, குணாதிசயங்கள் இவற்றை உள்ளடக்கி குழந்தை உருவாகின்றது. ‘அவள் மூக்கும் முழியும் அப்படியே அவள் அப்பனை உரித்து வைத்திருக்கிறாள்என்ற கூற்று உறுதியாகின்றது. அதுபோல நீரிழிவு நோய், இதய நோய்கள், மன நோய்கள், நரம்பு சம்பந்தமான நோய்கள் எனப் பலவும் மரபணுக்களின் தாக்கமே. இதைப் பெற்றோர் தங்களின் எதிர்கால வாரிசுகளுக்கு வாரி வழங்கும் வாரிசுச் சொத்தாக மாறுகின்றது. இது இயற்கையின் நியதியாக விளங்குகின்றது.

வாழும் சூழல் மனிதனால் ஏற்படுத்தப்படுகின்றது. எனவே, மனிதன் அதை மாற்றியமைக்க முடியும். பெற்றோர், நண்பர், வீடு, சுற்றம் என நம்மைப் புடைசூழ இருப்பவர்கள் முறைப்படுத்தும் காரணிகளாக அமைந்துவிடுகின்றது. எடுத்துக்காட்டாக, ஆலயத்தின் பக்கத்திலே வாழும் ஒருவர் அல்லது நம்பிக்கை நிறைந்த பெற்றோருக்குப் பிறந்த ஒருவர் அல்லது மரணப் படுக்கையிலிருந்து மீண்டு புத்துணர்வோடு ஆன்மிக ஆழத்திற்குச் சென்ற ஒருவர் அல்லது சிக்கலும் சவாலும் நிறைந்த ஒரு வாழ்க்கைச் சூழலில் இறைவனை அடைக்கலமாகக் கொண்டு, தான் வேண்டியதைப் பெற்றுக் கொண்ட ஒருவர் எனப் பல்வேறு சமூக, குடும்பச் சூழல்களில் ஒருவரின் நம்பிக்கை உறுதி செய்யப்படுகின்றது.

கலப்புத் திருமணத்தில் வேறு சமயத்தைச் சார்ந்த தந்தை, தாய்க்குப் பிறக்கும் குழந்தை, புத்தி தெரிந்த பிறகு ஒருவித குழப்பச் சூழலுக்கு விடப்படலாம். எந்தச் சமயத்தைப் பின்பற்றுவது அல்லது பெற்றோர் குழந்தையை எந்தச் சமய முறையில் வளர்ப்பது என்ற முடிவை எடுக்காமலேயே வளரும். அந்தக் குழந்தை குழப்பச் சூழலில் வளரும். இந்த வாழும் சூழல் ஒருவித சமயச் சலிப்பை உண்டாக்கலாம்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்என்ற முதுமொழியைக் கேட்டிருப்போம். பல்வேறு குடும்பச் சூழல்களால் ஒரு குக்கிராமத்திற்குக் குடிபோகும் ஒரு பக்தியுள்ள குடும்பம், வழிபாட்டிற்கு அல்லது ஆலயத்திற்கோ செல்ல இயலாத ஒரு சூழலில், நாள்பட நாள்பட அவர்களிடம் நம்பிக்கையில் தொய்வு காணப்படலாம். காலப்போக்கில் அந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைக்குப் பக்தியும் நம்பிக்கையும் இயல்பாக வருவதில்லை. மேலும், மறையறிவு, சமய நெறிமுறைகள், வேத நூல், சமயக் கோட்பாடுகள் இவற்றில் உள்ள ஈடுபாடும் பங்கேற்பும் மிகக் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.

போர்வீரராகவோ, விமானப் பணியாளராகவோ, ஆழ்கடலில் மீன் பிடிப்பவராகவோ, வெளிநாட்டில் உழைப்பவராகவோ, சுரங்கத் தொழிலாளியாகவோ, கப்பல் பணியாளராகவோ, தீயணைப்பு வீரராகவோ மற்றும் பல்வேறு அபாயகரமான பணிகளில் ஈடுபடும் ஒருவர், பணி முடித்து வீடு திரும்பும் வரை உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வீட்டைக் கடந்து, கரையைக் கடந்து, உறவுகளைக் கடந்துச் செல்லும்போது அவர் எண்ணத்தில் மேலோங்கி இருப்பதெல்லாம், மீண்டும் கரை சேரும் வரை தன் உறவுகளை இறைவன் காத்திடவேண்டும் என்ற எதார்த்தமான, ஆழமான இறைநம்பிக்கையோடு பயணத்தைத் தொடங்குகிறார்.

இவ்வாறு நாம் வாழும் மற்றும் வளரும் பல்வேறு சமய, சமூகச் சூழல்கள் நம்மை நெறிப்படுத்தி, பக்குவப்படுத்தி நம்முடைய நம்பிக்கை வாழ்வையும், கடவுள்மீது உள்ள இறைநம்பிக்கையையும் உறுதிப்படுத்துகின்றது. ஆக, மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளான இயற்கையும் வாழும் சூழலும் நம்முடைய நம்பிக்கை வாழ்வுக்கும் வடிவம் தருகின்றது.