அமெரிக்காவின் கத்தோலிக்க அறக்கட்டளை (Catholic Charities USA) உறுப்பினர்களைச் சந்தித்தபோது, “ஏழைகள் மற்றும் தேவையிலுள்ளோர் மீது காட்டும் அக்கறை, உண்மையான கிறித்தவ வாழ்வின் ஒரு முக்கியப் பகுதி” என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். சவால்கள் நிறைந்த சூழலிலும் மனம் சோர்ந்து போகாமல் நற்செய்திப் பணியைத் தொடரவேண்டும் என்று திருத்தந்தை அவர்களை ஊக்குவித்தார். போதிய நிதி ஆதாரங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சிலருக்கு நாம் விரும்பியபடி உதவ முடியாமல் போகும் தருணங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, “நானே எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்” என்ற இயேசுவின் வாக்குறுதியை நினைவுகூரவேண்டும் என்றார். மியாமி உயர் மறைமாவட்டத்தின் ‘பெட்ரோ பான்’ திட்டத்திற்கான நிதியை அமெரிக்க அரசு நிறுத்திய சூழலில் திருத்தந்தையின் இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது. துன்பப்படும் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதிலும், மனிதாபிமானமற்ற சூழல்களுக்குத் தீர்வு காண்பதிலும் கத்தோலிக்க நிறுவனங்களின் பணி பாராட்டுக்குரியது என அவர் புகழ்ந்தார்.