‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி
யாங்கண்ட தில் (குறள் 1071)
“மக்களைப் போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்தும் யாம் கண்டதில்லை” - மு.
வரதராசனார் உரை.
கயமை
மிக்க குணம் கொண்டோருக்கு என்று தனி அடையாளம் எதுவும் இல்லை. நாம் நாளும் சந்திக்கும் மனிதருக்குரிய உருவ ஒப்புமையே இவர்தம் அடையாளமாகும். கயமை எனும் தீக்குணம் உடையோருக்குத் தனி அடையாளமோ, உருவமோ இல்லாமையாதலால் மக்களில் நல்லவர் பலர் ஏமாந்தும் போகின்றனர், ஏமாற்றவும் படுகின்றனர்.
இவர்களில்
சிலர் அல்லது பலர் மக்களை ஆளும் தகுதியைப் பெற்று, ஆள்வோர் ஆகிவிடின், ஆளப்பெறும் மக்கள் நிலை என்னவாகும்? இவர்கள் தலைமை ஏற்கும் அரசின் போக்கில் ஒழுக்கம் (Morality) மற்றும்
அறம் (Ethics) பெறும்
இடம் என்ன? அறமற்ற அரசியல் கண்டு கவலையுற வேண்டிய அறக்காவலர்களாகிய குடிமக்களுள் பலரே ‘அரசியலில் இதுவெல்லாம் சாதாரணமப்பா’ என்று
நகைச்சுவையாகப் பேசி நகர்ந்து போகின்றனர்.
எது
சாதாரணம்? நூறு கோடி மக்களின் வாழ்விற்கு மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, அனைத்து அறவழியும் துறந்து, வாக்கு எனும் அனுமதி பெற்று, நியாயமாக ஆட்சிக்கு வந்தோமென்று காட்டிக் கொண்டு செய்யும் அடாவடிகள் அனைத்தும் அரசியல் சாதாரணங்களாகிவிட்டமையை நாம் சந்தித்து வருகிறோமே! தொழில்நுட்பப் பெருவளர்ச்சியில் அனைத்துமே நம் சமையல் அறைகளையும், படுக்கை அறைகளையும் எட்டிவிட்ட நிலையிலும், அனைத்துச் செய்திகளையும் விமர்சனப்பூர்வமாகப் பார்க்கின்ற அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்ட நிலையிலும், அனைத்து ஒழுக்க மீறல்களையும், அறம் அழிந்த இழிசெயல்களையும் சாதாரணமென்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை என்னவென்று கூறுவது? ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்று
குழந்தைப் பருவ வகுப்புகளில் பாடமாகக் கற்ற நம் சமூகம், சாதாரணத்தை எப்படி ஏற்றுக்கொள்கிறது?
தமிழ்நாடு
ஒரு தேர்தலைச் சந்தித்து, புதிய மாநில அரசையும் கண்டுள்ளது. புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்குமுன் வீழ்த்தப்பட்ட தி.மு.க.
எனும் கட்சியை ‘தீய சக்தி’ என்று வாய் கூசாது வசை பாடியது. இக்கட்சி ‘கண்டுகொள்ளவில்லை’ என்ற
சாட்டப்பட்ட தேசியக் கட்சியையும், அதனோடு பொருந்தாக் கூட்டணி வைத்துக் கொண்ட ஒரு திராவிடக் கட்சியும் இவர் பெயர் சொல்லி அடையாளப்படுத்தவே இல்லையே!
கட்சியளவில்
பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லாதபோது, தீய சக்தியோடு அணி சேர்ந்த கட்சிகளைத் துணைக்கு அழைத்தபோது, சாதாரணமாகிப் போனது எது? மதச்சார்பற்றக் கூட்டணி அமைத்து, கூட்டு சேர்ந்த கட்சிகளின் உழைப்பினால் பெற்ற வெற்றியின் வீரம் காயுமுன்னே, கூட்டணிக் கட்சியின் தலைமைக்கு நன்றிகூட சொல்லாமல், விரைவாகக் கூடி தீர்மானம் ஒன்றினை எடுத்து த.வெ.க.
கட்சிக்கு ஆதரவு கொடுத்த தேசியக் கட்சியின் செயல் மக்களுக்குத் தரும் செய்தி என்ன?
அரசியல்
யுக்தியுள் ஒரு நேர்மையும் அறக்கோட்பாடும் வேண்டாமா? இக்கூட்டணியில் இடம்பெறும் ஏனைய மதச்சார்பற்றக் கட்சிகள் ஒரு கொள்கை நோக்கில் எடுத்த முடிவை நாம் பாராட்டவேண்டும். புதிய ஆளும் கட்சியின் பலவீனத்தை ஆதாயமாக்கி, வழக்கம் போல் கபளிகரம் செய்வதில் பெரு வல்லமை பெற்ற இந்திய மதப் பெரும்பான்மைவாதக் கட்சி ஏற்படுத்திய அச்ச உணர்வும் இதற்குக் காரணமாயிருக்கலாம். எப்படியோ, எங்கோ ஓரிடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளும் நடப்பதுண்டு.
‘நாசி’யின் ஹிட்லரின் பாணியில் இந்திய அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரசியலின்
உள்ளடக்கமே ஒதுக்கலும் (நஒஉடரளiடிn), ஒடுக்கலுமே (exclusion). ஒன்றிய அரசின் அனைத்து ஆளும் முறைகளிலும் (Governance) இப்போக்கை
மிக வெளிப்படையாகவே பார்க்க முடியும். அண்மையில் மாநிலத் தேர்தல்களில் இப்பெரும்பான்மைவாத அரசு ஒழுக்கம், அரச நீதிக்கு மாறாக தேர்தல் ஆணையத்தைக் கையகப்படுத்தி, பொய்யான வெற்றி பெற்றதைப் பார்க்க முடிந்தது.
வங்க
மாநிலத் தேர்தலில் ‘ஊடுருவலாளர்களை ஒழிப்போம்’
(Infiltrators) என்ற
முழக்கத்தை முன்வைத்து
திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையைப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தீவிரமாக முன்னெடுத்து, அதில் வெற்றியும் கண்டனர். இந்நாட்டில் பிறந்து, குடிமக்களாக மாறிப்போன இசுலாமியரை ‘ஊடுருவலாளர்’ என்று
கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துதல் அறவழி அரசியலா?
கொள்கை
ரீதியாக எதிரியாக முத்திரை குத்தப்பட்ட வங்கத்தில் பொதுவுடைமை இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், கோல்வால்க்கரால் மற்றோர் உள்நாட்டு எதிர்சக்திகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்ட இசுலாம், இம்மதம் சார்ந்த இசுலாமியர், இவர்களைத் தேச வரைபடத்திலிருந்தே அகற்றிவிடும் நோக்கில் வாக்குரிமை சிறப்புச் சீர்திருத்தச் சட்டம் (SIR) என்ற
பெயரில் கொணரப்பட்ட ஒரு புது ஆயுதம் மூலம் அகற்றப்பட்டனர்.
நியாயமான
வாக்காளர் பலரைத் திட்டமிட்டு நீக்கிவிட்டு நடத்தப்படும் தேர்தலை, இத்தகைய அரசியலை நடத்துவோரை எப்படி அழைப்பது? அசாம் மாநிலத்தில் ‘மியாக்களை ஒழிப்போம்’
என்ற அசிங்கமான முழக்கத்தில் உள்ளடங்குவோர் யார் தெரியுமா? என்.ஆர்.சி. என்ற பெயரில் குடியுரிமை மறுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக எவ்விதத்
தீர்வுமின்றி அரசமைத்த முகாம்களில் அடைபட்டுக் கிடப்போர் யார்? குடும்பங்கள் சிதைக்கப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்வோர் யார் தெரியுமா?
தேர்தல்
களத்தில் வாக்குகளைத் திருடுதல் ஒரு
பக்கம்; மற்றொரு பக்கம் அந்நியர் அல்லது ஊடுருவலாளர் என்ற பொய்யான குற்றச்சாட்டில் அவமதித்தல். ‘குடியரசு’
என்ற பெருமையை வைத்துக்கொண்டு, குடியரசின் காவலராகிய குடிமக்களின் ஒரு
பகுதியினரை அவமானப்படுத்துவது கடுமையான மனித உரிமை மீறல் இல்லையா?
மனித
உரிமைகள் காக்கப்பெறாத சமூகத்தில் சனநாயகம் மிளிராது. சனநாயகமும் மனித உரிமைகளும் இணைந்தேதான் பயணிக்க முடியும். மனித உரிமைகள் இயல்பானவை (Inherent). இவ்வியல்பான,
இயற்கையான உரிமைகளைக் காக்கும் உத்தரவாதத்தில்தான் சனநாயக அரசு இயங்க முடியும்.
வாழும்
சுதந்திரம், சுயமரியாதை, சமத்துவம் என்பன வெறும் வெற்றுச் சொற்கள் அல்ல; அவை மானுடரின் உள்ளார்ந்த உரிமைகள். இந்த உரிமைகள் பறிக்க முடியாதவை, பிரிக்கவும் முடியாதவை. மனித உரிமைகளுள் முக்கிய உள்ளீடுகளான இவை பறிக்கப்படுகின்ற போதெல்லாம் அல்லது மீறப்படுகின்ற போதெல்லாம்
(Violation), மீறலுக்குள்ளாகின்ற
நபர் அல்லது குழு அவமானப்படுத்தப்படுகின்றது.
சமத்துவ
உரிமை பெற்ற மானுடம் அல்லது குடிமக்கள் சாதி, மதம், இனம், மொழி எனும் அடையாளங்களின் பெயரால் பாகுபடுத்தப்படுகின்றபோது மனிதம் மீறப்படுகின்றது. மனிதநேயம் கேள்விக்குள்ளாகிற அரசியல் நோக்கில் மனித உரிமைகள் மீறப்படுகின்றபோது அரசியல் அறம் வீழ்ந்துபோகிறது.
அரசியல்
அற வீழ்ச்சியென்பது, ஆளும் வர்க்கத்தால் நாளும் மீறப்படுகின்ற உரிமைகளின் வெளிப்பாடுகளே. இந்தியா ஒரு வர்ணச் சமூகம் மட்டுமல்ல, வர்க்கச் சமூகமும் கூட. வர்க்கம், வர்ணம் இரண்டும் சேர்ந்து மனித உரிமை மீறல்களை நிகழ்த்துகின்றபோது, அது அமைப்பு ரீதியான மீறலாகிறது.
இந்த
அமைப்பு ரீதியான மீறல்களை நம் நாட்டில் ‘பாரம்பரியம்’ என்ற
பெயரிலும், ‘பண்பாடு’ என்ற பெயரிலும், தற்போது இந்துத்துவர்கள் மொழி மற்றும் தேசியத்தின் அடிப்படையிலும் மீறுகின்றனர். தேசியம் இன ரீதியாகக் கட்டமைக்கப்படுகையில்
அல்லது மதப் பெரும்பான்மையில் கேள்வி கேட்போர் தேசத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்படுகின்றனர்.
தேசப்பாதுகாப்பு என்ற பெயரில்
ஆளும் வர்க்கத்தால் இயற்றப்படும் கறுப்புச்
சட்டங்கள் அறவழிப்பட்டதல்ல.
இந்திய
அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதச்சிறுபான்மையினராம் இசுலாமியரைப் பாகுபடுத்தும் ஒரு சட்டம். ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தோரை வெளிப்படையாக ஆதரிக்கும் ஓர் அரசாயினும் அல்லது தனிநபராயினும் இச்செயல் கயமைத்தனத்திற்குள் அடங்காதா?
டெல்லி
கலவரத்தைச் சுட்டிக்காட்டி கைது செய்யப்பட்ட உமர் காயத் ஐந்து வருடமாக விசாரணைக் கைதியாகச் சிறையில் வாடுவதையும், நீதி வழங்கவேண்டிய நீதிமன்றம் நீதி வழங்க மறுத்தலுக்கும் என்ன காரணம்?
அரசியல்
ரீதியாக உருவாகியுள்ள எதேச்சதிகார அரசுகள் அப்பட்டமாக முன்னெடுக்கும் அரசியல் முன்னெடுப்புகள், தந்திரங்கள், மானுடரின் உள்ளார்ந்த மாண்புகளுக்கு எதிராகச் செயல்படும் போது அதன் உள்ளடக்கம் கயமையே. ஒன்றிய
அரசின் ‘வளர்ச்சி’
என்னும் முழக்கம் வெறும் பொய் முழக்கமே! ஒன்றிய அரசு விடாப்பிடியாய் நடைமுறைப்படுத்த முயலும் தொழிலாளர் சட்டங்கள், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தி வந்த உளவுக்கான உரிமையும் வேலைக்கான உரிமையும் பறிக்கப்பட்ட தன்மையுள் அடங்கியிருப்பதும் கயமைத்தனமே.
சமூக-அரசியல் மற்றும் பண்பாட்டுத்தளத்தில் ஒருவர் மற்றொருவர்மீது, ஒரு சமூகம் மற்றுமொரு சமூகம் மீது, ஓர் அரசு தனி மனிதர் அல்லது சமூகத்தின்மீது வன்முறைகளை ஏவுவதும், அவ்வன்முறை கண்டும் காணாதிருப்பதும் கயமைத்தனமே. இக்கயமையை ஆற்றுவோர் எலும்பும் சதையுமுடைய மனிதர்களே. மனித சாயலுடையதே.
எனவேதான்
மக்களைப் போல்வர் கயவர். எச்சரிக்கை!