news-details
சிறப்புக்கட்டுரை
வாய்ப்பா? சவாலா? (இளமை ஒரு சவால்! - புதிய தொடர் – 01)

முனைவர் மி. நோயல் அவர்கள் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வு நிறுவனத்தில் (CECRI) முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். மின்வேதியியல் துறையில் ஒரு நூலையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் உலக அளவில் வழங்கியதோடு, பல மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். மேலும், இவர் அறிவியல் செய்திகளையும், அறிவியல் சிந்தனைகளையும் தமிழ் மக்களிடையே கொண்டு செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழில் 20-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் வழிகாட்டுதல் நூல்களை எழுதி, தமிழ் அறிவியல் இலக்கிய உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். தற்போது நமதுநம் வாழ்வுஇதழில், இளையோருக்காகஇளமை ஒரு சவால்எனும் புதிய தொடர் கட்டுரையை எழுத முன்வந்துள்ளார். பன்முகத் திறமை கொண்ட முனைவர் மி. நோயல் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறோம்.                                                            

முதன்மை ஆசிரியர்

இன்றைய இளமை ஓர் அருமையான வாய்ப்பா? சவால்கள் நிறைந்த ஒரு வாழ்க்கைப் போராட்டமா? இந்தக் கேள்விகளுக்கான விடை - அதை நாம் யாரிடம் கேட்கிறோம்? என்பதைப் பொறுத்தது.

பழைய தலைமுறை, ‘அந்தக் காலத்தில் எங்களுக்கெல்லாம் என்ன வாய்ப்பு வசதி இருந்தது? பள்ளிக்கூடமா? போக்குவரத்தா? மின்சாரமா? தொலைக்காட்சியா? கைப்பேசியா? எங்களுக்கெல்லாம் கிடைக்காத எத்தனையோ வசதி வாய்ப்புகள் இன்று கிடைக்கின்றன. இன்றைய இளையோருக்கு என்ன? அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் அவர்கள் எவ்வளவோ சாதிக்கலாம்?’ என்று அலுத்துக்கொள்ளும்.

இதில் உண்மை இல்லாமல் இல்லை; அவர்களது எதிர்பார்ப்புகளும் நியாயமானவைதான். இன்றைய இளைய தலைமுறையினரும்கூட இன்றைய நல்வாய்ப்புகளை உணர்ந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையோடும் வளர்கிறார்கள். புதுப்புது உடையலங்காரம்சொகுசான வாகனங்கள், கைப்பேசிகள், அவற்றில் இடைவிடாமல் தொடரும் கலகலப்பான உரையாடல்கள், நாலுபேர் கூடுமிடத்தில் நடக்கும் ஆட்டம்பாட்டம், கொண்டாட்டம், விருந்து, வாணவேடிக்கை...!

இன்றைய இளைய தலைமுறையினரின் குதூகலத்திற்குக் கொஞ்சமும் தடை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால், இந்த வாய்ப்புகளைத் தாண்டி அவர்கள் சந்திக்கப்போகிற சவால்கள் அவர்களுடைய கவனத்தைத் தேவையான அளவு ஈர்த்திருக்கிறதா? அவற்றை எப்படி நாம் எதிர்கொள்ளப்போகிறோம்? அந்தச் சவால்களைச் சந்திக்க இன்று நாம் என்ன செய்யவேண்டும்? நம்மை நாமே எப்படித் தயாரித்துக்கொள்ளவேண்டும்?

இன்றைய வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால், நம் வருங்காலம் என்ன ஆகும்? முழுச் சந்தைமயமாகிவிட்ட உலகம் எப்படி நம்மை ஓரங்கட்டிவிட்டுப் போகும்?

பலர் தேய, சிலர் மட்டும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் உலகம் இது. இன்றைய போட்டிச்சூழலில் தள்ளாடும் பலரை நாம் தினமும் பார்க்கிறோம். வருங்காலத்தில் நாமும் இவர்களைப் போல் பரிதவிக்கப் போகிறோம். இல்லை... இல்லை... இன்றே நம் வருங்காலச் சவால்களைச் சந்திப்பதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோமா?

இன்றைய இளமை சந்திக்கும் சில சவால்களைப் பட்டியலிட்டுக்கொள்வோமா?

எல்லாவற்றையும் அவசரகதியில் அனுபவித்து விடவேண்டும் என்று முட்டிமோதிக்கொள்கிறோமா? நிதானம் காட்டுகிறோமா?

பெற்றோரின் துணையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நம் காலில் நிற்கப் பழகுகிறோமா? பெற்றோருக்குச் செல்லமான சுமையாக மாறிப்போகிறோமா?

பணம், வெற்றி என்ற நோக்கங்களை மட்டும் குறிவைத்து ஓடும் பந்தயக் குதிரைகளாக வளர்கிறோமா? மனித உறவுகளை மதிக்கும் வாழ்க்கைப் போட்டிக்கு நம்மைத் தயாரித்துக் கொள்கிறோமா?

நம் பருவப் பயணத்தில் எல்லைகளையும் கட்டுப்பாடுகளையும் மதிக்கப் பழகுகிறோமா? வெம்பிப் பழுத்து வீணாகும் கூட்டத்தில் கலந்து கரைந்து போகிறோமா?

கிடைக்கின்ற வேலைகளையும் வாய்ப்புகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, படிப்படியாக முன்னேற முயல்கிறோமா? அது சரியில்லை, இது சரியில்லை என்று புலம்பியே காலந்தள்ளப் போகிறோமா?

பணம், பதவி, உல்லாசம், உயரம் என்று ஓயாமல் உச்சாணிக் கொம்பை எட்டிப்பிடிக்க முயன்று வாழ்வைத் தொலைக்கப் போகிறோமா? உறவையும் வாழ்வையும் மதிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொள்ளப் போகிறோமா?

நம்முடைய வருங்கால வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து மற்றவர்களுக்குச் சுமையாக இருக்கப் போகிறதா? சுமைதாங்கியாக இருக்கப் போகிறதா?

நாளைய இலக்கை நோக்கி இன்றே நம் வாழ்க்கைப் பாதையைச் சீரமைக்க நம்மால் முடியும்நம்மால் மட்டும்தான் முடியும்! நாம் மாறப் போகிறோமா? பிடிவாதமாகச் சரிவுப் பாதையில் பயணிக்கப் போகிறோமா?

இந்த நம்முடைய இளமைச் சவால்களைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்திப்போம். தொடர்ந்து சிந்திப்போம்; வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சவால்களையும் கொண்டுவரும், வாய்ப்புகளையும் கொண்டுவரும். என் சவால்களைச் சந்திப்பேன்; வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவேன்.