news-details
சிறப்புக்கட்டுரை
மனிதக் குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல் (60-ஆம் உலகத் தகவல் தொடர்பு நாளுக்காகத் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் செய்தி)

சென்ற இதழ் தொடர்ச்சி...

இயன்றதோர் உடன்பாடு

நம் அனைவரையும் பாதிக்கும் கண்ணுக்குப் புலப்படாத எண்ணற்ற சக்திகளுக்குப் பின்னால், ஒருசில நிறுவனங்களின் தோற்றுநர்கள் மட்டுமே ‘2025-ஆம் ஆண்டின் மனிதர்கள்என்றும், செயற்கை நுண்ணறிவின் சிற்பிகள் என்றும் அறியப்படுகின்றனர். இது மிகவும் கவலைக்குரியதாகும். ஒரு சந்தையில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் (oligopolistic).

இவை மட்டுமே நெறிப்பாட்டு முறைகள்மீது (Algorithms) ஆதிக்கம் செலுத்தினால், நம்மையே அறியாமல் மனித நடத்தையையும், மனித வரலாற்றையும், திரு அவையின் வரலாற்றையும் மாற்றி எழுதக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். இந்நிலையில், புதிய எண்ணிமக் கண்டுபிடிப்புகளை நிறுத்துவது நமது பணியல்ல; மாறாக, இவற்றின் தெளிவற்ற நிலையை அறிந்து, அவற்றைச் சரியாக வழிநடத்துவதே நமது பணியாகும். மனிதர்களின் பாதுகாப்பிற்காகக் குரலெழுப்ப வேண்டியது நம் அனைவரின் கடமை. இதனால் நமது உடன் உழைப்பாளிகளாக இந்த எண்ணிமச் சாதனங்களை ஒருங்கிணைக்க முடியும். இந்த உடன்பாடு பொறுப்புடைமை, ஒத்துழைப்பு, பயிற்சி ஆகிய மூன்று தூண்களின்மீது எழுப்பப்படுவதாகும்.

முதலில் பொறுப்புடைமை

சமுதாயத்தில் நமக்குள்ள ஈடுபாட்டிற்கேற்ப பொறுப்புணர்வு என்பது நேர்மை, வெளிப்படைத் தன்மை, மனவலிமை, தொலைநோக்குப் பார்வை, அறிவைப் பகிர்ந்துகொள்ளும் கடமையுணர்வு, தகவல் அறிந்துகொள்ளும் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் நமது தனிப்பட்ட பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்க இயலாது என்ற பொது விதியைக் கடைப்பிடிப்பது இன்றியமையாதது.

இணையத்தின் பல்வேறு தளங்களில், அவற்றைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் தங்கள் இலாபத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தை மட்டும் கொண்டிராமல், ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொள்வதுபோல, பொதுநலனைப் பேணும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படவேண்டும். செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குபவர்களும் மேம்படுத்துபவர்களும் வெளிப்படைத் தன்மையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட அழைக்கப்படுகின்றனர். இதனால் தாம் உருவாக்கும் நெறிப்பாட்டு முறையின் மாதிரிகளுக்கும் அவற்றின் பயனாளிகளின் அறிவார்ந்த சம்மதத்தைப் பெற்றிருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அவசியம்.

மனித மாண்பைப் போற்றும் வகையில் நாடுகளின் சட்டமியற்றுவோரும், பன்னாட்டு ஒழுங்குமுறை அமைப்புகளும் பொறுப்புணர்வுடன் செயல்படுதல்வேண்டும். பொருத்தமான விதிமுறைசார் சட்டங்களை இயற்றுவதன் மூலம் தனி மனிதர்களைப் பாதுகாக்க இயலும். இதனால் பயனாளர்கள் தானியங்கி உரையாடிகளுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போதல் தடுக்கப்படவும், உண்மைக்குப் புறம்பான தீய வழிகளில் செலுத்தும் உள்ளடக்கங்களை நெறிப்படுத்தவும் இயலும். இதனால் தவறான, ஏமாற்றும் உருவகப்படுத்துதலையும் தவிர்க்கலாம். இவ்வாறு உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையைப் பாதுகாக்கலாம்.

ஊடகத் தொடர்பாடலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சில வினாடிகள் கூடுதலாகக் கவனத்தை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட நெறிப்பாட்டுமுறைகள் உண்மையைத் தேடுவதையே இலக்காகக் கொண்ட தொழில்சார் மதிப்பீடுகளை விஞ்சி நிற்க அனுமதிக்க இயலாது. கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் ஈடுபாடு கொள்வதைத் தேடாமல், ஒரு செயலைத் துல்லியமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செய்வதாலேயே பொதுநம்பிக்கை உருவாகும். மனிதர்கள் நேரடியாகத் தாமே உருவாக்கிய உள்ள டக்கத்தையும், செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட அல்லது கையாளப்பட்ட உள்ளடக்கத்தையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டவேண்டும். பத்திரிகையாளர் மற்றும் ஊடக உள்ளடக்கங்களை உருவாக்குவோரின் பணிகளில் படைப்பாளர் உரிமையும் இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். தகவல் என்பது ஒரு பொதுச்சொத்து. ஆக்கப்பூர்வமானதும் அர்த்தமுள்ளதுமான பொதுச் சேவை, தெளிவில்லாத மழுங்கல் தளமாக (Opacity) இருக்கமுடியாது. மாறாக, மூலங்களில் வெளிப்பாட்டுத் தன்மையைக் கொண்டதாகவும் உயர்ந்த தரமுடையதாகவும், இதில் தொடர்புடைய அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருத்தல்வேண்டும்.

இரண்டாவது ஒத்துழைப்பு

நாம் எல்லாருமே இப்பணிகளில் ஒத்துழைக்க அழைக்கப்பட்டுள்ளோம். எண்ணிமக் கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவின் நிர்வாகம் ஆகியவற்றின் சவால்களை எந்த ஒரு துறையும் தனியாகச் சமாளிக்க முடியாது. எனவே, இதற்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பங்கேற்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள், சட்டமியற்றுவோர், ஊடகக் கல்வியாளர், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகிய எல்லாரும் இணைந்து அறிவு சார்ந்த, பொறுப்புள்ள எண்ணிமக் குடிமக்களை உருவாக்கப் பாடுபடவேண்டும்.

மூன்றாவதாக ஊடகக் கல்வி

சிறந்த ஊடகக் கல்வி பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டிருத்தல் அவசியம்:

விமர்சன ரீதியான சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தல்.

உள்ளடக்கத்தின் மூலங்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துதல்.

கிடைக்கும் தகவல்களைத் தேர்ந்தெடுத்தலுக்கான உள்நோக்கங்கள் ஏதேனும் உள்ளனவா என்று அறிந்து மதிப்பீடு செய்தல்.

இதில் ஈடுபட்டுள்ள உளவியல் நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல்.

நமது குடும்பங்கள், குழுக்கள், கழகங்கள், எண்ணிம ஊடகங்களைப் பயன்படுத்துவது பற்றிய பொறுப்புள்ள தகவல்தொடர்பு கலாச்சாரத்தை உருவாக்குதல்.

மேற்கூறியவற்றை அடைய நமது கல்வித் திட்டத்தில் எல்லா நிலைகளிலும் ஊடகக் கல்வி, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி ஆகியவற்றைச் சேர்ப்பது மிகவும் அவசியமும் அவசரமுமாகும். சில பொதுநிறுவனங்கள் இதனைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்கக் கிறித்தவர்கள் என்ற முறையில் நாம் இம்முயற்சிக்குப் பங்களிப்பது மிக முக்கியமான கடமையாகும். இதனால் தனி மனிதர்களும், குறிப்பாக இளைஞர்களும், விமர்சன உணர்வுடன் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொண்டு, சுதந்திரமாக முடிவெடுக்கும் ஆற்றலில் வளரவும் இந்த ஊடகக் கல்விசார் முயற்சிகள் வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு கல்வி முன்னெடுப்பாக மாறவேண்டும்.

இப்பயிற்சிகள் வயதுவந்தோருக்கும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படவேண்டும். இதனால் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்து இவர்கள் பின்தங்கிவிடாமலும் விடுபட்டுப் போகாமலும் இருக்க வாய்ப்புகள் உருவாகும்.

ஊடக அறிவு, தகவல் அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்வி ஆகியவை செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளால் மனிதர்களின் தனிப்பண்புகளைப் பிற உயிரினங்கள் அல்லது உயிரற்ற பொருள்கள்மீது சாற்றிக் கூறும் மனிதப் பண்பேற்றல் (anthropomorphizing) என்ற செயல்முறைகளுக்கு ஒத்துப்போகும் போக்கைத் தவிர்க்கப் பெரிதும் உதவும். இதனால் துல்லியமற்றதும் தவறானதுமான செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளின் மூலங்களை இனங்கண்டு, அவற்றை வெளியிலிருந்து மதிப்பீடு செய்யவும் இக்கல்விப் பெரிதும் உதவும். இவ்வாறு செயற்கை நுண்ணறிவை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தும் ஆற்றலைப் பெறமுடியும். இக்கல்விமுறை ஒவ்வொருவரின் சிறந்த தனியுரிமையையும், அவர்களது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இதனால் ஒவ்வொருவரிலும் சிறந்த விழிப்புணர்வையும், பாதுகாப்புக்கான அளவீடுகளையும், மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகளையும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வர்.

செயற்கை நுண்ணறிவைத் திட்டமிட்டுப் பயன்படுத்த நாம் அனைவரும் அறிந்திருப்பது அவசியம். இவ்வாறு நமது சுய உருவத்தை அதாவது, நமது முகங்களையும் குரல்களையும் பாதுகாக்க முடியும். இதனால் நமது முகங்களையும் குரல்களையும் தவறான உள்ளடக்கங்களிலிருந்தும் தவறான நடத்தையிலிருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். இவ்வாறு மனிதர்களின் அனுமதியின்றி அவர்களின் தனியுரிமையில் ஊடுருவி அவர்களின் தனித்துவத்தைச் சீர்குலைக்கும் எண்ணிம மோசடிகள், இணைய மிரட்டல்கள், போலிப் பதிவுகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

தொழில்புரட்சிக்குப் பிறகு புதிய கண்டுபிடிப்புகளால் தோன்றிய புதிய வளர்ச்சிக்குப் பதிலளிக்க அடிப்படைக் கல்வி உதவியதுபோல, தற்போதைய எண்ணிமப் புரட்சிக்குப் பதிலளிக்க மனிதநேயக் கலாச்சாரக் கல்வியுடன், எண்ணிமக் கல்வியறிவும் தேவைப்படுகிறது. இதனால் நெறிப்பாட்டு முறைகள், நாம் உலகை எப்படிப் பார்க்கிறோம் என்பதையும், செயற்கை நுண்ணறிவுப் பணிகளை ஒருதலைப்பட்சமாகப் பார்க்கும் பண்பையும், நமது இடுகைகளில் உள்ள உள்ளடக்கங்களை எந்தத் தொழில்நுட்பம் நிர்ணயிக்கின்றது என்பதையும், செயற்கை நுண்ணறிவின் பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதையும், அவை எவ்வாறு மாறும் என்பதையும் அறிந்து செயல்பட இந்த எண்ணிம ஊடகக் கல்வி மிகவும் அவசியம்.

மக்களுக்காக நாம் மீண்டும் பேச நமக்கு முகங்களும் குரல்களும் தேவை. தொடர்பாடல் என்னும் கொடை, மனித இனத்தின் ஆழமான உண்மை என்பதைப் பேணுதல் அவசியம். எல்லாத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் இதை நோக்கியே செயல்படவேண்டும். இந்தச் சிந்தனைகளை வடிவமைக்கும்போது, மேற்கூறிய இலக்குகளை அடைய உழைக்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். பொதுநலனுக்காக ஊடகத்துறையில் உழைக்கும் அனைவருக்கும் ஆசி வழங்குகிறேன்.

(வத்திக்கானில் 2026 - ஆம் ஆண்டு சனவரி மாதம் 24-ஆம் நாள் சலேசு நகர் புனித பிரான்சிசின் நினைவுநாளில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் வழங்கப்பட்ட செய்தி)