news-details
உலக செய்திகள்
சஹேல் பகுதியில் அமைதி நிலவ திருத்தந்தை வேண்டுகோள்!

ஆப்பிரிக்காவின் சஹேல் (Sahel) பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைகளைக் கண்டு கவலையடைந்துள்ள திருத்தந்தை லியோ, அங்கு அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்த உலக நாடுகள் ஒன்றிணையவேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார். சாட் (Chad) மற்றும் மாலி (Mali) நாடுகளில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இறைவேண்டல் செய்ததுடன், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அன்பிற்குரிய நிலத்தில் உடனடியாக அமைதி திரும்பவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக அல்-கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழந்து வருகின்றனர். இராணுவப் புரட்சிகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இப்பகுதியின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள சூழலில், வன்முறையைக் கைவிட்டு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கவேண்டும் என்பதே திருத்தந்தையின் முதன்மையான வேண்டுகோளாக உள்ளது.