news-details
ஆன்மிகம்
சிமியோன் ஆண்டவரின் செயலுக்கு இணக்கமுள்ளவர்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 39

சிமியோன் கடவுளின் மறைபொருளான, அன்பான திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தனது நம்பிக்கையாளர்களின்மீது தூய ஆவியைப் பொழிகின்ற ஆண்டவரின் இரக்கமுள்ள செயலைத் தியானிக்க நம்மை அழைக்கின்றார்.

1. கோவிலில் இயேசுவைக் காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வை விவரிக்கும் நற்செய்தியாளர் லூக்கா, ‘இயேசுவே வரவிருக்கும் மீட்பர்என்கிற செய்தியை வலியுறுத்துகின்றார். லூக்கா நற்செய்தியைப் பொருத்தவரை பெத்லகேமில் இருந்து எருசலேமிற்கான திருக்குடும்பத்தினுடைய பயணத்தின் முதல் நோக்கம் திருச்சட்டத்தை நிறைவேற்றுவதாகும். “மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், ‘ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒரு சோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது (லூக் 2: 22-24).

இந்தச் செயலின் வழியாக மரியாவும் யோசேப்பும் கடவுளின் விருப்பத்திற்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து, அவர்களுக்கான எல்லா வகையான சலுகையையும் (privilege) மறுக்கும் தங்கள் நோக்கத்தைக் காட்டுகிறார்கள். எருசலேம் கோவிலுக்கு அவர்கள் வருவதென்பது, இறைவன் இருக்கும் இடத்திற்கு வந்து அவருக்கு அர்ப்பணிப்பு செய்வதை இலக்காகக் கொண்டிருந்தது. தனது வறுமையின் காரணமாக மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை வழங்கக் கடமைப்பட்ட மரியா, உண்மையில் பழைய சட்டத்தின் சடங்குகளில் முன்னுரைக்கப்பட்டதை முன்னதாகவே நிறைவேற்றும் விதமாக மனிதகுலத்தை மீட்கும் உண்மையான ஆட்டுக்குட்டியையே காணிக்கையாகக் கொடுக்கிறார்.

சிமியோன் தூய ஆவியாரால் உந்தப்பட்டார்

2. குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய்க்கு மட்டும் தூய்மைப்படுத்தும் சடங்கு தேவைப்பட்டதால் தூய லூக்கா நற்செய்தியாளர், ‘தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் (லூக் 2:22) பற்றிப் பேசுகிறார். இதன் வழியாக ஒருவேளை தாய் மற்றும் தலைப்பேறான மகன் இருவரையும் உள்ளடக்கிய கடமைகளை ஒன்றாகக் குறிப்பிட விரும்புகிறார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

 அன்னை மரியா தனி அருளால் (singular grace) நிரப்பப்பட்டதொரு தாய் மற்றும் அவர் பிறந்தது முதல் மாசற்றவராக இருந்தார். மேலும், அவரின் பிள்ளையாகிய இயேசுவும் முற்றிலும் புனிதமான நிலையில் இருந்ததாகவே குறிப்பிடப்படுவதால், இங்குதூய்மைப்படுத்துதல்என்ற வார்த்தை நம்மைச் சற்று ஆச்சரியப்படுத்தலாம். இருப்பினும், இது ஏதோ பாவக்கறையிலிருந்து மனசாட்சியைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு கேள்வி அல்ல; மாறாக, அந்தக்காலக் கருத்துகளின்படி இது எந்த விதமான குற்றத்தினாலும் இல்லாமல், பிறப்பால் களங்கமுறக்கூடிய சடங்குசார் தூய்மையை மீட்டெடுப்பதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தூய்மைச் சடங்கு பற்றி விவரிக்கும் நற்செய்தியாளர்தலைமகன் (first born) என்கிற சொல்லை (லூக் 2:7-23) இயேசுவுக்கும், கடவுளின் தூய்மைக்கும் இடையே உள்ள சிறப்புத் தொடர்பை வலியுறுத்தவும், மரியா மற்றும் யோசேப்பை ஊக்குவித்த அவர்களின் தாழ்மையான அர்ப்பணத்தைக் குறிப்பிடுவதற்கும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறார் (ஒப்பிடுக. லூக் 2:24). உண்மையில், ‘இரண்டு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகள் (லேவி 12:8) என்பவை ஏழைகளின் காணிக்கைகளாக இருந்தன.

3. யோசேப்பும் மரியாவும் கோவிலில், ‘நேர்மையான மற்றும்  இறைப்பற்றுக் கொண்ட, இஸ்ரயே லுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்த  (லூக் 2:25) சிமியோனைச் சந்தித்தனர்.

நற்செய்தியாளர் லூக்காவின் இவ்விவரிப்பு சிமியோனின் கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது கோவிலில் அவர் செய்த சேவையைப் பற்றியோ எதுவும் கூறவில்லை. அவ்விவரிப்பானது தனது இதயத்தில் பெரும் ஆசைகளை வளர்த்து, இஸ்ரயேலின் ஆறுதல் தரும் மீட்பருக்காகக் காத்திருந்த ஓர் ஆழ்ந்த இறையனுபவமுள்ள மனிதனைப் பற்றிக் கூறுகிறது. உண்மையில்தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்மற்றும்ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லைஎன்று தூய ஆவியாரால் உணர்த்தப்பட்டிருந்தார் (லூக் 2:25-26). இவ்வாறு ஆண்டவரின் புரிந்துகொள்ள இயலாத அன்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அவருடைய நம்பிக்கையின்மீது ஆவியைப் பொழியும் கடவுளின் இரக்கமுள்ள செயலைக் காண்பதற்குச் சிமியோன் நம்மை அழைக்கின்றார்.

கடவுளின் செயலுக்குத் திறந்த மனதுள்ள மனிதரான சிமியோன்ஆவியாரால் ஈர்க்கப்பட்டுஆலயத்திற்குச் செல்கிறார் (லூக் 2:27). அங்கு இயேசு, யோசேப்பு மற்றும் மரியாவைச் சந்திக்கிறார். குழந்தையைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர் (லூக் 2:29) என்று கூறுகின்றார்.

சிமியோன் பழைய ஏற்பாட்டின் சொற்றொடரைப் பயன்படுத்தி, மெசியாவைச் சந்தித்ததில் அவர் அனுபவித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், அவரது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறியதாக உணர்கிறார். எனவே, அடுத்த உலகத்திற்கு அமைதியாகப் போக அனுமதிக்குமாறு அவர் கடவுளிடம் கேட்கின்றார்.

மனுக்குல மீட்பரை மாபரனுக்கு அர்ப்பணிக்கும் யோசேப்புவும் மரியாவும்

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் அத்தியாயத்தில், மீட்பருடனான இஸ்ரயேலினுடைய நம்பிக்கையின் சந்திப்பைக் காணலாம். கிறிஸ்துவோடு மனிதன் சந்தித்ததற்கான இறைவாக்குரைக்கும் அடையாளத்தையும் நாம் இதில் காணலாம். தூய ஆவியானவர் மனித இதயத்தில் இந்த மீட்பின் சந்திப்பிற்கான ஆசையை எழுப்புவதன் மூலமும் அதைக் கொண்டு வருவதன் மூலமும் சாத்தியமாக்குகிறார்.

முதியவரான புனித சிமியோனிடம் குழந்தையைக் கொடுக்கும் மரியாவின் பங்கையும் இங்கு நாம் புறக்கணிக்க முடியாது. இறை விருப்பத்தினால் மரியாதான் மனிதகுலத்திற்கு இயேசுவை அர்ப்பணிக்கின்றார்.

4. மீட்பரின் எதிர்காலத்தை வெளிப்படுத்துவதில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் நாடுகளுக்கும் அனுப்பப்பட்டஊழியனாகநின்று சிமியோன் தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிடுகிறார். இறைவன் அவரிடம், “ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன் (எசா 42: 6) என்கிறார். மீண்டுமாக, “யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ! உலகம் முழுவதும் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன் (எசா 49: 6) என்றும் கூறுகின்றார்.

சிமியோன் தனது பாடலில், அவரின் தனிப்பட்ட எண்ண ஓட்டத்தை மாற்றியமைத்து, இயேசுவினுடைய பணியின் உலகளாவிய பொதுத் தன்மையை இவ்வாறு வலியுறுத்துகின்றார்: “மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை (லூக் 2:30-32).

இவ்வார்த்தைகள் குறித்து நாம் வியப்படையாமல் எப்படி இருக்க முடியும்? இதையே நற்செய்தியாளர் லூக்காவும் இவ்வாறு கூறுகின்றார்: “குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர் (லூக் 2: 33). ஆனால், இந்த அனுபவமானது யோசேப்பு மற்றும் மரியா இவர்கள் இருவருக்கும் அவர்கள் செய்த அர்ப்பணத்தின் முக்கியத்துவத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவியது: அதாவது, இறைவனுடைய மக்களின் மகிமையாக இருப்பவரும், மனிதகுலத்தின் மீட்பருமானவரையே அவர்கள் அர்ப்பணிக்கின்றனர்.

மூலம்: John Paul II, Simeon is open to the Lord’s action, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 18/25 December 1996, p. 9.