சிறுவயதில் திருவிழாக் கதைகளை பெற்றோர், உற்றார் கூற உற்றுக் கேட்போம். அதில் பிள்ளை பிடிப்பவர்கள் பற்றிய சுவையான தகவல்கள் உள்ளடக்கமாக இருக்கும். பிள்ளை பிடிப்பவர்கள் நம்மைப் போலவே இருப்பார்கள்; தனியே குழந்தைகளைக் கண்டால் சிரித்துப் பேசி தின்பண்டம் தருவார்கள். தின்பண்டமான அந்த மிட்டாய் அல்லது பிஸ்கெட்டில் மயக்க மருந்து தடவி இருக்குமாம். அதை உட்கொண்ட சிறுவர் அல்லது சிறுமியர் மயங்கி அவர்கள் பின் நடப்பர்களாம். மயக்கம் தெளியும் போது பிள்ளை பிடிப்பவன் அவர்களை நீண்ட தொலைவு அழைத்துச் சென்று விடுவானாம். சில புத்திசாலிக் குழந்தைகள் தப்பி வந்த கதைகளும் உள்ளன.
2026 தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தல் திருவிழாவிலும் பிள்ளை பிடிப்பவன் வந்தான். முதலில் பிள்ளைகளை மயக்கிப் பிடித்தான். பிள்ளைகள் வழி பெற்றோரைப் பிடித்தான். அப்பாவிப் பெற்றோரை வைத்து நாட்டையே பிடித்தான்.
ஒரு
கிராமத்தில் சிலை அபிசேகம் செய்ய பால் தேவைப்பட்டது. கோவில் நிர்வாகம் அறிவிப்புச் செய்தது. ஒரு தனி அறையில் பால் சேகரிக்கும் அண்டா வைக்கப்பட்டிருக்கும். அது மூடியுள்ள அண்டா. அதிலுள்ள ஒரு சிறு துவாரம் வழி மக்கள் பால் ஊற்றவேண்டும். மக்கள் வரிசையாக அறைக்குள் சென்று பால் ஊற்றினர். கோவில் நிர்வாகத்தினர் அண்டாவைத் திறந்து பார்த்தனர். அதில் பால் இல்லை. முழுவதும் தண்ணீர் இருந்தது. ‘எல்லாரும் பால் ஊற்றுவார்கள், நாம் அதில் தண்ணீர் ஊற்றினால் யாருக்குத் தெரியப்போகிறது?’ எனக் கிராம மக்கள் அனைவருமே தண்ணீரையே ஊற்றி விட்டார்கள்.
தேர்தல்
களம் 15% வாக்கு, மூன்றாமிடம்
என்ற கணிப்புகளால் நகர்ந்தது. களத்தை மாற்ற வேண்டும். இணைய வழி மறைமுகமாகப் பத்து ஆண்டுகளாகச் செய்த பிரச்சாரத்தை நேரடியாகவே செய்தனர். தேர்தல் களத்தில் சிறுவர்களைத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அது வேட்பாளரின் தகுதி இழப்பிற்கு உள்ளாக்குகிற குற்றம் என்கிறது சட்டம். வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரக் கடைசி நேரத்தில் ‘அழுது, அடம்பிடித்து எனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்’ என்ற
மூளைச்சலவை வெளியானது.
வெற்றிக்குப் பின்னும் நன்றி என்பதும் தேர்தல் விதிகளை மீறிய செயல்.
பாசக்காரத்
தாத்தா-பாட்டிகள், பெற்றோர் ‘தோற்கப் போகிறதே... நம் ஓர் ஓட்டு என்ன செய்து விடப் போகிறது?’ எனப் பாசம் காட்டினர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அண்டாவில் பால் ஊற்றிய கதையாக மாறிவிட்டது.
ஒரு
கட்சிக் கொள்கை, கட்சிக் கட்டமைப்பு, மக்கள் சந்திப்பு, மக்களுக்கான போராட்டங்கள், அடிப்படைக் கோட்பாடு,
பிரச்சாரம், வேட்பாளர் தகுதி, அறிமுகம் இல்லாமல் ஸ்மார்ட் போன் வழியே வெற்றிபெற முடியுமா? முடியும் என்பதாக, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வழி அறியலாம்.
வாருங்கள்...
தமிழ்நாடு தேர்தல் வெற்றி யின் பத்து ஆண்டுகால திரைமறைவு இணையப் பணிகளைக் காண்போம்; இந்தக் குற்றக் குழுக்களின் இரகசிய வழித்தடம் (Route mofia) குறித்து ஆய்வோம். இணையக் குற்றவாளிகள் முதலில் தங்களது குறி எந்த வயதினர் என முடிவு செய்கிறார்கள்.
முதலில் அவர்களின் விருப்பம் அறிந்துகொள்கிறார்கள்.
அதற்கேற்பப் பதிவுகளை உருவாக்குகிறார்கள். அவர்களை அடிமைப்படுத்துகிறார்கள்.
முதலில்
இவர்களைப் பழக்க ரஜினி, அஜித், சூர்யா என்ற நடிகர்களை எதிரிகளாக்கி இணையத்தில் யுத்தம் பழக்கினர். 30,000 வாட்ஸ்அப் குழுக்கள் இப்பணியைச் செவ்வனே செய்தனர். தினம் 150 பதிவுகள் வழி திசை நடத்தப்பட்டார்கள். இவர்களுக்குச் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமோ, தொலைக்காட்சி செய்திகள் பார்க்கும் பழக்கமோ இல்லை என்பதும் கண்கூடு. இக்கட்சியின் நிர்வாகி ஒருவர் எங்கள் பகுதியில் எமக்குத் தெரிந்தவராக உள்ளார். அவருக்கு அவரது வாட்ஸ்அப் குழுவில் வந்த ஒரு செய்தியைக் காட்டினார். அது எடப்பாடி தொகுதியில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு திருத்தம் செய்யப்பட்டு, நடிகர் கட்சி மற்றும் மாற்று வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற படப்பதிவு இருந்தது. இவர்களது முழுப்
பிரச்சாரமே இதே இரகமாக, உண்மைக்குப் புறம்பாகக் கட்டமைக்கப்பட்டது என்பது உண்மையானதே.
இவர்கள்
அமைச்சர்கள் முதல் பத்து பேரில் மூவர் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிப் பட்டறையில் பொய்ப் பிரச்சாரத்தில் மூழ்கிக் கிடந்தவர்கள் என்பதை நாடறியும். 2020, செப்டம்பர் 14-இல் உ.பி.யில்
ஹத்ரஸ் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தது. அப்பெண்ணின் நாக்கு அறுபட்டு, முழுமையாகப் பேச முடியாமல் பாதி நாக்கு அறுந்த நிலையில் ஒருவர் பேட்டி எடுத்து வெளியிட்டார்.
பேட்டியில்
அவரது முகம் முழுவதுமாகக் காட்டப்பட்டது. அந்த வீடியோவைத் தங்களுக்குச் சாதகமாக வெட்டி ஒட்டி இருந்தார்கள். “அந்தப் பெண் நன்றாகப் பேசுகிறார். நாக்கு அறுபடவில்லை, வன்புணர்வும் நடக்கவில்லை” என்று
டுவிட்டரில் பேசியவர் இன்றைய தமிழ்நாடு அமைச்சர். 20 ஆண்டுகளாக பா.ச.க.
பொய்ப்பிரச்சாரக் குழுத் தலைவர். மற்றோர் அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ். எஸ். கொள்கைப் பற்றை
வெளிப்படுத்திப் பேசுகிறார். அவரும் அமைச்சர். மூன்றாவது அமைச்சர். அவர் பா.ச.க.வின்
தேர்தல் வியூக உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரக் குழு பொறுப்பாளர்.
அரசியலை
அரசியலாக அணுகாத மாபியா கூட்டம் 6 மையங்கள் வழி 4000-க்கும் மேற்பட்ட இணைய பொய்க்கணக்குகளை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான இன்ப்ளூயன்சர்கள் எனக் கூலிக்கு மாரடிக்கும் கும்பலைக் களத்தில்
இறக்கிவிட்டார்கள். ஐந்து மாத காலம் ஏழு கோடித் தமிழர்களைக் குறிவைத்த சார்ட் வீடியோக்களை உருவாக்கினார்கள். பத்து இலட்சம் பார்வையாளர்கள் (மில்லியன்) எனக் குறிவைக்கப்பட்டு, உண்மைக்குப் புறம்பான
தகவல்கள் பதியப்பட்டன.
நமது
குழந்தைகள் கையிலிருந்து ஆண்ட்ராய்டு அலைப்பேசி வழி அவர்களது உணர்வுகள், விருப்பம், பயம், பரிதாபம் சென்டினல் டூல் (Sentinel Tool)
வழி படம் பிடிக்கப்பட்டது. அவர்களை ஒருதலைச்சார்பு பிணைப்பால் (Parasocial attachment) கதாநாயகப் பிம்பத்தை மோசடியாகக் குழந்தைகள் மனத்தில் விதைத்தனர். மூளைச்சலவை செய்தனர். ஒவ்வொரு குழந்தைகளின் மனத்திலும் பயத்தைத் திட்டமிட்டு உருவாக்கினர்.
அந்தப் பயத்தின் வழி வீடுகளில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
உலகில்
எல்லாமே தங்கள் கதாநாயகப் பிம்பத்திற்கு எதிராக நடக்கிறது. அப்படி ஏதாவது நடந்தால், நாம் நம் உயிரைக் கொடுத்து நம் அண்ணனைக் காப்போம் என்று குழந்தைகளின் மனநிலையை மாற்றிவிட்டனர்.
இந்த மாபியா கூட்டத்தின் இணைய ஏமாற்று வேலை (Psychological operation)
உண்மையான தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளது. கதாநாயகப் பிம்பம் கொண்டு அமைக்கப்பட்ட தூண்டில் முள் காட்சிகள் தேர்தல் களத்தை மாற்றியுள்ளது. பிள்ளை பிடிப்பவனின் படக்காட்சிகளைக் கட்டமைத்த
புராணக் கதைகளில் வரும் மாயக் குதிரை (Trojan horse) இணைய மென்பொருள் குழந்தைகளைப் போதை ஏற்றியது, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் மாறியது. தமிழ்நாடு அரசியல் மரபார்ந்த தன் அடிப்படை அருகதையை இழந்துவிட்டது.
எமது
நீலகிரி மாவட்ட நண்பர்
ஒருவர் கூறுகிறார்: “என் குழந்தைகள் இன்ஸ்டா பார்க்கிற அளவிற்கு எங்கள் செல்போன்
டவர்கள் வேலை செய்வதில்லை. ஆகவே, எங்கள் மாவட்டத்தில் எங்கும் ஆளும் கட்சி வெற்றிபெறவில்லை.” ஆம்,
நாமும் தேடிப் பார்த்தோம்... ஏற்காடு, வால்பாறை மற்றும் கொடைக்கானலிலும் ஆளும் கட்சி வெற்றி பெறவில்லை. நம் குழந்தைகளின் மனநிலை மாறி இருக்கிறது. அவர்கள் அலைப்பேசிக்கு அடிமையாக வாழ்கிறார்கள். அவர்கள் எதைப் பார்க்கிறார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டிய
கடமை நம்மைச் சார்ந்ததே. அதைக்
கட்டுப்படுத்த வேண்டிய தார்மிகப் பொறுப்பும் நமக்கு உள்ளது.