அரசியல் என்பது, அதிகாரத்தை நோக்கிய பயணம். தேர்தல் என்பது, ஆட்சி அதிகாரமேற்றும் படிக்கட்டுகள். வாக்குகள் என்பது எண்ணிக்கை சேர்ந்த விளையாட்டு. சில நேரங்களில் வேகமாகப் படி ஏறியவர்கள் உண்டு. பல நேரங்களில் சறுக்கி விழுவோரையும் கொண்டதே தேர்தல் அரசியல். அரிதினும் அரிதாக நினையாதவை நடக்கும் அதிசயங்களும் நிகழ்வதுண்டு. தேர்தல்களில் ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல; மூன்று!
2026-ஆம் ஆண்டின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியல், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டபின்
நடைபெற்ற தேர்தலாகும். 2025, அக்டோபர் 27 அன்று தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். 2026, பிப்ரவரி 23-இல் சிறப்புத் திருத்தத்தில் 97.37 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். இது விழுக்காட்டு
அடிப்படையில் 11.55% இது இந்திய
அளவில் அதிகபட்ச நீக்கம் எனத் தெரிகிறது. இதில் 27.53 இலட்சம் பேர் உரிமைகோரி மனு கொடுத்தனர். அதில் 4.23 இலட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. புதிய வாக்காளர் சேர்க்கையில் 18, 19 வயதினர் 12.51 இலட்சம்
பேர் சேர்க்கப்பட்டனர். பிப்ரவரி 2023 இறுதிப் பட்டியல்படி தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள்.
தேர்தல்
திருவிழா நடந்தது. 35 விழுக்காடு வாக்குகள் பெற்று த.வெ.க.
வெற்றி பெற்றது. தமிழ் நாட்டில் 108 தொகுதிகளில் முதலிடம். இரண்டாமிட வாக்கு வித்தியாசம் ஐந்து ஆயிரத்திற்குள் இருந்தது. ஐந்து ஆயிரத்திற்குள் 61 தொகுதிகளும், இரண்டு ஆயிரத்திற்குள் 27 தொகுதிகளும், ஆயிரத்திற்குகீழ் 15 தொகுதிகளும், 500-க்கு கீழ் ஒரு தொகுதியும் அமைந்தது. ஓர் ஓட்டு வித்தியாசத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முடிவு மாறியது.
சிவகங்கை
மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான (தொகுதி எண் 185) தபால் வாக்கு, திருப்பத்தூர் தொகுதி (தொகுதி எண் 50) திருப்பத்தூருக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி தொகுதி எண் பார்த்துத் தவறுதலாக வந்த வாக்கை நிராகரித்தார். தேர்தல் நடைமுறைகள் முடிந்தவுடன், தேர்தல் நடத்தும் அதிகாரியின் பணியும் முடிவுபெறும். ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்ற தி.மு.க.வின் மேனாள் அமைச்சர் பெரிய கருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். வெற்றி பெற்ற வேட்பாளர் சட்டமன்றத் தீர்மானங்களில் வாக்கு அளிக்க இடைக்காலத் தடையுடன் தீர்ப்பு வந்தது.
வழக்கு
உச்ச நீதிமன்றம் சென்றது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்ததுடன், தேர்தல் முறையீட்டு மனு மட்டுமே செய்ய இயலும்; இடையிட்டு ஆணை கோரும் மனு செய்ய முடியாது எனத் தீர்ப்பு எழுதப்பட்டது. மேலுமாக, அரசு ஊழியர்கள் த.வெ.க.வுக்கு மொத்தமாக வாக்களித்து விட்டார்கள் என்ற தகவலும் வழக்கம் போல் ‘ரூட் மாபியாவால்’ பரப்பப்பட்டன.
தற்போது தபால் வாக்குகள் தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களது வாக்குகள் மட்டுமல்ல, 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து, வீட்டிலேயே வாக்கு அளிக்கும் வாக்குகளும் தபால் வாக்குகளில் உள்ளடக்கம். இவ்வாக்குகளில் தமிழ்நாடு அளவில் தி.மு.க.
163 தொகுதிகளில் 47%
பெற்றது. அ.தி.மு.க. 46 தொகுதிகளில் 30%, த.வெ.க.
25 தொகுதிகளில் 12% பெற்றது என்பதை
அரசியல் விமர்சகர்கள் அறிவர். இது குறித்த முழு விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட மறுக்கிறது. ‘உள்ளாட்சி’
என்ற பத்திரிகை தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு தொகுதியாக ஆராய்ந்து இவ்முடிவுகளை வழங்கியுள்ளது.
தபால்
வாக்குகளைப் போலவே கட்டுத்தொகை (Deposit) குறித்த
முடிவுகள் அ.தி.மு.க.வை அதிர்ச்சிக்குத்
தள்ளியுள்ளது. 19 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், பா.ம.க. 2 தொகுதிகளிலும்,
பா.ச.க. 5 தொகுதிகளிலும்,
அ.ம.மு.க.
6 தொகுதிகளிலும், ‘நாம் தமிழர்’ போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற இயலவில்லை. அனைத்து வேட்பாளர்களும் கட்டுத்தொகைகளை இழந்தார்கள். தி.மு.க.
கூட்டணி மற்றும் த.வெ.க.
எல்லாத் தொகுதிகளிலும் கட்டுத்தொகை பெற்று சாதனை புரிந்தன.
2026 - தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தல் புள்ளி விவரங்கள் பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும்
முன்னிறுத்துகின்றன. தமிழ்நாட்டில் அதிகமான 79 வேட்பாளர்கள் போட்டியிட்ட கரூர் தொகுதியில் த.வெ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் பெருந்துயரச் சம்பவத்திற்கான நீதி கிடைக்கவில்லை. கரூர் மக்கள் அ.தி.மு.க.-விற்கு
வாக்களித்து விட்டார்கள்.
தமிழ்நாட்டில்
தாமரை 33 தொகுதிகளில் மலர முயற்சித்து, தனிநபர் செல்வாக்கால் ஒற்றைத் தாமரையாகப் பூத்தது. மோடியின் ஏழுமுறை வருகையும், ஆறு மாநில பா.ச.க.
முதல்வர்களின் பிரச்சாரமும் வீணாயிற்று. புதிதாகத்
தொடங்கப்பட்ட த.வெ.க.விடம் 2001 சட்டமன்றத் தேர்தல் ஒப்பீட்டின்படி தி.மு.க.
14% வாக்குகளை இழந்துள்ளது. அ.தி.மு.க. வாக்குகளில்
12.5%, ‘நாம் தமிழர்’
3% வாக்குகளும் இழந்து, அவை த.வெ.க.வுக்குத் திசைமாறியது. த.வெ.க.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்
வெற்றிக் கொடி நாட்டியது.
தமிழ்ச்
சமூகத்தில் பின்தங்கிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மக்களுக்காக 46 தொகுதிகள் தனித் தொகுதிகளாக உள்ளன. இவை தவிர நான்கு பொதுத் தொகுதிகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆக, மொத்தம் 50 தொகுதிகளில் கட்சி வாரியாக த.வெ.க.
28 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 11 தொகுதிகளிலும், தி.மு.க.
7 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓர் இடத்திலும், மார்க்சிய பொதுவுடைமைக்
கட்சி ஒரு தொகுதியிலும் வாகை சூடினார்கள்.
2026, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்கு மதச்சார்பற்றக் கூட்டணிக்கு என்ற போக்கு மாறியுள்ள உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இருப்பினும், 2021-2026 பேரவையில் இருந்த சிறுபான்மையோர் 15 என்ற எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கிறித்தவர்கள்
15 பேர் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சிவாரியாக த.வெ.க.வில் பத்து பேரும், தி.மு.க.
வில் 3 பேரும், அ.தி.மு.க.வில் ஒருவரும், காங்கிரஸ் கட்சியில் மூவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இசுலாமியர்
9 பேர்
சட்டப் பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். கட்சிவாரியாக த.வெ.க.வில் மூன்று
பேரும், தி.மு.க.வில் மூன்று பேரும், இந்திய யூனியன் முசுலிம் லீக்கில் இருவரும், காங்கிரஸ் கட்சியில் ஒருவரும் என்பதும் சிறுபான்மையோர் பங்கேற்பாகும்.
தேர்தல்
வாக்கு எண்ணிக்கை பரபரப்பு, மந்திரி சபை அமைப்பு
என்ற காலத்தில்
வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற பிரச்சினை பூதாகரமாய் கிளம்பியது. அவர்கள் போட்ட ரீல்ஸ், அதிரடி வெறுப்பு பேச்சுகள், சென்னை மற்றும் திருச்சி விமான நிலையக் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளால் முடித்து வைக்கப்பட்டது. கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, இந்தோனேசியா நாட்டை சார்ந்த 30 வெளிநாட்டுக் குடிமக்கள் இந்தியாவில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த
குற்றத்திற்காக வழக்கில் மாட்டினார். அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பயணங்கள் முடிவு பெற்றன. வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றபின் வாக்களிக்கக் கூடாது, இந்திய அரசின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை மீறல் தண்டனைக்குரிய குற்றமாகப் பதிவானது. அவர்களின் விரல்களில் தேர்தலின் போது வைக்கப்பட்டமையே அடிப்படை முதல் ஆதாரமானது.
2026, தேர்தல் புள்ளி
விவரங்களை ஆராயும் போது தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள், வேட்பாளரின் மதம் சார்ந்த விவரங்கள், கல்வித்தகுதிகள், சொத்து விவரங்கள், குற்றப் பின்னணிகள் என்பதில் தேர்தல் ஆணைய விவரங்கள்,
தரவுகள் வெளிப்படையாக இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த ஐயப்பாடுகளுக்கும் உரிய பதில்கள் இல்லை. முடிவில்
நம் நாட்டில் தேர்தல்கள் நியாயமாக நடக்கின்றனவா? என்ற அச்சமே எழுகிறது.