news-details
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக!

அவர் ஒளியில் இருப்பது போல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம் (1யோவா1:7).

ஒளி உள்ள இடத்தில் உண்மை நிலைக்கும். இறைவார்த்தையே உண்மை. இயேசுவே இதனைத்  தம் செபத்தில்  வெளிப்படுத்தியுள்ளார் (யோவா 17:17).

நம்பிக்கையாளர் ஒவ்வொருவரும் ஒளியாக இறைவார்த்தை காட்டும் வழியில் மட்டுமே நடப்பர் (திபா 119:105).

இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றதுஎன் காலடிக்கு உன் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவேஎன்ற இறைவார்த்தை.

நம் தலைவரும் மீட்பருமாகிய இயேசு ஆண்டவர் கூறுகிறார்: “நானே உலகில் ஒளி; என்னைப் பின்செல்பவர் இருளில் நடவார்; உயிரின் ஒளியைக் கொண்டிருப்பார்.”

பின்வரும் வார்த்தைகளில் இயேசு  நம்முடைய கடமையையும் உரிமையையும் உறுதிப்படுத்துகிறார்: “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்....” “உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க(மத் 5:14, 16).

இறைவனை முற்றிலும் சார்ந்து, உண்மையாம் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவரே ஒளியாகச் சுடர்விட முடியும். திருமுழுக்கின் கடமையை நிறைவேற்ற முடியும். இறைத்தந்தை கொடையாக வழங்கும் உரிமையை அனுபவிக்க முடியும்.

திருமுழுக்கின் கடமை என்ன? உரிமை என்ன? என்பதைத் தெளிவாக நாம் உணர்ந்து அறிந்திருந்தோம் என்றால், நம்பிக்கை நிறைந்த இறைத்தந்தையின் மக்கள் என்பதில் மகிழ்ந்து பெருமை கொள்வோம்.

எதிர்நோக்குடன் உடன் பயணிக்கும் நம்பிக்கையாளர்கள் அனைவருமே உடன்பிறப்புகள் என்ற உண்மையைக் கண்டுகொண்டு, அன்புறவில் வாழ்வோம், வளர்வோம்.

திருமுழுக்கின் முதல் கடமை, அனைத்திற்கும் மேலாக இறைவனின் பேரன்பை அனுபவித்து, அவர் விருப்பத்தை நிறைவேற்றும் அன்பு மக்களாக வாழ்ந்து நன்மை மட்டுமே செய்வது. இயேசுவின் சீடராக அவரைச் சார்ந்து வாழும் ஏழையர் உள்ளத்தினராக எளிய வாழ்க்கை வாழ்வேன் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ்வதுகத்தோலிக்கத் திரு அவையின் உண்மையான உறுப்பினர் எனத் தன் செயல்களின் மூலம் அனைத்து நம்பிக்கையாளர்களுடன் அன்புறவில் வாழ்வது. புனித பவுலடியார் கூறுவதுபோல் நம்மேல் சுமத்தப்பட்ட கடமை. இறைச்சமூகத்திலும்  இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களிடமும் நற்செய்தி அறிவிக்கும் பணியைச் சொல்லிலும் செயலிலும் முழுமையாக, பொறுப்பு நிறைந்த அர்ப்பண உணர்வுடன் செய்தல்.

 மறைத்தூதுப்பணி ஞாயிறு அன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் மறைத்தூதுப் பணிக்காகவும், மறைத்தூதுப் பணியாளர்களுக்காகவும் செபிப்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு நம்பிக்கையாளரின் கடமை என்பதைப் பொறுப்புடன் உணர்வோம்.

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர் (மாற்16:15). “உலகம் முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன் (மத் 28:20) என்ற இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துச் செயல்படுவோம். தந்தையாம் இறைவனை மாட்சிப்படுத்துவோம். தலைவராம்  இயேசுவின் சீடராவோம். தூய ஆவியாரால் இயக்கப்படுவோம்; இறையாட்சி மலர நம்மை அர்ப்பணிப்போம்.