news-details
கவிதை
கவிதைச் சாரல்

புன்னகை

நேர்மறை உணர்வின்

ஆயுதம்!

கோபம்

எதிர்மறை உணர்வின்

ஆரம்பம்!

உணர்வுகளின்

கூட்டுப் பலனே

ஆரோக்கியமான

உள்ளத்தின்

மொத்த எடை!

 

நீண்ட நாள்

புறக்கணிப்பும்

நெடுநாள்

உதாசீனங்களும்

மன்னிக்கப்படுவதில்லை!

வாழ்நாள் மன்னிப்பும்

நெடுநாள்

ஏற்புடைமையும்

என்றுமே

மறக்கப்படுவதில்லை!

 

வாழ்க்கை வசந்தம் தர

மறக்கும் போதெல்லாம்

ஏதோ ஒரு வானம்

நம்மீது நிழலிட்டு

நம்மைப் பதப்படுத்தித்தான்

போகிறது!

 

ஏழை வீட்டுக்

கூரையில் கரைகிறது காகம்!

உறவினர் வருகை

அங்கே இருக்காது

என்பதெல்லாம் காகத்திற்குத்

தெரியாதுதானே!

 

உடைத்து நொறுக்கப்பட

வேண்டிய பிம்பங்களே

முகங்கள்!

அதிலென்ன

பெருமையோ?

சிறுமையோ?

அகமோ?

ஆணவமோ?

ஆற்றுவாரில்லை!

ஆதலின்... கேளுங்கள்!

முகங்கள் முகவரியல்ல!

 

அடைக்க முடியாத

இரு கடன்கள்!

அம்மாவின்

பாசக்கடன்!

அப்பாவின்

வளர்த்த கடன்!

இறுதி வரைக்

கடன் உண்டு!

அடைத்திடக்

கடமை உண்டு!

 

கண்ணீரின்

கனத்தையும்

செந்நீரின்

இரணத்தையும்

அறிந்தவர்

கடவுள்.

கண்ணீரைக்

கணக்கில்

கொண்டு

தோள் பையில்

சேர்த்து வைத்துக்

கைம்மாறு

செய்பவர்

உன்னைக்

கைவிடுவாரோ?

 

இன்னும்

கடக்க வேண்டிய

தூரம்

ஏராளம்

என்று சொல்லி

மனத்தைத் 

தேற்றிக்கொண்டே

விடைபெறுகின்றன

அன்றைய

தொல்லைகள்!

அன்றைய

தொல்லை

அன்றைக்குப்

போதும்!

 

உனக்காகவே

வாழ்கிறேன்

என்பது

அன்பின் உச்சம்!

உங்களால்தான்

வாழ்கிறேன்

என்பது 

தர்மத்தின் உச்சம்!

முந்தையது

கொல்லும்!

பிந்தையது

வெல்லும்!