news-details
சிறப்புக்கட்டுரை
உருவாக்கப்பெறும் சங்கப் பரிவாரக் கிளை: அண்ணாமலை எனும் முகமூடி

இந்தியச் சனநாயகக் குடியரசின் பிரதம அமைச்சராக, பண்டிதர் நேருவைக் காட்டிலும் அதிகக் காலம் பதவிப் பெருமை பெற்றவராக மோடி புகழப் பெறுகின்ற காலம் இது. இம்மோடியின் இரு கரங்களாக உன்னதப் பணியாற்றி வருபவர் நம் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேற்கண்ட இருபெரும் அருந்தலைவர்களின் ஆசிபெற்று அல்லது அனுமதி பெற்று, மேற்கண்ட இருவரும் சார்ந்த அல்லது இவ்விருவரையும் ஆட்சியில் அமர்த்திய பாரதிய சனதா கட்சியிலிருந்து தமிழ்நாட்டின் மேனாள் பாரதிய சனதா கட்சித் தலைவர் மேற்படி கட்சியிலிருந்து விலகியுள்ளாராம்! இதுவரை கேள்விக்குட்படுத்தாமல் இவரைத் தாங்கிய கட்சியிலிருந்துதலைவர்களின் அனுமதியோடுவெளியே வந்திருக்கிறாராம்!

இப்போக்கு வரலாற்றில் கேள்விப்படாத ஒன்றில்லையா? இவர் வருகைக்குப்பின்தான் தமிழ்நாட்டில் பாரதிய சனதா பெரிய வளர்ச்சி கண்டதாம்! வெறும் மூன்று விழுக்காட்டில் நின்றிருந்த பாரதிய சனதாவைப் 11 விழுக்காட்டிற்கு உயர்த்திக்காட்டினாராம்! தமிழ்நாட்டு இளைஞர் கூட்டம் பா...வைப் பின் தொடர இவரே காரணமாம்! இவர் மேற்கொண்டஎன் மண், எம் மக்கள்நடைபயணத்தால் தமிழ்நாடே அதிர்ந்ததாம்! பா... புத்துயிர்ப்பு பெற்றிருந்ததாகவும் பாராட்டுகின்றனர். இத்தனை சிறப்பிற்கும் பெருமைக்கும் உரிய இவரைப் பா... உதறவில்லை; பா... இவரைக் கழட்டிவிடவும் இல்லை.

இத்தகைய அர்ப்பண உணர்வுமிக்க ஓர் இளந் தலைவரைப் பா... வெளியே அனுப்பாதபோது, பா... எனும் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பின்மீது, அதன் செயல்பாட்டின்மீது இக்கட்சியின் அடிப்படைக் கொள்கையான இந்துத்துவாமீது, மாறாத காதலும் பக்தியும் கொண்டிருந்த இந்த இளம் காவல்துறை அதிகாரி ஏன் வெளியே வருகிறார்? பாரதிய சனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கொண்டிருக்கும் எந்தக் கொள்கையையும் எப்போதும் விமர்சிக்கக்கூடத் திராணியற்ற இம்மனிதர், ‘பாரதிய சனதாவிலிருந்து வெளியேறுகிறேன்என்று அறிவிக்கிறார்.

பாரதிய சனதாவிலிருந்து அண்ணாமலை விலகியது குறித்து நமக்கு வேதனை எதுவுமில்லை. பாரதிய சனதா எனும் ஒரு கட்சி, வலுவான மதவாதச் சித்தாந்தத்தைக் கொண்டது என்பதும், இந்திய வர்ணச் சமூகக் கட்டமைப்பை எப்படியும் காக்கவேண்டிய உறுதியெடுத்த கட்சி என்பதும், இந்தியா விடுதலை பெற்றபோது இந்திய தேசியத் தலைவர்கள் ஒன்றுகூடி ஏற்றுக்கொண்டு அறிவித்த சனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை, இறையாண்மை எனும் மகோன்னதங்களை அண்ணாமலை உதறி வந்ததாகச் சொல்லப்பெறும் பாரதிய சனதா ஏற்காமல்; ஆனால், சனநாயகம் தந்த தேர்தல்வழி மதப் பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற்று, மதப்பெரும்பான்மைவாதம் (Majority) எனும் தீய கருத்தியல் கொண்டு ஆட்சிக் கட்டிலை அலங்கரித்து வரும் பா...வின் உண்மை முகத்தை I.P.S. பட்டம் பெற்ற அண்ணாமலை தெரியாமல் இருந்திருக்கிறார் என்று எவராவது கூறினால் நம்பிடலாமா? இது மிகப்பெரிய பொய்யல்லவா!

இவர் பாரதிய சனதாவிலிருந்து விலகினாரா?

அண்ணாமலை பாரதிய சனதாவிலிருந்து விலகிவிட்டாரா? பா...விலிருந்து விலகியதாகக் கூறப்படுவது ஒரு நாடகமே என்பதே உண்மையானால், இந்நாடகத்தின் உள்ளடக்கம்தான் என்ன?

நடந்து முடிந்த தேர்தல் பரப்புரையின்போது, .தி.மு.. கூட்டணியின் ஒரு சிறிய கூட்டுக் கட்சியான பா...வுக்குப் பரப்புரை மேற்கொண்ட போது, கட்சியின் உயர் பதவி எதுவும் வகிக்காத நிலையிலும், தமிழ்நாடு எங்கும் ஹெலிகாப்டரில் பயணம் செய்து பரப்புரை மேற்கொள்ளும் வாய்ப்பு இவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழ்நாட்டு ஊடகங்கள் அதிர்ந்து போயுள்ளதுபோல் பெரிய நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. மகாத்மாவின் மரணம், பண்டிதர் நேருவின் மறைவு இந்திய அரசியலில் ஏற்படுத்தி விடாத வெற்றிடம்போல், பெருந்தலைவர் காமராசரும், தந்தை பெரியாரும் மறைந்தபோது தமிழ்நாட்டு அரசியல் வானில் உருவாகாத வெறுமை போலல்லாமல், இன்று ஏதோ காரணம் பற்றி அரசுப் பதவி துறந்து, தமிழ்நாட்டு அரசியல் களம் புகுந்துபிரஸ் மீட்செய்துவந்த ஒரு முதிர்ச்சியற்ற இளைஞர், மக்களால் எப்போதுமே நிராகரிக்க வேண்டிய ஒரு கட்சியிலிருந்து, தான் நேசிக்கும் தலைவர்களின் அனுமதியோடு வெளியே வந்த ஒரு புனைச் செய்தியை தமிழ்நாட்டில் புகுத்தி, இச்செய்தியின் மூலம் தமிழ்நாடே அதிர்ந்துபோனதுபோல ஒரு பொய்யானப் பாவனையைக் கட்டமைக்கின்ற கபடத்தையும் பார்த்து வருகிறோம்.

பா...வின் புதிய நாடகம்

அண்ணாமலை பா...வைத் துறக்கவில்லை; அண்ணாமலை விலகினார் என்பது போன்ற நாடகத்தைச் சாதுரியமாக அரங்கேற்றி வருகிறது பா... அண்ணாமலை புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்த நொடியில் இலட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இன்றைய கணக்குப்படி பதினேழு இலட்சமாம்! அண்ணாமலை எனும் இளைய அரசியல் தலைவர், இத்தனை எண்ணிக்கையில் ஈர்க்கப்படுகிறார் என்பது உண்மையாயின் இது போற்றுதற்குரியது என்பதில் மறுப்பில்லை. அண்ணாமலை கட்சியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படும் நிலையில், ‘ஏன் வெளியேறினார்?’ என்பதற்கான காரணம் கூறவில்லை; ஏன் என்ற காரணத்தையும் கூறவில்லை என்பது மட்டுமல்லாமல், தான் உருவாக்கவிருக்கும் இயக்கத்தின் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பது பற்றியும் எதுவும் கூறவில்லை.

இயக்கத்தின் பெயரை அறிவித்த அண்ணாமலை, இயக்கத் தோழர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப்போவதாகவும் அறிவிக்கிறார். மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கை வழி இயக்கம் அமைவதாகக் கூறுகிறார்.

அப்துல் கலாம் நல்ல மனிதர்; சிறந்த அறிவியல் அறிஞர். அண்ணாமலை, தான் தெரிவுசெய்த இளையோருக்கு அளிக்கவிருக்கும் அரசியல் பயற்சியில் கலாம் அவர்களின் கொள்கை இடம்பெற வேண்டுமே?

அப்துல் கலாமின் அரசியல் நிலைப்பாடு என்ன? கலாம் என்ன அரசியல் பேசினார்? நல்ல மனிதராகிய கலாம், சமூகத்தில் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டு வரும் இசுலாமியர் பக்கம் இருந்ததே இல்லை. தனக்குக் கிடைத்த பதவி மூலம், தன்னைப் பழுதுபடாமல் பார்த்துக்கொண்டார். இந்துத்துவ அரசியலாருக்கு எப்போதுமே நியாயப்படுத்தும் சில முகமூடிகள் தேவைப்படும். இம்முகங்களில் தலித் ஒருவர் குடியரசுத் தலைவராக்கப்படுவார்; இவரைப் போல், ஒரு பழங்குடியினர் ஒருவர் அல்லது ஓர் இசுலாமியர் ஒருவர் முகமூடிகளாகக் காட்டப்பெறுவார். கலாம் அவர்களை இரண்டாம் முறையாக முன் மொழிந்தபோது, காங்கிரஸ் மறுத்த நிலையில் இந்துத்துவர்கள் கலாமை ஆதரிக்க மறுத்தமையை அரசியலாக்கியது. ஒரு கலாமை ஆதரித்து இசுலாமிய ஆதரவு நிலை எடுத்தது போலக் காட்டிக் கொண்ட இந்துத்துவர்களின் போலி அரசியலை அனைவரும் அறிவர். கலாமின் கொள்கைகளைத் தூக்கிச் சுமப்பதாகக் காட்டிக் கொள்ளும் நாடகத்தைப் புரிந்துகொள்வோம்.

ஒன்றியத்தை ஆளும் கட்சிகள் மாநில மொழியைப் புரிந்து கொள்வதில்லையென்ற ஒரு சொற்றொடர் மூலம் இவர் காட்ட விரும்புவது என்ன? தமிழ்நாடு பேசிய திராவிடத்தை, திராவிடம் பேசிய தமிழ்த் தேசியம், மாநிலச் சுயாட்சி, தமிழ்ப் பாரம்பரியம் ஆகியவை இவரின் அரசியல் பேச்சுகளில் (Discourse) என்றுமே இடம்பெற்றதில்லைகோவையை மையமாகக் கொண்டு இவர் ஆற்றிய சிறுபான்மை வெறுப்பரசியலை வரலாறு மறக்குமா? கோவையில்சிலிண்டர் வெடிப்புஎன்ற பெயரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின்போது எவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொண்டார் என்பதை யார் மறக்க இயலும்?

எப்படி மறக்க முடியும்?

தமிழ்நாட்டுக் கிறித்தவர் மட்டுமல்லாமல், மனித உரிமைகள்மீது அக்கறை கொண்ட எவராலும் மறக்க இயலாத நிகழ்வொன்றை இங்கு நினைவுபடுத்துதல் இவரை யாரென்று காட்ட துணை போகலாம். கும்பகோணம் மறைமாவட்டத்தின் மிக்கேல்பட்டி கிராமத்து கத்தோலிக்கப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யாவின் மரணத்திற்குக் கட்டாய மதமாற்றமே காரணம் என்று எழுப்பப்பட்ட பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியவர் இந்த அண்ணாமலை. பொய்வழக்குத் தொடுத்து சிறைவைக்கப்பட்ட அருள்சகோதரி அனுபவித்த கொடுமைகள் பல. கபடமாய், மதமாற்ற நெருக்குதலால் ஏற்பட்ட மரணமே என்று பொய்யுரைத்து, இவ்வழக்கை சி.பி.. விசாரிக்கவேண்டும் என்று வற்புறுத்தியவர் இவர். மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தந்தவிசனப்படும் விந்தை தீர்ப்பும் (நீதியரசர் சந்துரு) இப்பிரச்சினையுள் அடக்கம்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரித்து, லாவண்யா மரணத்தில் மதமாற்றம் காரணமில்லை என்ற தீர்ப்பு தரப்பட்டு பல மாதங்களாகியும், அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கோரவில்லை.

அண்ணாமலை எனும் காவல்துறை உயர் அதிகாரி பா...வின் உறுப்பினராகும் முன்னே அதன் விசுவாசியாகிவிட்டார் என்பதே உண்மை. இன்று புதிதாக உருவெடுத்துள்ள .வெ.. எனும் சக்தியை அண்ணாமலை போன்ற ஒருவரால் எதிர்கொள்வது சாத்தியமாகலாம் என்ற கனவும் இருக்கலாம். பாரதிய சனதாவின் தேர்தல் வலு நொறுங்கிப்போயிருந்தாலும், ஏற்கெனவே விதைக்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியல் இன்னும் நீர்த்துப் போகாத நிலையில், புதிய பெயரோடு தமிழ்நாட்டு மக்களைக் கவர்ந்திழுக்க உருவாக்கப்படும் (Manufacture) அணியே அண்ணாமலையின் தலைமையில் உருவாகும் புதிய அணி.

இம்மாதிரியாகப் புதுவடிவங்களில் புதுப்பெயரோடு அணிகளைத் திரட்டுவது ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்புக்குப் புதியதல்ல; தமிழ்நாட்டு மண்ணிற்கென உருவாக்கப்பட்ட இந்து முன்னணியும், அதன் பின்பு இந்து மக்கள் கட்சியும் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

மதவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றுக்கணக்கிலான கிளை அமைப்புகள் நாடு முழுவதும் தம் கருத்தியல் வீச்சு மூலம் இந்திய ஒழுங்கமைவைச் சிதைத்து வருகின்ற நிலையில் மோடி, அமித்ஷா ஆசியோடு அண்ணாமலை தொடங்க இருப்பது மற்றுமொரு சங்கப் பரிவார அமைப்பே! பா...வின் மற்றோர் அரசியல் அணியே!