news-details
சிறப்புக்கட்டுரை
காவிக்கொடி பறக்குது!

ஒரு மாலைப்பொழுதில் தோட்டமொன்றில் தரையில் அமர்ந்து இருந்தோம். பெரிய வகை கருந்தேள் ஒன்று மெல்ல ஆடி ஆடி வந்தது. அருகில் நின்றிருந்த உறவினரிடம் தேளை சைகையால் காட்டினோம். அவர் கிராமப்புறத்தைச் சார்ந்தவர் என்பதால் லாரி டயரை அடிப்பாகமாகக் கொண்ட கனத்த செருப்பு அணிந்து இருந்தார். தேளைச் செருப்பால் வேகமாக அடித்தார். தேள் கொட்டியது. செருப்பில் ஓட்டை விழுந்தது. நம் உறவினர் நல்ல  பலசாலி என்பதால், நட்டுவாக்காலி எனும் தேளை அடித்துக் கொன்றார். அவர்நட்டுவாக்கலி கொட்டினால் கொட்டிய வேகத்தில் விசம் ஏறும்; வாயில் நுரை தள்ளும்; மரணம் நிச்சயமான ஒன்றாகும்என்றார்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். தன்னைச் சமூக அமைப்பு எனப் பிரகடனப்படுத்துகிறது. ஆனால், தேச அமைதியைக் குலைக்கும் கருந்தேளாக வன்முறை வழி, மறைவாகக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. உயிர்ப்பலிகளை வாங்கிக்கொள்கிறது. தேசப் பிதா காந்தி கொலை முதல் பாபர் மசூதி இடிப்புவரை மதக்கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ். பங்கு பலமாக இருக்கிறது. 27, செப்டம்பர் 1925 அன்று நாக்பூரில் கே.பி. ஹெட்கேவர் என்பவரால் இராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) தொடங்கப்பட்டது. ஆர்.எஸ். எஸ். அமைப்பு, இந்து ஒற்றுமை, ஒழுக்கம், இந்து கலாச்சார மேம்பாட்டிற்காக உழைக்கும். இந்து தேச அரசை உருவாக்கப் பாடுபடும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு படிநிலைகளைக் கொண்டது. ஷாகாக்கள் எனப்படும் உடற்பயிற்சி, கொள்கைப் பிரச்சாரம் சார்ந்த இளைஞர்களின்  உள்ளூர் அமைப்பாகும். இது மாவட்ட, மாநில, தேசிய எனப் படிநிலைகளில் கட்டமைப்புப் பெறுகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்திய தேசத்தை உலகிற்கு  வழிகாட்டும்விஸ்வகுருஎன்கிறது. ஆர்.எஸ்.எஸ். பார்வையில் பாரதம் ஒரு காலத்தில் அறிவு, ஆன்மிகம், அறிவியல், கலாச்சாரத்தில் உலகிற்கே வழிகாட்டியாக இருந்தது. மீண்டும் அதே நிலையை அடைவதே ஆர்.எஸ்.எஸ். இலக்கு. தனி மனித ஒழுக்கம், குடும்பம், சமூகம், சாதி பேதமற்ற  சமூகம், சுயசார்பு  பொருளாதாரம், இந்து கலாச்சாரம் என்பதில் ஷாகாக்கள் வழி இளைஞர்களை வழி நடத்துதல் எனப் பாதை அமைக்கிறது. ‘தர்மம் அரசாண்டால் உலகமே சீடனாகும் சாத்திரங்கள்என்கிறது. தினசரி சங்கல்பமாகஇந்து சமூகத்தை ஒருங்கிணைத்து, பரம வைபத்திற்குக் கொண்டு சென்று, உலகிற்கே குருவாக்குவேன்எனத் தன் உறுப்பினர்களை உறுதிமொழி எடுக்க வைக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிப்பார்வைக்கு இவ்வாறு அடையாளம் காட்டினாலும், நடத்தையில் பல குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அருகே வெடி மருந்து, டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் இருந்தது என்பதில் ஐயப்பாடு உள்ளது. ஆர்.எஸ். எஸ். 30-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது. பா... அரசியல் அமைப்பு .பி.வி.பி. மாணவர் அமைப்பு, வி.ஹெச்.பி. இந்து கோவில், பசு பாதுகாப்பு, மதமாற்றத் தடுப்பு, பஜ்ரங்தள் இளைஞர் அமைப்பு, சேவா பாரதி கல்வி சேவை, பி.எம்.எஸ். விவசாயத் தொழிலாளர் அமைப்பு எனக் கிளை பரப்புகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளைசங்கப் பரிவார்என்கிறோம்.

வி.ஹெச்.பி. பாபர் மசூதி இடிப்பில் சுவை கண்ட பின், வடநாட்டில் பல மசூதிகளைக் குறிவைத்து, பல்வேறு கலவரங்களைத் தூண்டுகிறது. தமிழ்நாட்டில் வி.ஹெச்.பி., இந்து முன்னணி என்ற பெயரில் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றுவதில் செய்தி கலாட்டாக்கள் யாவரும் அறிந்ததே. வட மாநிலங்களில் கிறிஸ்து பிறப்பு நாளன்று தேவாலயங்களில் கலவரம் செய்தவர்களும் இவர்கள்தான்.

பசு பாதுகாப்புஎன்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்குவதும் இவர்களே. தேசிய தரப் பட்டியலில் உள்ள புது தில்லி ஜே.என்.யு. எனப்படும் பொது மத்திய பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு  பாரதிய சனதாவின்  மாணவர் அமைப்பான .பி. வி.பி. சாதி வேறுபாடு பார்ப்பதோடு, கலவரம் செய்கிறது. அதற்கு அங்குப் பணியாற்றும் உயர்சாதி பேராசிரியர்களும் இவற்றிக்குத் துணை போகிறார்கள் என்பதே கசப்பான செய்திகள். .பி.வி.பிஅலகாபாத் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி வித்யா பீடம், குசராத்  பல்கலைக்கழகம், கௌகாத்தி பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் கோலோச்சுகிறது.                 

இனி காவி  ஆர்.எஸ்.எஸ். வரலாற்றைக் கொஞ்சம் புரட்டுவோம்.

1930-களில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தென் இந்தியாவிற்குத் தன் ஷாகாக்களை, அன்றைய தலைவர் கே.பி. ஹெட்கேவர் நகர்த்துகிறார். 1940-இல் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். கால் வைத்தது. கேரளாவில் பொதுவுடைமைத் தலைவர்களால் ஆர்.எஸ்.எஸ். அடையாளம் காணப்பட்டது. சில மோதல்கள் வெடித்தன. தென்னிந்தியாவில் கேரளம் மற்றும்  தமிழ்நாடு மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதவாதப் பணியாற்ற இன்றுவரை சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் திராவிடம், தமிழ் தேசியம் என்ற தத்துவார்த்த அரசியல் நிலையை ஆர்.எஸ்.எஸ். முறியடிக்க முடியவில்லை. ‘மாற்றம்என்ற பெயரில்தினமலர், ‘துக்ளக்செய்த பிரச்சாரப் பலனை தமிழ்நாடு அரசியலின் தேர்தல் காலப் புதுமுகங்கள் பெற்றார்கள்.

இதனிடையே 1948-இல் தேசப்பிதா காந்தி படுகொலையில், 1975-இல் நெருக்கடி நிலை காலத்தில் 1992-இல் பாபர் மசூதி இடிப்பில் ஆர். எஸ்.எஸ். ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது. தடை நீக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். முழுவீச்சில் களம் கண்டது. 2014 முதல் மோடியைப் பிரதமராக அமர்த்தியது. தனது இந்து இராஜ்ஜிய செயல்திட்டங்களில் பாதியளவு நிறைவேற்றிவிட்டது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இரண்டு முறை பேசப்பட்டது. 1981-இல் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்வின்போது மீனாட்சிபுரம் அருகே ஐந்து இலட்சம் பேரைக் கூட்டி, ஆர்.எஸ்.எஸ். இந்து ஒற்றுமை மாநாடு நடத்தியது. இது குறித்து இந்தியா முழுவதும் மதமாற்ற விழிப்புணர்வுப் பிரச்சாரமும் செய்தது. கன்னியாகுமரியை ஆர்.எஸ்.எஸ். தனது கோட்டை என்கிறது. அங்குத் தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சியும், பா... கட்சியும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. 2026 - சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு தேசியக் கட்சிகள் பெரும்பான்மை தொகுதிகளில் மோதின.

1982-இல் மண்டைக்காடு நிகழ்வு நடந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு பெரிய அளவில் உள்ளதாகக் கூறப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால்  வேணுகோபால் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணைய அறிக்கை சொல்கிறது: “ஆர்.எஸ்.எஸ். என்பது எதிர்ப்புக் கேள்விகளை அனுமதிக்காத அமைப்பாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். நேரடியாகக் கலவரம் செய்யவில்லை; ஆனால், மதவுணர்வைத் தூண்டியது.”

இந்த வார்த்தைகள்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகம் மற்றும் மூகமுடியாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெற்றிகரமாக நூறு ஆண்டுகளைக் கடந்து நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அதன் அடிப்படையில்தான் இக்கட்டுரை அமைகிறது. வாருங்கள்... ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா குறித்த செயல்திட்டங்களைப் பார்ப்போம். 2025 விஜயதசமி நாளில் இருந்து 2026 விஜயதசமி நாள் வரை கொண்டாட்டங்கள் நடக்கின்றன. நாக்பூர் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடத்திலிருந்து அயோத்தியாவிற்கு முக்கிய விழாக்கள் மாற்றப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வமாக உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு என்பதைக் குறிவைத்த எங்கள் செயல்திட்டம் உள்ளது என அறிவித்துவிட்டது. மக்களிடம் சென்றடைய துண்டுப் பிரசுரங்கள் ஆர்.எஸ்.எஸ். இலக்கியங்கள் குறித்தக் கோப்புரைகள், புத்தகங்களை வீடு வீடாக வழங்குதல், ஷாகாக்களை அதிகப்படுத்துதல், இலட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் இந்து மாநாடுகள் நடத்துதல், அனைத்துத் துறை முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும், சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்துதல்... எனச் சமூகநலன் முகமூடி அணிந்து வருகிறது.

தமிழ் மண் திராவிட, தமிழ் தேசிய சித்தாந்தங்களில் ஊறிய சமூகநீதி மண். இங்கு ஆர்.எஸ்.எஸ். எவ்வடிவில்  வந்தாலும், அடையாளம் கண்டு, புறம்தள்ளப்படும் என்பதே வரலாறு.