news-details
சிறுகதை
எப்ப உனக்குத் திருமணம்? (சிறுகதை)

ஏண்டா தங்கமுத்து, உனக்குக் கல்யாணம் முடிச்சுருவோம்டாஎன்றாள் அம்மா அருளாயி.

போம்மா, நான் காவல்துறையில சேர்ந்த பிறகுதான் கல்யாணம் பண்ணுவேன்என்றான் தங்கமுத்து.

உன்னோடு படித்த அந்த ரெஜினா உனக்காகவே காத்துக்கிட்டிருக்கிறதா அவளோட அப்பன் இராயப்பன் சொல்லுறாரே?” என்றாள் அருளாயி.

அவர் சொன்னா நான் கட்டிக்கிடணுமா? எனக்குனு ஒரு மரியாதை இல்லையா?” என்றான் தங்கமுத்து.

கல்யாணம் முடிச்சிட்டு அப்புறம் வேலைக்குப் போ. அவுங்ககிட்ட நிறையப் பணம் இருக்குல. அதைவச்சு அனுபவிடா. ஒரே பொண்ணுதானேடா இராயப்பனுக்கு. அதை விட்டுறக்கூடாதுடாஎன்றாள் தாய்.

சும்மா புலம்பாதே. உனக்கு நான் சொல்லுறது  இதுதான்... வேற வேலை இருந்தா போய்ப்பாருஎன்றான் தங்கமுத்து எரிச்சலாக.

உங்கப்பன் குடிச்சுக் குடிச்சு காசைப்பூரா அழிச்சிட்டுப் போயிட்டான். உன்னையும், உன் தம்பி ஜெயராசையும் ஏதோ சிரமப்பட்டுப் படிக்க வச்சேன். இப்ப இப்படி அடங்காம பேசுறே...” என்றாள் கவலையுடன் அருளாயி.

அப்போது ஜெயராஜ் வீட்டிற்குள் நுழைந்தான்.

வாடா தம்பி. எங்கே போயிட்டு வர்ற...?” என்றான் அண்ணன் தங்கமுத்து.

கோவில்ல தியானம் இருந்தது. அதுக்குப் போயிட்டு இப்பதான் வர்றேன்என்றான் ஜெயராஜ்.

அதெல்லாம் சரிதான்டா. இப்படி மரியாயின் சேனை, அன்பியக் கூட்டம், தியானம், திரு இருதய செபக்கூட்டமுன்னு போகவேண்டியதுதான். அதே நேரம் நான் ஒருத்தி தனியாகக் கிடக்குறேனு நெனச்சியா?” என்றாள் தாய்.

ஏன் நீ சிரமப்படுறே? சாப்பிட்டுத் தூங்க வேண்டியதுதானே?” என்றான் ஜெயராஜ் தன் அம்மாவிடம்  ஆறுதலாக.

அது சரி, எப்பத்தான்டா இந்த வீட்டுக்கு மருமகள் வர்றது? நானே இப்படிச் சமைச்சு இராப்பகலா துன்பப்படுறது? அதை யோசிக்க மாட்டீங்களாடா? இப்படியே நான் பரலோகம் போயிட்டா, உங்க கல்யாணத்தை யாருடா முடிச்சு வைப்பாங்க?” என்றாள் அருளாயி.

நீ நம்ம சாமியார் ஜோசப்கிட்டே சொன்னியாமே? அவரும் அடிக்கடி என்கிட்டே கேட்டுக்கிட்டேதான் இருக்காருஎன்றான் ஜெயராஜ்.

நம்ம இராயப்பன் மகள் ரெடியா இருக்கு, நீ சரின்னு சொன்னா பேசி முடிச்சிடலாம்என்றாள் தாய்.

அண்ணன் இருக்கும்போது எனக்குப் போயி ஏம்மா? நல்லாவா இருக்கும்?” என்றான்.

டேய், அவனைப் பத்தி பேசாதே. அவரு வேலைக்குப் போன அப்புறம்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாரு. நீ சரின்னு சொல்லு...” என்றாள் தாய்.

சரிம்மா, எனக்கென்னு சொல்லிட்டில்ல; பேசி முடி. சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடுவோம்என்றான் ஜெயராஜ்.

டேய் தம்பி, உனக்கு யோகம்தான்டாஎன அண்ணன் தங்கமுத்து சொன்னதும் எல்லாரும் சிரித்து மகிழ்ந்தனர்.

அடுத்த சில நாள்களில் இராயப்பன் வீட்டில் பேச்சு நடத்தப்பட்டது. ரெஜினாவுக்கும் ஜெயராஜூக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அருளாயியின் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. வீட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு மகிழ்ச்சி குடிகொண்டது.

ஆனால், தங்கமுத்துவின் உள்ளத்தில் ஏதோ ஓர் அமைதியின்மை இருந்தது: ‘எனக்காகக் காத்திருந்தவள், இன்று தம்பிக்கு மனைவியாகிறாளேஎன்ற எண்ணம் அவனைத் துளைத்தது. ஆனால், அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஒருநாள் இரவு வீட்டின் முன் அமர்ந்து கொண்டிருந்த தங்கமுத்துவிடம் ஜெயராஜ் மெதுவாகக் கேட்டான்:

அண்ணா,… உனக்கு மனசுக்குள் ஏதாவது வருத்தமா?”

சில நிமிடங்கள் மௌனமாக இருந்த தங்கமுத்து சிரித்தபடி சொன்னான்: “இல்லடா,… நான் வாழ்க்கையை வேலைக்குப் போன பிறகுதான் ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். ஆனா வாழ்க்கை யாருக்காகவும் காத்திருக்காதுபோல.”

அந்த வார்த்தைகள் ஜெயராஜின் மனத்தைத் தொட்டன. சில மாதங்களுக்குப் பிறகு தங்கமுத்துவிற்கு, காவல்துறையில் வேலை கிடைத்தது. அந்தச் செய்தி வீட்டையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வேலைக்குச் சேர்ந்த முதல் மாதச் சம்பளத்தை அம்மா அருளாயியின் கையில் வைத்து, “இது நீ பட்ட வேதனைக்கான முதல் பலன் அம்மாஎன்றான் கண்கள் கலங்க.

அருளாயி மகிழ்ச்சியுடன் மகனை அணைத்துக்கொண்டாள். அப்போது அருகில் நின்ற ஜோசப் சாமியார் சிரித்தபடி கேட்டார்:

சரி தங்கமுத்து, இப்போ எப்ப உனக்குத் திருமணம்?”

அனைவரும் அவனைப் பார்த்தனர். தங்கமுத்து சிரித்தபடி, “இந்தத் தடவை அம்மா பார்க்குற பொண்ணுக்கே ஓகே ஃபாதர்என்றான். அந்த வீட்டில் மீண்டும் சிரிப்பொலி நிறைந்தது.