உலகத் தலைவர்கள் நீதியான மற்றும் நிலையான அமைதியை நோக்கிச் செல்லத் தேவையான ஞானத்தை இறைவன் வழங்கவேண்டும் என்று திருத்தந்தை 14-ஆம் லியோ வேண்டினார். வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்ற ‘ஆஞ்சலூஸ்’ (Angelus) செபத்தின்போது, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகத் திருத்தந்தை உருக்கமாக வேண்டினார். “மே மாதம் முழுவதும் திரு அவை அமைதிக்காக ஒன்றிணைந்து செபித்துள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களின் மனச்சாட் சியை இறைஞானம் ஒளிர்விக்கட்டும்; அவர்கள் நேர்மையான முறையில் அமைதியைத் தேடும் முடிவுகளை எடுக்க மரியாவின் பரிந்துரை உதவட்டும்” என்று குறிப்பிட்டார். இத்தாலியில் கடைப்பிடிக்கப்படும் ‘நிவாரண தினத்தை’ முன்னிட்டு நோயாளிகளுக்கும், அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்தார். உடல் மற்றும் மனரீதியான வலிகளைக் குறைக்கும் ‘பராமரிப்புக் கலாச்சாரத்தை’ (Culture of Care) வளர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.