news-details
வத்திக்கான் செய்திகள்
“முதியோரே, இறைவனின் கண்கள் எப்போதும் உங்கள் மீதே உள்ளன”

ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் கொண்டாடப்படவுள்ள தாத்தா-பாட்டியர் மற்றும் முதியோருக்கான ஆறாவது உலக நாளுக்காகநான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேன் (எசா 49:15)”  என்ற கருப்பொருளைத் திருத்தந்தை லியோ வத்திக்கானில் இன்று வெளியிட்டுள்ளார். இச்செய்தியில், முதியோர் தங்களைத் தனிமையிலோ அல்லது நோயாளியாகவோ உணர்ந்து, இறைவனால் கைவிடப்பட்டதாக வேதனைப்படும் தருணங்களில், இறைவனின் அன்பான கண்கள் எப்போதும் அவர்கள்மீது இருக்கின்றன என்பதைத் திருத்தந்தை உறுதியாக நினைவூட்டியுள்ளார். எந்த வயதிலும் நாம் இறைவனின் அன்பான பிள்ளைகளே என்றும், அவரிடம் திரும்புவதற்கு எப்போதும் கால தாமதம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதியோர் மற்றும் தாத்தா-பாட்டியரை நேரில் சென்று சந்திக்கும் உன்னத வழக்கத்தை இளையோர் மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்று திருத்தந்தை லியோ அழைப்பு விடுத்துள்ளார். அவர்களின் பலவீனத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்றும், இந்த முதுமைப் பருவத்திலும் அவர்கள் ஆன்மிக ரீதியாகப் புதிய பிறப்பு எய்தி, போர் மற்றும் சமூகக் கொந்தளிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள உலகிற்கு அமைதி கிடைக்கத் தன்னோடு இணைந்து செபிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.