‘சூசை’ தமிழ்க் கத்தோலிக்கர் நன்கறிந்த பெயர். வாடா மலரைக் கையிலேந்தி, வாழ்ந்த ஒரு புனிதர். இவரைத் தமிழ்க் கத்தோலிக்கருக்கு அறிமுகப்படுத்த முனைவது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமே.
தூயவரான
ஜோசப்பை (யோசேப்பு) அல்லது தமிழில் அழைக்கப்பெறும் சூசையை அறிமுகப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல;
பின் ஏன் இக்கட்டுரையின் நாயகனாய் சூசை வருகிறார்?
சூசை
எனும் ஜோசப் கத்தோலிக்க இறைச் சமூகத்தில் வணக்கத்திற்குரியவர். தமிழ்நாட்டுக் கத்தோலிக்க ஊரகங்களில் ‘சூசை’ எனும் பெயர் மிகச் சாதாரண பெயர். கத்தோலிக்க மரபில் ‘சூசை’ எனும் பெயர் மிகப் பிரபலமானது.
சூசைக்கு என்ன
நடந்தது?
தமிழுக்கு
ஜோசப்பைச் சூசையாக்கியவர் ‘தத்துவப் போதகர்’ என்றழைக்கப்பட்ட இராபர்ட் டி நொபிலி. சூசையும்
ஜோசப்பும் 2026-ஆம் ஆண்டின் தேர்தல் களத்தில் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படுவார் என்று தெரியாமல் ஜோசப்பைச் சூசையாக்கிய நொபிலிக்கு உய்த்துணர வாய்ப்பில்லைதான்!
நொபிலி
என்ன செய்தார்? என்ற உண்மைகள் இன்றைய கத்தோலிக்கம் அறியாத உண்மை. எப்படியும் நற்செய்தியை அறிவித்தே ஆக
வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றிய இவர், கத்தோலிக்கத் துறவிக்கான ஆடை துறந்து, பார்ப்பனிய கோலம் தரித்தவர். தமிழின் ஒப்பற்ற இலக்கியத் தரங்களைத் தமிழருக்குரியதாக்க உரைநடைத் தமிழை அறிமுப்படுத்தி,
தமிழை மக்கள் மயப்படுத்தியவர். கத்தோலிக்கர் இன்று பயிலும் மந்திரங்களைத் தமிழ் உரைநடையில் தந்தவர். அவர் ஜோசப் எனும் உயரிய புனிதரைச் சூசையாக உச்சரிக்கவைத்தமையுள் எந்த அரசியலும் இல்லை. வாக்கரசியல் நிச்சயமாக இல்லை.
இன்று என்ன
நடந்தது?
இன்று
85% இந்துச் சகோதரர் வீடுகளின் சமையற்கட்டு வரை புகுந்துள்ள ஒரே பெயர் ‘ஜோசப்’ என்பதுதான். திருக்குடும்பத்தில் ஒருவரான ‘சூசை’ எனும் ஜோசப் இப்படிப் புகுந்துள்ளமை யாருக்கு மகிழ்வைத் தருகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டுக் கத்தோலிக்கர் எவரும் மகிழாது இருக்கவியலாது. சூசையாம் ஜோசப் நிகழ்த்தியிருக்கும் விந்தையுள் அடங்கியுள்ள உண்மை என்ன?
திரையுலகில்
வெறும் ‘விஜய்’ என்று அறியப்பட்ட ஒருவரை, இவர் வெறும் விஜய் அல்ல; ஜோசப் விஜய் என்று ஒரு மதவாதி வேண்டுமென்றே பகை வளர்க்கும் நோக்கில், பிரிவினைவாத உணர்வோடு ஜோசப்பை அழுத்திக் கூறினார். அம்மதவாதி கொடுத்த அழுத்தத்திற்குப் பின்னர்தான் விஜய்க்குத் தனக்கு ‘ஜோசப்’ என்ற பெயரும் உண்டு என்றிருந்திருக்கலாம்.
எந்த
நோக்கோடு அந்தப் பெரும்பான்மைவாதி ‘ஜோசப்’ என்ற பெயரை அழுத்திக் கூறினாரோ, அம்மதவாதியின் இழிந்த நோக்கம் நிறைவுறாமலேயே போயிற்று.
புனிதராம்
சூசையின் அருளால் ஜோசப் விஜய் உண்மையிலேயே ஜெயம் பெற்றார். மதவாதியின் நோக்கம் சிதைந்தமைக்குப் புனிதர் சூசைதான் காரணரோ?
இன்றைய
தமிழ்நாட்டு முதல்வரை ‘ஜோசப் விஜய்’ என்றழைப்பதில் கத்தோலிக்க நம்பிக்கையாளருக்கு மிக்க மகிழ்ச்சிதான். ஆனால், ஜோசப் விஜய் அவர்கள், விஜய்க்கு முன் ஜோசப் என்ற சொல் இடம்பெற்றிருந்ததை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டிருப்பாரா? தான் வெறும் விஜய் அல்ல; ஜோசப் விஜய்தான் என்றழைப்பதைப் பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வாரா?
ஜோசப்
விஜய் அவரின் மறைசார்ந்த ஒழுங்கின்படி, நிச்சயமாகத் திருமுழுக்குப் பெற்றிருக்க வேண்டும்; தொடர்ந்து அவர் பெறவேண்டிய அருளடையாளங்களைப் பெற்றாரா? என்பது எவரும் அறியார் (விஜய் அசோக் நகர் பங்கில் நற்கருணை அருளடையாளம் பெற்ற புகைப்படங்கள் இணையங்களில் உலவுகின்றன. அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்!). ஆனால், இவரின் திருமணம் முழுக்க முழுக்க கிறித்தவம் சாராது தமிழ் மணம் முறைப்படியே நடந்தது. இவரின் தாய் ஓர் இந்துப் பெண்மணி. இவரின் தந்தையார் கிறித்தவர் என்பதும் உண்மையே. இவரும் இவர் மனைவியும் நல்ல கணவன்-மனைவியாகவே இல்லறம் நடத்துகின்றனர். இவரின் எண்பதாவது பிறந்த நாளினை இந்துமத கோவில் ஒன்றில் இந்துமதச் சடங்காச்சாரப்படியே நடந்தது என்பதையும் அறிகின்றோம்.
இக்கட்டுரையின்
நோக்கம் ஜோசப் விஜய் எந்த மதத்தைச் சார்ந்தவர்? அல்லது சாராதவர் என்று ஆய்வதல்ல; ஒரு தனிமனிதர் சார்ந்த மதத்தை வைத்து ஒருவரை அளவிடுவதும் நம் நோக்கமல்ல. மதரீதியாக ஒருவரை அளவிட்டு அவர் தகுதியை நிர்ணயிப்பதும் நமக்குரிய பணியுமல்ல.
மதத்தையும்,
மதம் உள்ளடக்கிய கடவுளர் நம்பிக்கையையும் காட்டுமிராண்டித்தனம் என்று இழித்துப்பேசிய தந்தை பெரியாரை நாம் இகழ்வதில்லை. தன் சமய நம்பிக்கையின் அடையாளத்தை எங்கும் காட்டிக்கொள்ளாத தலைவர் காமராசரையும் நாம் ஒதுக்குவதில்லை. நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை என்பது குடிமக்களின் தெரிவு (Choice). குடிமக்களின்
இவ்வுரிமையைத் தடுப்பது, சமய மொழியில் பாவம் (Sin). அரசியல்
மொழியாக வன்முறை (Violence). அதுவும்
ஒரு மதச்சார்பற்ற நாட்டில், ஓர் அரசியல் தலைமைக்கு மதம் சார்ந்து ஒரு நம்பிக்கை இருக்கலாம்; அதே வேளை ஒரு மதம் சார்ந்தவர் என்பதால், பிறமத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை நாம் ஏற்பதில்லை.
இன்றைய
நம் பிரதமர் குசராத் முதல்வராக இருந்தபோதுதான், குசராத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 2000 இசுலாமியர் கொல்லப்பட்டனர். சொந்த ஊரில் பாதுகாப்பற்ற இசுலாமியர் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்தபோது, அவர்களின் துயர் கண்டு கவலையுறாத முகாம்களில் இசுலாமியர் இனப்பெருக்கம் (breeding) செய்து கொண்டிருப்பதாக நையாண்டி செய்தார்.
இதே
மனிதர் நாடு முழுவதும் பயணம் செல்கையில் தொழுகை செய்யாத கோவில்கள் இல்லை. கோவிலுள் பெரும் பக்தனாகவே காட்சியளிக்கிறார். மோடியின்
தனிப்பட்ட நம்பிக்கையை நாம் மதிக்கிறோம். அவர் இந்துவாக இருப்பதில் நமக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால், மத அடிப்படையில் ஒரு
தேசத்தைக் (Raistra) கட்டமைப்பதை
நாம் ஏற்க முடியாது. மத அடிப்படையில் அமையும்
தேசம் எல்லாருக்குமான (Raistra) தேசமாக
இராது என்பதனால் எதிர்க்கிறோம். மதங்களை மதிக்கும் நாம் மதவாதத்தை மறுக்கிறோம்.
திரு.
ஜோசப் விஜய் ஒரு கிறித்தவராக இருப்பது அரசமைப்புக்கு எதிரானதல்ல; ஏற்கெனவே கூறியது போன்று மத உரிமை என்பது
மனிதரது அடிப்படை உரிமை; மதச்சுதந்திரம் பற்றிப் பேசும் இந்திய அரசமைப்புச் சட்டம், கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. மதம் ஒரு கருத்தியல் எனும்போது, கருத்தியலைத் தாங்கும் ஒரு மதத்தை ஏற்க, கடைப்பிடிக்க, பரப்புரை செய்ய அரசமைப்பு உரிமை அளிக்கிறது; இது குடிமக்களுக்கான அடிப்படைக் கவசமாகும். இக்கவசம் புனிதமானது, போற்றுதற்குரியது.
விஜய் என்ன
செய்கிறார்?
திரு.
ஜோசப் விஜய் தன்னைக் கிறித்தவராக அடையாளப்படுத்தலில் எத்தவறும் இல்லை. ஆனால், இவர் என்ன செய்கிறார்? இவர் தன்னைச் சமயங்களைக் கடந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் தவறில்லை. மேனாள் முதல்வர் சமயம் பேசும் கடவுளை நம்பாதவர்; எந்தவகை வழிபாட்டையும் ஏற்காதவர். அவர் மனைவி ஒரு கடவுள் பக்தை; இதனையும் ஸ்டாலின் மதிக்கிறார். மதங்களைக் கடந்து மனிதரை மதித்ததால், சிலவேளை இவரை ‘இந்து மதத்தின் விரோதி’ என்று தூற்றியதைப் பார்த்திருக்கிறோம். திரு. ஸ்டாலின் அவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டு
அரசின் சட்டமன்றத் தலைவர் பிரபாகர் தன் கிறித்தவ அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொள்ள தயங்காதவர். பொது இடங்களில் திருவிவிலிய வாசகங்களை உச்சரிக்க இவர் தயங்குவதே இல்லை.
ஒரு
சிறுபான்மை மதம் சார்ந்த இவர், பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்தாலும், இவர் சார்ந்த மத அடையாளத்தை வலுவாக
வெளிக்காட்டுவதில் உறுதியாக இருக்கிறார். தான் சார்ந்த மத அடையாளத்தைப் பெரும்பான்மை
சமயத்தார் வெளிப்படையாகக் காட்டுவதில் தயக்கம் காட்டாத நிலையில், சிறுபான்மை மதம் சார்ந்த ஒருவர் தயக்கம் காட்டத் தேவை இல்லை என்றே கருதுகிறேன்.
அண்மையில்
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் இயங்கும் இளங்குருமடத்தின் பேராசிரியர் ஒருவர் என்னோடு பேசும்போது, ஒரு கிறித்தவர் தமிழ்நாட்டு முதல்வராகிவிட்டார் என்றும், குருமடத்தின் குருமட மாணவர்கள் பெருமகிழ்வில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். திருச்சி மாநகரின் ஒரு தேவாலயத்திற்குள் சென்று, முழங்கால்படியிட்டு வணங்கியதைக் கண்டு பேருவகை கொண்டதாகவும் கூறினார்.
அந்தோணியார்
ஆலயத்தில் முழங்காலிட்டு வணங்கிய விஜய், திருச்செந்தூர் வேல் முருகனின் வேலைத் தாங்கியமை, மராட்டியம் வரை சென்று சீரடி பாபாவைத் தொழுதமை, கர்நாடகாவின் மூகாம்பிகைக்கு மகுடம் சூட்டியமை... இவையெல்லாம் கிறித்தவருக்கான நம்பிக்கை அடையாளமா?
ஒருவர்
மதம் சார்ந்தவரா? இல்லையா? என்பது நமது கேள்வியல்ல; ஒரு மதம் சார்ந்தவன் என்று தேவைக்குக் காட்டிக்கொண்டு,
எல்லா மதக் கடவுளரையும் வழிபடுகிறேன் என்று காட்டிக்கொள்வது உண்மையில் நாடகமே.
அடையாளம்
குடிமக்களின் உரிமை; அடையாளத் திணிப்பு அராஜகம்; அடையாள வழி பாகுபடுத்தல் வன்முறை; பன்முக அடையாளங்களை மதித்தல் சனநாயகம். குடிமக்களின் அடையாளத்தில் சமரசம் செய்வது போலித்தனம்.