திருப்பலி முன்னுரை
இயேசுவின்
சீடர்களாய் வாழ்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற, ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. திருமுழுக்குப் பெற்ற எல்லாருமே இயேசுவின் சீடத்துவத்தில் பங்குபெறுகிறார்கள். தங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்விட இயேசுவுக்கும் அவரது மதிப்பீடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பவர்களே அவரின் உண்மையான சீடராக மாறுகின்றனர். தன்னலத்தை மையப்படுத்தி பணம், பட்டம், பதவி, செல்வத்தில் தங்கள் கவனத்தைக் குவிப்பவர்கள் இயேசுவின் சீடராய் இருக்கமுடியாது.
அன்றாட
வாழ்வில் தன்னலத்தைக் கடந்து பிறர் நலம் பேணும் வேள்வித்தீயில் தங்களைத் தியாகம் செய்து, தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்து, நேர்மைக்கும் உண்மைக்கும் உயிர்கொடுத்து, தீமை செய்பவர்களை மன்னித்து, இல்லாதவர்களோடு தோழமை கொண்டு, மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்று உறவுக்காய், தோழமைக்காய், ஆறுதலான வார்த்தைக்காய், உடனிருப்பிற்காய் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று நலம் கொடுத்த இயேசுவைப் போன்று, நாமும் தேவையில் உள்ளோரைத் தேடிச் சென்று உதவிடுவோம். உடன்வாழும் இறைவனை நமது நற்செயல்களால் இவ்வுலகிற்கு அறிவித்து, அவரின் அன்புச் சீடராய் உழைக்க
வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
ஆண்டவரின்
குரலுக்குச் செவிகொடுத்து, அவரது கட்டளைகளுக்குப் பணிந்து, ஆண்டவரின் வாக்குறுதிகளை இவ்வுலகிற்கு எடுத்துக் கூறுபவர்களே இறைவாக்கினர். இறைவனின் பணியை எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் செய்யும்போது இறைவனே வழிநடத்துவார். செல்லும் இடமெல்லாம் தம்முடைய தூதர்களைக் கொண்டு காப்பார் என்று கூறி, இறைவனின் உடனிருப்பை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் திருமுழுக்கின் ஆழமான அர்த்தத்தை நமக்கு விளக்குகிறார். நாம் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு இணைந்து அவரது சாவில் பங்கேற்றோம். எனவே, அவரோடு இணைந்து புதியதொரு வாழ்வு வாழ நாமும் உயிர்த்தெழுந்துள்ளோம். இனி நாம் பாவத்திற்கு அடிமைகளாக வாழாமல், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ அழைக்கும் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர்
அனைவரும் உமது மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, வாழ்க்கையால் உம்மை அறிவிக்கவும், இறையொளியின் பாதையில் மக்களை வழிநடத்தவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ஞானத்தின்
ஊற்றே எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் மக்களின் தேவை அறிந்து செயல்படவும், நாட்டின் ஒற்றுமைக்காக உழைக்கவும், நாட்டு மக்களை வளர்ச்சியின் பாதையில் வழிநடத்தவும் தேவையான ஞானத்தை வழங்கி எம் நாட்டுத் தலைவர்களைக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நன்மைகளின்
நாயகனே எம் இறைவா! திரு இருதய ஆண்டவரின் பக்தி முயற்சிகளை மேற்கொண்டுள்ள இம்மாதத்தில், ஆண்டவர் இயேசு மற்றும் அன்னை மரியா இவர்களின் இதயங்களைப் போல் எங்கள் இதயமும் கனிவும், இரக்கமும் உடையதாக அமைய வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பாதுகாக்கும்
பரம்பொருளே! எம் பங்கிலும் குடும்பத்திலும் உள்ள குழந்தையர் அனைவரும் இளம் வயதிலேயே ஒழுக்கத்திலும், ஆன்மிகச் செயல்களிலும், மனிதநேயத்திலும் சிறந்து விளங்கவும் நாங்கள் அவர்களை இறைஞானத்தில் வளர்க்கவும் தேவையான வரங்களைத் தந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.