இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார்
மாட்டு
(குறள்
5)
குறள் விளக்கம்
கடவுளின்
உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துவோரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சிந்தனை
இருள்,
அநீதி, தீமை, துன்பம் எதுவும் இறைநம்பிக்கையாளர்களை நெருங்காது. ஏனென்றால், நல்வினை, தீவினை இரண்டும் அவர்களைப் பாதிக்காது. இருவினைகளையும் சமமாக எடுத்துக்கொள்ளும் உறுதியான மனநிலையை இறைவனடி பணிந்தவர்கள் பெற்றிருப்பர்.
புத்தர்
மனிதர்களை மூன்று வகையினராகப் பிரித்தார். முதல் வகையினர் பாறையில் செதுக்கிய எழுத்துகளைப் போல அவர்கள் தங்கள் கோபத்தை வெகுநேரம் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். இரண்டாம் வகையினர் மணலில் எழுதிய எழுத்துகளைப் போல அவர்களுக்கு விரைவில் கோபம் வரும்; சிறிது நேரத்தில் மறைந்துபோகும். மூன்றாம் வகையினர் நீரில் எழுதிய எழுத்துகளைப் போல, அவர்கள் யாருடைய பழிச்சொல்லிற்கும் வதந்திக்கும் கண்ணுறாமல் தங்கள் மனத்தையும் இதயத்தையும் எப்போதும் தூய்மையாக வைத்திருப்பவர்கள்.
புத்தர்
குறிப்பிடும் மூன்றாம் வகை மனிதர்கள் எப்படித் தீமையால் பாதிக்கப்படாமல் தங்கள் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறார்களோ, அதுபோன்ற நிலையை இறைவனோடு நெருங்கிய உறவுகொண்ட உண்மையான இறையடியார் பெற்றிருப்பர். இதனைத் திருவிவிலியம் “அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். அச்சம்
ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்”
என்று (நீதிமொழிகள் 16:6) குறிப்பிடுகிறது.
கடவுளைத்
தனது ஆதாயத்திற்காகத் தேடுவோர் பலர். இன்ப நேரங்களைவிட துன்ப நேரங்களில் மட்டுமே நிம்மதியைத் தேடி இறைச் சமூகத்தைத் தேடுகின்றனர் பலர். ஆனால், நிறை இன்பமாகிய இறைவனின் திருவடிகளை என்றும் மறவாது தேடுவோர், இவ்வுலக இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படுவது இல்லை.
ஆண்டவரிடம்
கொள்ளும் அச்சம் தீவினையை முற்றிலும் போக்கிவிடும்; நல்வினைகளைப் பெருக்கும். இறையடியாருடைய அன்பும் வாய்மையும் தீவினைகளைப் போக்குவதுடன், நல்வினைகளையும் பெருக்கும். எனவே, தீவினை
நீங்கி நல்வினை பெருக இறையடி பணிவோம்.