சனநாயகம் எனும் அரசியல் விழுமியத்தின் மிகப்பெரிய உள்ளீடு எது? உலக வரலாற்றில் தோன்றிய அரசமைப்புகளுள் இன்றும் உயர்ந்தோர் அமைப்பாகக் கருதப்பெறுவது சனநாயக அரசே என்பர். சனநாயகத்தை உள்ளடக்கிய சனநாயக அரசு, அதன் வெகுசன வீச்சால் ஆள்வோரின் ஆளும் போக்கால் கறை படிவதுண்டு. எனினும், சனநாயகம் எனும் மாண்புயர் பண்பும், இப்பண்பை உள்ளடக்கியதாகக் கருதப்பெறும் சனநாயக அரசும் இன்றும் குடிமக்களால் போற்றப்பெறும் ஒரு நிறுவனமாகவே கருதப்பெறுகிறது என்பதுதான் உண்மை.
சனநாயகம்
என்ன தந்தது? சனநாயகம் குடிகளைக் (Subjects) குடிமக்களாக்கியது (Citizens).
சனநாயகம் முன்னெடுத்த இம்மாற்றம் ஒரே நாளில் நடந்த மாயாஜாலமல்ல; ஒற்றை மனிதரின் சர்வாதிகாரத்தின்கீழ்,
ஒரே மனிதனின் முடியாட்சி என்ற பெயரில் குடிகளை ஆட்சி செய்து வந்த நிலையில் குடிகளை
ஆற்றல்படுத்தத் தோன்றிய புரட்சிகர மாற்றத்தால் விளைந்த பெருமாற்றம் ‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்ற எதிர்முழக்கத்தின் வெற்றி இது. தனிமனிதனின் மாண்பையும்,
சமூக அடையாளத்தையும் காக்க ஒரு வரலாற்றுச் சமூகம் முன்னெடுத்த புரட்சிக்குரலின் வெற்றிப்
பரிசே குடியுரிமை எனும் பெருங்கொடையாகும்.
குடிமக்கள்,
சனநாயகம் ஈன்ற பெருஞ்செல்வம். இக்குடிமக்களின் அடையாளம் தெரிவு செய்யும் உரிமையை உத்தரவாதப்படுத்துவதுதான்
தேர்தல். தேர்தல் எனும் சொல் குடிமக்களுக்குச் சனநாயகம் வழங்கியுள்ள பங்கேற்பு எனும்
மதிப்பீட்டை நிறைவு செய்ய தரப்பட்ட ஒரு கருவியே. தெய்வத்தின் தயவில், அத்தெய்வத்தின்
அருளில் கிடைத்த தலைவன் அருளில் குடிகள் வாழ்வதாக நம்பப்பட்ட காலத்தில், ‘மன்னன் உயர்த்தே
மலர் தலை உலகம்’ (புறநானூறு) என்றும் ஏற்கப்பட்ட காலத்தில்,
அனைத்துப் புனைவுகளையும் தாண்டி, குடிமக்களின் வீறுகொண்ட பேரெழுச்சியால் உருவானது சனநாயகம்.
இச்சனநாயகம் உத்தரவாதப்படுத்திய பன்மைச் சமூகங்களின் சமபங்கேற்பு, பங்கேற்பை உண்மையாக்க
உருவாக்கப்பட்ட தேர்தல் முறை; தேர்தலில் உள்ளடங்கியது குடிமக்களின் தெரிவு செய்யும்
உரிமை (Power of Choice).
இந்த மானுட மாண்பின்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை (Faith) நாம் போற்றுகிறோமா? அவமதிக்கிறோமா?
சனநாயகத்தில்,
சனநாயகம் காக்க உருவாக்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட
சனநாயகப் பாதுகாப்பு நிறுவனங்கள் (Democratic institutions) இவை எதன்மீதும் நம்பிக்கையற்ற இன்றைய
மதவாத ஆட்சியாளர்களும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்மீது கைவைத்து உறுதிமொழியெடுத்து
ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றன. ஆட்சிப் பொறுப்பேற்க, ஆட்சி தரும் சுகத்தை அனுபவிக்க,
இவர்கள் கையில் கிடைத்த ஆயுதம் சனநாயகமாக இருத்தல் என்பதுதான் இங்குக் கவலை தரும் செய்தியாகும்.
மதவாதம், மத அடிப்படைவாதம் என்பன சனநாயகப் பண்புகளல்ல; மதவாத
அடிப்படையில் அமையும் அரசு, மதப்பெரும்பான்மைவாத அரசாகத்தான் திகழமுடியும். மதரீதியாக
மக்களை அணி திரட்டி, சனநாயகம் தரும் தேர்தல்வழி அமையும் அரசைச் சனநாயக அரசு என்று எப்படி
அழைக்க முடியும்?
எதேச்சதிகார
அரசுகள், மக்களை வெளிப்படையாகவே அவமதிக்கும் பாசிஸ்டுகள் எல்லாருமே சனநாயக வழியில்தான்
ஆட்சியை நிறுவுகின்றன. சனநாயகம் அவமதிக்கப்பட்டு,
சனநாயகத்தின் ஒரு பகுதியான தேர்தல்முறை மூலம் களவாடிப் பெறப்படும் ஆட்சி சனநாயக
ஆட்சியல்ல.
மானுட
மாண்பு, அவர்தம் வாழ்வுரிமை என்பனவெல்லாம் சனநாயகம் வழங்கிய அடிப்படை உரிமைகள். இவ்வுரிமைகளைத்
தாங்கிய அரசமைப்பு நடைமுறைப்படுத்தும் சனநாயக நிறுவனங்கள் தமக்குரிய பணிகளைச் செய்ய
மறுக்கும் நிலையில் அல்லது தடுக்கப்பெறும்போது, பாதிக்கப்படும் குடிமக்கள் இப்போக்குகளைக்
கேள்விக்குள்ளாக்குகின்றபோது, சனநாயகம் தரும் தேர்தல் வழி ஆட்சியை அபகரித்து, ஆட்சி
நடத்தும் எதேச்சதிகாரிகள், உரிமைக் குடிமக்களை ‘நகர்புற நக்சல்கள்’ என்றும், ‘நாட்டு விரோதிகள்’ என்றும்
முத்திரை குத்துகின்றனர், சிறைப்படுத்துகின்றனர், கொலையும் செய்கின்றனர்.
இத்தீய
விளைவுகளுக்கு ஊற்றுக்கண் எது? என்று தேடிப் பார்க்கையில், குடிகளைக் குடிமக்களாக்கி
அழகு பார்த்த சனநாயகமும், சனநாயகம் அளித்த தேர்தல்வழி இவர்கள் பெற்ற அதிகாரமுமே இதற்குக்
காரணமாகின்றன என்பதை அறியலாம்.
சனநாயகத்தின்
அழகு முகமாம் தேர்தல் சிதைக்கப்படுகின்றபோது, அச்சிதைவின் வெளிப்பாடாகிய முறைகேடுகள்
வெறும் ஒழுங்கு பற்றிய பிரச்சினை அல்ல; இது ஒரு வன்முறை! (Violence).
ஓர் உன்னத நெறிமுறை பாதிக்கப்படுகின்றபோது குடிமக்களின் பயனுக்குரியதாக அது இல்லா நிலையில்,
குடிமக்களின் சனநாயக உரிமையே மீறப்படுகிறது. எனவே, சனநாயகத்தின் பெயரால் நடத்தப்பெறும்
வன்முறையும் மீறலும் (Violation) சனநாயகத்தின் முக்கியக்கூறான தேர்தல்
அவமானத்திற்குள்ளாகிறது, அவமானப்படுத்தப்படுகிறது.
“இந்தியச்
சமூக அமைப்புகள் - அது தாங்கிப் பிடிக்கும் சனநாயகம் எனும் மாந்த நெறிக்கு முரணானது” என்பார் அரசியலறிஞர் ரசனி கோத்தாரி. இந்தியச் சமூகத்திலிருந்து
சனநாயகத்திற்கான குரல் எழவில்லையென்றும், சனநாயக நிறுவனங்கள் மேலிருந்து திணிக்கப்பட்டவை
என்றும் அவர் கூறுவார். விடுதலை பெற்ற இந்தியாவில் சனநாயகத்திற்கான குரல் எழவில்லையெனினும்,
இந்தியச் சமூக அமைப்பு சனநாயகத்தைத் தகவமைப்பு செய்ததற்குரியதல்ல எனினும், அன்றைய இந்தியத்
தேசியத் தலைமை பெருத்த நம்பிக்கையோடு இந்தியாவைச் சனநாயகக் குடியரசாக அறிவித்தது.
பெரும்பான்மை
மத அடிப்படையில் இந்நாடு அமையவேண்டும் என விரும்பியவர்களின் குரல் வலுவாக ஒலித்து வந்த
நிலையிலும், இந்நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவித்த பெருமையையும் நாம் மறந்துவிட
முடியாது. இன்று ‘மதச்சார்பற்ற இந்தியா’ ஓர் அறிவிக்கப்பெறாத ‘மதம் சார்ந்த
நாடாக’ வேகமாக உருமாறிக் கொண்டிருக்கின்ற எதார்த்தத்தையும்
நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
இந்தியச்
சமூகத்துள் தேர்தல்முறை வெற்றி பெறுமா? பெறாதா? என்ற ஐயம் எழுந்த நிலையிலும், ‘எல்லாருக்கும்
ஒரே வாக்கு’ என்ற அடிப்படையில் இந்திய அரசு முதல்
தேர்தலை அறிவித்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட எல்லாருக்கும்
வாக்குரிமை கொடுக்கத் தயங்கிய நிலையில், இந்தியா வாக்குரிமையை இருபாலாருக்கும் சமமாக
வழங்கியது. அதுவும் இந்திய மக்களில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடு
கூட இல்லாத நிலையிலும்கூட அனைவருக்கும் வாக்குரிமை (Right to vote) வழங்கிய சிறப்பு இந்திய அரசுக்கு
உண்டு. உலகின் மிகப்பெரிய சனநாயகத் திருவிழா இந்தியாவில் இந்தியக் குடிமக்களின் துணையோடு
நடத்தப்பட்டது.
இந்தியச்
சமூகம் ஒரு வர்க்கச் சமூகம் மட்டுமல்ல; வர்ணச் சமூகமும் கூட! இந்த நிலையை அறிந்திருந்த
பின்பும், சம உரிமை வழங்கும் வாக்குரிமையைக் குடிமக்களுக்கு உத்தரவாதமாக்கிய இந்திய
அரசைப் பாராட்டுவோம்.
தேர்தல்
எனும் சனநாயக முறைமை உயர்வானது எனினும், போட்டி அரசியலில் (competitive Politics)
தேர்தல் முறைகளில், அதாவது வாக்குச் சேகரிப்பில், வேட்பாளர் தேர்வில் ‘பணநாயக விளையாட்டு’ எனும் பல்வேறு நிலைகளில் உண்மையான சனநாயக முறைமையிலான தேர்தல்
நெறிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டன என்பதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
இலாபம்
தேடி கட்சி மாறுதல், கட்சித் தலைமையைப் புறக்கணித்தல் என்பனவும் ‘ஆயா ராம்... காயா
ராம்...’ என்ற சொல் வழக்குபோல இன்று ஒரு கட்சி, நாளை ஒரு கட்சி என்ற நிச்சயமற்ற நிலை.
இம்மாதிரியான தேர்தல்கால அவலங்கள் நம் தேர்தல் முறையினை, தேர்தல் மூலம் தெரிவு செய்யும்
உரிமை பெற்ற குடிமக்களின் மாண்பைச் சீர்குலைப்பன!
தமிழ்நாட்டில் தலைதூக்கும்
அவலங்கள்
ஆங்கிலத்தில்
‘என்ஜினியரிங்’ (Engineering) என்ற சொல் இந்திய அரசியல் சமூகத்தில்
மிகப் பரபரப்பாக இயங்கி வருவதை அறிவோம். இந்தியாவை ஆளும் பா.ச.க. அரசும், வட இந்திய
மாநிலங்களில் சாதியக் கட்டமைப்பை மறுகட்டமைப்பு செய்வதன் மூலம் தனி வாக்கு வங்கியை
அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். ‘Social
Engineering’ என்று அழைக்கப்பெறும் இந்த யுக்தி மூலம்
சாதி அமைப்புகள் ஒருங்கிணைதல் அல்லது மீண்டும் வேறு அணி சேரல் என்ற யுக்தியை முன்னெடுத்து,
தன் வாக்கு வங்கியைப் பலமாக்கி விடுவதைப் பார்க்கிறோம்.
தென்னகத்தில்
பாரதிய சனதாவின் இந்த யுக்தி பெரிய அளவிலான வெற்றியைத் தரவில்லை. ஆனால், பாரதிய சனதா
ஆளும் பல மாநிலங்களில் இம்மாதிரி களேபரங்கள் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பா.ச.க.
பெரும்பான்மை பெறாமலேயே ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு ஆசை காட்டி ஆட்சியமைத்த கதை கர்நாடகாவில்
நிகழ்ந்தது; புதுதில்லியில் நடந்தது; மராட்டியத்தில் எந்த ஒளிவு மறைவுமின்றி உருவாக்கப்பட்டது;
இப்போது பா.ச.க. அரசு பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. ஏற்கெனவே தலைமைப்
பொறுப்பில் இருந்தவர்களுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அவர்கள் சூழ்ச்சியின் பயனை அனுபவித்து
வருகின்றனர். இம்மாதிரியான அரசியல் தகிடு தத்தங்களுக்கு இதுவரை பலியாகாமல் இருந்த தமிழ்நாட்டு
அரசியல் களம் தற்போது சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பலியாகி வருகிறது.
மதச்சார்பற்றக்
கூட்டணி சார்ந்த கட்சியினர், மதச்சார்பின்மையைக் காக்க முதல்வர் ஜோசப் விஜய்யோடு கூட்டு.
மதச்சார்பின்மைக்கு எதிரான பா.ச.க.வோடு அணி சேர்ந்த அ.தி. மு.க.வை இரண்டாக்கி, ஓரணியைத்
தன் வசம் இழுக்க முதல்வரே ஓடோடிச் செல்லும் நேர்மை! பிளந்து நின்ற இவ்வணி எதிர்பார்த்தது
நடக்கவில்லை எனும்போது, மீண்டும் ஒட்டிக்கொண்டனர். இவர்கள் வாக்களித்த நம்மைப் பற்றி
என்ன நினைப்பர் என்ற நாணமே இவர்களுக்குக் கிடையாதா?
இந்நிகழ்வுகளுக்கெல்லாம்
உச்சமாக, மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நால்வர்
பதவியை இராஜினாமா செய்துவிட்டு, படுவேகமாக த.வெ.க.வில் இணைந்துள்ளனர். த.வெ.க.வில்
இவர்கள் இவ்வளவு விரைவாகச் செல்ல காரணம் என்ன? இவர்கள் தம் தொகுதியில் செலவிட்ட நிதியின்
அளவென்ன? தேர்தல் ஆணையம் மூலம் அரசு செய்த செலவு என்ன? இனியொரு தேர்தலை மக்கள் சந்திக்கவேண்டிய அவசியம் என்ன? இவர்களைத்
தெரிவு செய்த குடிமக்களுக்கு இவர்கள் பதில் கூறவேண்டிய கடமையில்லையா?
பதவியை
இராஜினாமா செய்த நொடியில் ஆளும் கட்சியோடு இணைந்த இவர்களின் பதவி பறிக்கப்பெறவேண்டும்.
இனி எந்தத் தேர்தலிலும் பங்குபெறும் வாய்ப்பு மறுக்கப்பெறவேண்டும். இவர்களின் இராஜினாமாவின் பின்னணியை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.
இந்நால்வரும் தேர்தலை, தேர்தல் தந்த சனநாயகத்தை அவமதித்தவர்கள் என்பதே உண்மை.