‘வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ
ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய
பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறங் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா
னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’
என்ற
வள்ளலாரின் வரிகளுக்கேற்ப, தான் திருப்பீடம் வகித்த நாள் முதல் வன்முறைப் போராட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பேராதிக்கம் போன்ற சூழல்களைச் சந்திக்கும் திருத்தந்தை 14-ஆம் லியோ, ‘மாண்புமிகு மானுடம் - செயற்கை நுண்ணறிவு காலத்தில் மனித மாண்பைப் பாதுகாத்தல்’ குறித்து
தன்னுடைய முதல் சுற்றுமடலில் கையெழுத்திட்டுள்ளார்.
மானுட
வரலாறு இன்று ஒரு புதிய திருப்பத்தில் நிற்கிறது. தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence) நம்
வாழ்வின் மொழியை, உறவுகளை, அதிகார அமைப்புகளை மிக வேகமாக மாற்றி வருகின்றன. இத்தகையதொரு சூழலில் திரு அவையின் சமூகக் கோட்பாடுகளின் (Social Doctrine) ஒளியில்
நாம் வாழும் காலத்தைக் கூர்ந்து நோக்க வேண்டியது அவசியமாகிறது.
இதனைத்
திருவிவிலியம் காட்டும் இருவேறு காட்சிப் பிம்பங்களை நம் கண்முன் நிறுத்துகின்றார் திருத்தந்தை லியோ. முதலாவது, மனிதனின் பேராசையினாலும், எல்லாரையும் தன் வசப்படுத்தும் ஆதிக்க மனப்பான்மையினாலும் கட்டப்பட்டு, இறுதியில் மனிதநேயமற்ற சிதைவில் முடிந்த ‘பாபேல் கோபுரம்’
(தொநூ 11:1-9). இரண்டாவது, நெகேமியாவின் வழிகாட்டுதலில் சிதைந்து கிடந்த எருசலேமின் மதில்களை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டுப் பொறுப்போடு செங்கல் செங்கலாகக் கட்டியெழுப்பிய எருசலேம் மதில்கள் (நெகே 2:6).
இன்று
நம் முன்னே இருக்கும் கேள்வி இதுதான்: நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் நாம் எதை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? பாபேல் கோபுரத்தையா? அல்லது எருசலேமின் மதில்களையா?
மனிதன்
தன் உண்மையான அடையாளம் சிதைக்கப்படும்போதுதான் அவன் தன கண்களை உயர்த்திப்
பார்க்கிறான். காரணம், மனித வடிவெடுத்த இறைவார்த்தையின் மறைபொருளில் மட்டுமே மனித தத்துவத்தின் பேராழம் உண்மையாகவே புலப்படுகிறது என்பதைக் கலக்கத்துடன் பதிவு செய்கின்றார் திருத்தந்தை.
1. தொழில்நுட்ப ஆதிக்கமும் ‘அளவீட்டு’ ஆபத்தும் (The Technocratic Paradigm)
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் ‘தொழில்நுட்ப ஆதிக்கக் கோட்பாடு’
(Technocratic Paradigm) இன்று
உலகமயமாக்கப்பட்ட சூழலில் பேராற்றலோடு பரவி வருகிறது என்று கூறியதையும் இங்கு முன்வைக்கின்றார். இந்தச் சிந்தனை முறை எல்லாவற்றையும் ‘செயல்திறன், கட்டுப்பாடு, இலாபம்’ ஆகிய மூன்று குறுகிய கணக்குகளுக்குள் மட்டுமே அடக்கிவிடுகிறது.
தொழில்நுட்பம்
என்பது வெறும் காகிதக் கத்தி அல்ல; அது நடுநிலையான ஒரு கருவியும் அல்ல; எப்போது தொழில்நுட்பம் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இறுதி அளவுகோலாக மாறுகிறதோ, அப்போது எது முக்கியம்? எது தேவையற்ற குப்பை? என்று அதுவே சட்டம் போடுகிறது.
இத்தகைய
சூழலில், இறைவனின் படைப்புகள் அனைத்தும் வெறும் சுரண்டலுக்கான பொருள்களாகவும், மேன்மையான மனிதர்கள் இந்த மாபெரும் இயந்திர அமைப்பின் வெறும் பற்சக்கரங்களாகவும் (Cogs in a system) சுருக்கப்படும்
பேராபத்து நேரிடுகிறது.
2. அறிவியலின் வளர்ச்சியும் ஆன்மிக
விவேகமும்
செயற்கை
நுண்ணறிவு, அறிவாற்றல் அறிவியல் (Cognitive Science), ‘நானோ’ தொழில்நுட்பம்,
ரோபாட்டிக்ஸ் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) போன்ற
கண்டுபிடிப்புகள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும், நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைக் காப்பதற்கும் பெரிதும் உதவக்கூடும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதிகாரமும் ஆற்றலும் பெருகுவது மட்டுமே எல்லாவற்றையும் சிறப்பாக்கிவிடாது.
உரோமானோ
குவார்டினி (Romano Guardini) கூறியதுபோல,
“நவீன மனிதன் தனக்குக் கிடைக்கும் பேராற்றலை நல்வழியில் கையாள்வதற்கான தார்மீகப் பயிற்சியைப் பெறவில்லை.”
ஏற்கெனவே
திருத்தந்தை புனித ஆறாம் பவுல் எச்சரித்ததுபோல விண்வெளிச் சாதனைகளும் வியத்தகு பொருளாதார வளர்ச்சியும், உண்மையான தார்மீக மற்றும் சமூக முன்னேற்றத்தோடு (Moral and Social Progress) இணைந்து
செல்லாவிடில், அவை இறுதியில் மனிதனுக்கே எதிராகத் திரும்பும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக அறநெறி வளரவில்லை என்றால், மனிதனிடம் பொருள்கள் மட்டுமே பெருகும். ஆனால், மனிதத்தன்மை பெருகாது (Having more without being more). மனிதர்கள் அவர்கள்
செய்யும் வேலைகளையும், கொடுக்கும் பலன்களையும் (Outcomes) வைத்து
மட்டுமே மதிப்பிடப்படும் அவலம் நேரிடும்.
3. டிஜிட்டல் உலக அதிகாரக்
குவிப்பு
இன்றைய
டிஜிட்டல் சூழலில் மற்றொரு முக்கிய ஆபத்தும் நிலவுகிறது. இணையதளங்கள், தரவுகள் (Data) மற்றும்
கணினி ஆற்றல் (Computing Power) ஆகியவற்றின்
மீதான கட்டுப்பாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளிடம் இல்லை; மாறாக, அது ஒருசில உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் (Tech Giants) கைகளில்
முடங்கிக்கிடக்கிறது.
யார்
பேசவேண்டும்? எது உலகிற்குத் தெரிய வேண்டும்? யார் சமூகத்தில் பங்கேற்கவேண்டும்? என்பதையெல்லாம் இந்தச் சில ஆற்றல்களே தீர்மானிக்கின்றன. இந்த அதிகாரக் குவிப்பு பொதுமக்களின் பார்வைக்குத் தெரியாதவாறு மிகவும் மறைமுகமாக (Opaque) இயங்குகிறது.
இது சமுதாயத்தில் புதிய அடிமைத்தனங்களையும் புறக்கணிப்புகளையும் ஏமாற்று வேலைகளையும் பெரும் சமத்துவமின்மையையும் உருவாக்குகிறது.
இதனை எதிர்கொள்ள,
சமூகக்
கோட்பாட்டின்
உன்னதக்
கொள்கைகளாவன...
•
மனித நபரின் பிரிக்க முடியாத மாண்பு (Inalienable Dignity).
• பொதுநலம் (Common Good).
•
வளங்கள் அனைவருக்கும் பொதுவானது என்ற கோட்பாடு (Universal Destination of Goods).
• துணைமைத் தத்துவம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் (Subsidiarity & Solidarity).
மேற்கண்ட
விழுமியங்களைக் கொண்டு நாம் இந்த டிஜிட்டல் கட்டமைப்புகளைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
4. செயற்கை நுண்ணறிவும் மானுடத்தின்
உன்னதமும்
செயற்கை
நுண்ணறிவு என்பது மனித அறிவுக்கு இணையானது என்ற தவறான புரிதலை நாம் முதலில் கைவிடவேண்டும். இந்த அமைப்புகள் மனித புத்திசாலித்தனத்தின் சில செயல்பாடுகளை மட்டுமே நகலெடுக்கின்றன (Imitate). கணக்கீட்டு
வேகத்திலும், தரவுகளைக் கையாள்வதிலும் அவை மனிதனை மிஞ்சிய நன்மைகளைத் தரலாம். ஆனால், அவற்றின் ஆற்றல் வெறும் ‘தரவு செயலாக்கத்தோடு’ (Data Processing) முடிந்துவிடுகிறது.
இயந்திரங்களால்
மொழியையோ, ஏன் அனுதாபத்தையோ கூடப் போலியாகச் செய்து காட்ட முடியும். ஆனால், மனிதர்கள் வளரும் ஆன்மிக, உணர்வுப்பூர்வ மற்றும் உறவுச்சார்பு ஞானத்தின் (Wisdom) ஆழத்தை
அவற்றால் ஒருபோதும் எட்ட முடியாது.
நம் தலைமுறையின்
பொறுப்பு
நற்செய்தியின்
(Gospel) ஒளியில்
சமூக உறவுகளைக் கட்டியெழுப்புவது என்பது ஒரே நாளில் முடிந்துபோகும் காரியம் அல்ல; அது தலைமுறை தலைமுறையாகக் கிறித்தவச் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு புனிதமான பணி. தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் திரு அவையானது காலத்தின் அறிகுறிகளை அறிந்து (Signs of the times), மனித
உறவுகள் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப அமைய புதிய வழிகளைத் தேட வேண்டும்.
எனவே,
இன்றைய தொழில்நுட்பச் சவால்களைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. மாறாக, ஒருவருக்கொருவர் செவிமடுத்து, மனித நேயமிக்க, சகோதரத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நம் கைகளில் கறைபடியுமென்று அஞ்சாமல், காலத்தின் கட்டுமான களத்தில் இறங்கி உழைக்க முன்வருவோம். அதுவே நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மாண்புமிகு மானுடத்தைப் பாதுகாக்கும் ஒரே வழி.