news-details
சிறப்புக்கட்டுரை
சுற்றுச்சூழல் ஆன்மிகம் (ஜூன் 5 உலக சுற்றுப்புறச் சூழல் தினம்)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்புகழ் அனைத்தும் உமதே (Laudati si) என்ற சுற்றுமடலானது, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதில் மிக முக்கியமான குறிக்கோளாகச் சுற்றுச் சூழல் ஆன்மிகத்தை அவரது சுற்றுமடல் 6-வது தலைப்பில் வலியுறுத்துகிறார் (பு. எண் 216). இதைப்பற்றி விழிப்புணர்வும் சிந்தனையும் நாம் பெறுவது இன்றைய காலத்தின் அறைகூவலும் அறநெறிக் கட்டாயமும் ஆகும்.

ஆன்மிகம் என்பது குறிப்பிட்ட காரியத்திற்காக நாம் அமைத்திடும் இலக்கும், அந்த இலக்கை அடைந்திட நாம் அமைக்கும் வாழ்க்கைமுறைகளும் ஆகும். சுற்றுச்சூழல் ஆன்மிகத்தின் இலக்கு காயமடைந்த இயற்கையைக் குணப்படுத்தி, நமது பொது இல்லமான பூமித்தாயைப் பேணிக்காப்பதன் மூலமாக, இறையாட்சியைப் படைப்பதாகும்.

இந்த இலக்கை அடைந்திட நாம் அமைக்கும் இறையியல் சிந்தனைகளும், அதன் அடிப்படையில் உருவாக்கும் செயல்திட்டங்களும் சேர்ந்து சுற்றுச்சூழல் ஆன்மிகம் எனலாம். இக்கருத்தை அவரது சுற்றுமடல் அழகாக எடுத்துரைக்கிறது: “நமது நம்பிக்கையிலும் நற்செய்தி மதிப்பீடுகளிலும் வேரூன்றிய சுற்றுச்சூழல் ஆன்மிகத்தை நான் பரிந்துரைக்கிறேன். இந்த ஆன்மிகம் நமது அன்றாட கிறித்தவ வாழ்வின் சிந்தனை, உணர்வு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொணர்வதாக அமையவேண்டும் (பு. எண் :216) என்கிறார்.

பூமித்தாயின் அழுகுரல்        

இயற்கைச் சீற்றங்களால் இன்றைய பூமித்தாய் கதறி அழுகிறாள் (பு. எண் : 49). நமது சுயநலத்திற்காகக் காடுகளை அழித்தல், நகரமயமாக்குதல், மட்காத நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துதல், நீர், மின்சாரம் போன்றவைகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துதல், இயற்கை வளங்களை அழித்தல் போன்றவைகளால் பூமித்தாய் காயமடைந்து கதறி அழுகிறாள்.

இயற்கையை அழிப்பது என்பது நம்மையே அழிவிற்கு உட்படுத்திக்கொள்வதாகும். இதன் விளைவாக நிலநடுக்கம், சுனாமி, வெப்பமயமாதல், எரிமலை வெடிப்பு, புயல், கொரோனா போன்ற இயற்கைப் பேரழிவால் பூமித்தாய் காயமடைந்து கதறி அழுகிறாள். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும்போது மக்கள் எழுப்பும் ஓலக்குரல் பூமித் தாயின் அழுகுரலாய் ஒலிக்கிறது. மக்கள் பெருந் திரளாய் மடியும்போது, நமது இதயம் கனமாகிக் கண்ணீரை வரவழைக்கிறது. இயற்கையைக் காயப்படுத்துவதன் மூலமாக நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் என்ற நிலையே நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இதற்குப் பதில்மொழியின் முக்கிய அம்சமே சுற்றுச்சூழல் ஆன்மிகம் (பு. எண் : 49).

நமது தேவைகளுக்கும் வாழ்க்கைக்கும் பூமித் தாய் தரும் கொடைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை; ஆனால், நமது சுயநலத்தாலும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், அறியாமையாலும் இயற்கையைக் காயப்படுத்துவது மிகக் கொடுமையானது, அநீதியானது, பாவமானது.

இறையியல் பார்வையில்...

இறைவன் இவ்வுலகில் அனைத்தையும் படைத்தபின் தமது சாயலிலும் உருவிலும் மனிதனைப் படைத்தார். ‘அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்என்று மனிதனிடம் பொறுப்பைத் தருகிறார் (தொநூ 1:26,28). ஆக, இறைவன் படைத்த படைப்பைப் பொறுப்புடன் பேணிப் பாதுகாப்பது என்பது இறைவன் நமக்குத் தந்த கடமையாகும். “ஓய்வு நாளில் உன் மாட்டிற்கும் கழுதைக்கும் ஓய்வு தரவேண்டும் (விப 23:12) என்றும், “உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை; ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள் (திபா 50: 9-12) என்றும், “அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக!” (திபா 150:6) போன்ற இறை வார்த்தைகள், இறைவன் இயற்கையோடு ஐக்கியமாகி இருப்பதை உணர்த்துகின்றன.

இயற்கை இறைவன் வாழும் ஆலயமாக உள்ளது. இயற்கை பாதிக்கப்படும்போது அங்கு இறைமை சிதைவடைகிறது. இயற்கை என்பது இறைமையின் நீட்சியாக உள்ளது (EXTENSION OF DIVINITY). ஆகையால் இயற்கை அழிக்கப்படும் போது இறை-மனித உறவு பாதிக்கப்படுகிறது. எனவே, இயற்கையை அழிப்பது என்பது அத்துடன் இறைமையைச் சிதைப்பது. ‘நம்மை நாமே அழித்துக் கொள்வதுஎன்ற இறையியல் உண்மையே, சுற்றுச் சூழல் ஆன்மிகத்தின் அடிப்படையும் ஆணிவேரும்  ஆகும்.

சமுதாயப் பார்வையில்...

இயற்கையைச் சேதப்படுத்தும்போது அதைச் சார்ந்து வாழும் ஏழை எளிய பூர்வக்குடிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது (பு. எண்:49). அவர்கள் சப்தம் இன்றி மடிகின்றனர். எனவே, இது சமூக நீதிக்கு எதிரான பாவமாகும். ‘உலகம் நமது பொதுவீடு; அதைப் பாதுகாப்பது நமது கடமை (பு. . எண் : 1).  எனவே, நமது சுதந்திரத்தைச் சமுதாயப் பொறுப்புடன் பயன்படுத்தவேண்டும். Nature is not only the  extension of divinity and but also humanity. மானிடத்தின் நீட்சியாகவும் இயற்கை அமைகிறது.

உளவியல் சிந்தனையில்...

இயற்கை என்பது மனிதனின் வாழ்வாதாரம். மனிதனோடு நெருங்கிய உறவையும் சார்புத் தன்மையையும் கொண்டது. மனிதன் இன்றி இயற்கை வாழலாம்; ஆனால், இயற்கையின்றி மனிதன் வாழ இயலாது என்பதை அறிந்து, நமது பொது வீடாகிய இப்பூமியைப் (பு. எண் : 1) பொறுப்புடன் பேணிக்காக்கவேண்டும். இயற்கை மனிதனின் வாழ்வைக் காக்கும் தாயாகவும், பாடங்களைப் போதிக்கும் நல்லாசானாகவும் விளங்குகிறது. இயற்கையை இரசித்து மகிழ்வது இறுக்கத்தைப் போக்கும் அருமருந்தாகவும் அமைகிறது.

ஆன்மிகப் பார்வையில்...

இயற்கையின் அழகை இரசித்து, அதில் இறைப் பிரசன்னத்தைக் கண்டு அதைத் தியானிப்பது ஒரு செபமாகும், ஆன்மிக அனுபவமாகும். இறுக்கம் நிறைந்த இவ்வுலகில், இயற்கையோடு அன்புறவு கொண்டு, அதை நேசித்து, இயற்கை போதிக்கும் மதிப்பீடுகளின்படி வாழ்வது உண்மையான இறுக்கமற்ற இறையாட்சி வாழ்வாகும். இக்கருத்தின் அடிப்படையில்தான் புனித பிரான்சிஸ் அசிசியார் கழுதையைசகோதரன்என்றும், குருவியைசகோதரிஎன்றும் மதித்து உறவாடினார். அதுவே நமது சுற்றுச்சூழல் ஆன்மிகத்தின் இலக்காகும் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (பு. எண் : 49). இக்கருத்தையே புனித இஞ்ஞாசியார் தனது ஆன்மிகப் பயிற்சிகளில் இறையன்பை அடைந்திட காட்சித் தியானங்களாகத் தருகிறார்  (ஆன்மிகப் பயிற்சி, எண் 231-237). கடவுளை அனைத்திலும் அனைவரிலும் காணும் ஆன்மிக அனுபூதி நிலையை அவர் சுட்டிக்காட்டுகிறார்

திருத்தந்தை காட்டிய வழியில்...

திருத்தந்தை பிரான்சிஸ் நாம் செய்யவேண்டிய சிறிய செயல்திட்டங்களையே பரிந்துரைக்கிறார் (பு. எண் : 211). எடுத்துக்காட்டாக, நெகிழிப் பொருள்களைக் குறைத்துக்கொள்வது, தண்ணீர் சிக்கனம் காண்பது, மின்விளக்குகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, பொது வாகனங்களைப் பயன்படுத்துவது பேன்றவை மிகச் சிறப்பான பலன் அளிக்கும் (பு. எண் : 211).

சிந்தனை அளவில் மாற்றம் மலர்ந்திடவேண்டும். எனவே, சிறு வயது முதல்  சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும், சுற்றுச்சூழல் கல்வியும் மிக மிக அவசியம். அறிவியல்பூர்வமான அணுகுமுறையில் நமது செயல்திட்டங்கள் அமைந்திட வேண்டும் (பு. எண் : 210).

நமது மனமாற்றத்திற்கு உதவியாக நம் ஆன்மிக வழிபாட்டு முறைகள் சுற்றுச்சூழல் பார்வையில் நடத்தப்படவேண்டும். எடுத்துக்காட்டாக, விழிப்புணர்வுப் பாடல்கள், திருப்பலிக் கொண்டாட்டங்கள், நவநாள்கள், ஆன்ம ஆய்வுகள், தியானங்கள், பல்சமய வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் (பு. எண் : 210, 220).

இளம் உள்ளங்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் கல்வியையும் வளர்த்திடுவோம். இயற்கையைக் காக்கும் அன்றாட சிறு சிறு செயல்களைச் செய்திடுவோம். இறுக்கமற்ற இறையாட்சி வாழ்வினை மலரச் செய்வோம்.