ஸ்பெயின் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை லியோ, தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாகப் பார்சிலோனா நகரை வந்தடைந்தார். அங்குள்ள புகழ்பெற்ற ‘திருச்சிலுவை மற்றும் புனித யுலாலியா’ பேராலயத்தில் நடைபெற்ற நண்பகல் வழிபாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார். அங்குக் கூடியிருந்த ஆயர்கள், துறவியர் மற்றும் ஏராளமான இளைஞரிடையே உரையாற்றிய திருத்தந்தை திரு அவையை ‘மணமகள்’ மற்றும் ‘கிறிஸ்துவின் உடல்’ ஆகிய இரு திருவிவிலிய உருவகங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். மேலும், “திரு அவை என்பது இறைவனின் அன்பால் உருவானது. ஓர் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளைப் போல நாம் பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருந்தாலும், தூய ஆவியானவரால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம். போர்களாலும் பிரிவினைகளாலும் சிதைந்து போயிருக்கும் இவ்வுலகிலும், தனி மனிதவாதம் பெருகிவரும் தற்காலச் சமூகத்திலும், கிறித்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைவு, வரவேற்பு, நல்லிணக்கம் மற்றும் அமைதியின் இறைவாக்கினர்களாகவும் சாட்சிகளாகவும் திகழவேண்டும். தியாகங்களைச் செய்வதன் வாயிலாக இந்த ஒன்றிப்பைக் கட்டியெழுப்பவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.