“நீதிநெறிமிக்க சமுதாயம் ஒவ்வொரு மனித உயிரையும் அமைதியையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது!”
உலக
அரசியல் அரங்கிலும், ஆன்மிகத் தளத்திலும் 2026-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் எட்டாம் நாள்
ஒரு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக விடிந்தது. ஸ்பெயின் நாட்டின் தலைநகரான
மாட்ரிட்டில் உள்ள பிரதிநிதிகள் சபையின் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கத்தோலிக்கத்
திரு அவையின் உச்சத்தலைவர் திருத்தந்தை 14-ஆம் லியோ ஆற்றிய உரை, உலகளாவிய மனிதநேயத்தின்
பிரகடனமாக ஒலித்துள்ளது. மதச்சார்பின்மை தழைத்தோங்கியுள்ள ஓர் ஐரோப்பிய நாட்டின் நாடாளுமன்றத்தில்,
திருத்தந்தை ஒருவர் உரையாற்றுவது இதுவே முதன்முறை என்பதால், இது வரலாற்றின் பக்கங்களில்
அழியாத்தடம் பதித்துள்ளது.
சுமார்
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட இந்த ஆறு நாள் பயணத்தின்
மூன்றாம் நாளில், அரசியல் அதிகாரத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் திருத்தந்தை
லியோ நுழைந்தது, ஆன்மிகமும் அரசியலும் அறத்தின் அடிப்படையில் எவ்வாறு இணையவேண்டும்
என்பதற்கான இலக்கணமாக அமைந்தது.
அவரது
இந்த உரை இன்றைய உலகிற்கு ‘காலத்தின் கட்டாயம்’ என்பதையும் உணர்த்தியிருக்கிறது.
அழைப்பில் மலர்ந்த வரலாற்று
மாற்றம்
பதினாறாம்
நூற்றாண்டில் உலக வல்லரசாகத் திகழ்ந்த ஸ்பெயின், கத்தோலிக்கத் திரு அவையோடு பல நூற்றாண்டுகால
ஆழமான பிணைப்பைக் கொண்டது. இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் ஜெனரல் பிரான்சிஸ்கோ
ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் திரு அவையின் செல்வாக்கு அரசியலில் அதிகமாகப்
பரவியிருந்ததன் விளைவாக, 1970-களில் சனநாயகம் மலர்ந்த போது, திரு அவையின் மீதான பொதுமக்களின்
அணுகுமுறை மதச்சார்பின்மையை நோக்கி வேகமாக நகர்ந்தது. இத்தகையதொரு சூழலில், கத்தோலிக்கத்
திரு அவையை ஒரு மாபெரும் ஆன்மிகத் தூணாக அங்கீகரித்து, ஸ்பெயின் நாடாளுமன்றம் அவருக்கு
அழைப்பு விடுத்ததே ஒரு பெரும் வரலாற்று மாற்றமாகும்.
கொமிலாஸ்
போண்டிஃபிகல் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய உறவுகள் துறை பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான
எமிலியோ சயன்ஸ் ஃபிரான்சிஸ் (Prof. Emilio Sáenz
Francés) குறிப்பிடுவதுபோல:
“இந்த நிகழ்வு அரங்கேறாவிட்டாலும் திருத்தந்தை லியோவின் ஸ்பெயின் பயணம் வரலாற்றுச்
சிறப்புமிக்கதுதான். ஆனால், ஜூன் 8, 2026 திங்கள்கிழமை காலையை அவர் நாடாளுமன்ற வளாகத்தில்
தொடங்கியதன் மூலம், திரு அவையின் சிந்தனைகளுக்கும் தற்போதைய ஸ்பானிய அரசியல் விவாதங்களுக்கும்
இடையே ஒரு துடிப்பான, நீடித்த உறவு இன்னும் சாகாமல் உயிர்ப்போடு இருக்கிறது என்பது
நிரூபிக்கப்பட்டுள்ளது.”
திருத்தந்தையின்
வருகையைக் கண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, ஏழு நிமிடங்களுக்கும்
மேலாக “விவா எல் பாப்பா!” (Viva el Papa!) என முழக்கமிட்டு நெகிழ்ந்தது, திரு
அவையின் மீதான தற்காலச் சமூகத்தின் தார்மீக மரியாதையைக் காட்டுகிறது.
இறையாண்மையும் திரு அவையின்
உரிமையும்
அரசியல்
அமைப்புகளின் சட்டப்பூர்வமான இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குவது திரு அவையின் நோக்கமன்று
என்பதைத் திருத்தந்தை லியோ மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் எடுத்துரைத்துள்ளார்.
அண்மைக்கால சனநாயகம் கடுமையான அரசியல் துருவமுனைப்பைச் (Polarization)
சந்தித்து வரும் வேளையில், உலகளாவிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் எதார்த்தங்கள்
குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் முழுத் தார்மீக உரிமை திரு அவைக்கு
உண்டு என்பதை அவர் நிலைநாட்டியுள்ளார். அதிகார வர்க்கத்தின் மொழியைக் கடந்து, எளிய
மனிதனின் இதயங்களைத் தொடும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.
சலமன்கா சிந்தனைப் பள்ளியும்
தற்கால சனநாயகச் சிதைவும்
திருத்தந்தை
லியோவின் உரையில் மிக முக்கியமான தத்துவார்த்தப் பகுதி, அவர் ஸ்பெயினின் புகழ்பெற்ற
‘சலமன்கா சிந்தனைப் பள்ளி’யைக் (School of Salamanca)
குறிப்பிட்டதாகும். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஏகாதிபத்தியம் உலகை வென்றுகொண்டிருந்த
காலத்தில், மனித உரிமைகள் மற்றும் முதலாளித்துவம் குறித்த கோட்பாடுகளை முதன்முதலில்
வகுத்த அறிவுஜீவிகள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்களாவர்.
கிறித்தவ
விழுமியங்களின் அடிப்படையில் உருவான இச்சிந்தனைப் பள்ளி, உலகியல் அதிகாரங்களுக்கு ஒரு
தார்மீக எல்லை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியது. இன்றைய காலகட்டத்தில், உலக வல்லரசுகள்
எந்தவித தார்மீகக் கட்டுப்பாடுகளும் இன்றி, சனநாயகத்தின் இன்றியமையாத அங்கங்களான ‘அதிகாரப்
பகிர்வு மற்றும் சமநிலை’ அமைப்புகளைச் சிதைத்து வரும் வேளையில்,
சலமன்கா பள்ளியின் கோட்பாடுகள் மிக முக்கியமான எச்சரிக்கையாகும். மேற்கத்திய பண்பாட்டின்
தொட்டிலாகக் கருதப்படும் ஸ்பெயின், நாடாளுமன்றத்திற்கும் சனநாயத்திற்குமான சமநிலையைப்
பேண வேண்டியதன் அவசியத்தைத் திருத்தந்தை நினைவுகூர்ந்துள்ளார்.
மனித கண்ணியத்திற்கு
எழும் சவால்களும் திருத்தந்தை வழிகாட்டுதலும்
ஒரு
சமுதாயம் உண்மையான நீதிநெறிமிக்க சமுதாயமாக மாறவேண்டுமெனில், அது ஒவ்வொரு மனிதனின்
உள்ளார்ந்த கண்ணியத்தையும் அங்கீகரித்துச் சட்டங்களை இயற்றவேண்டும். அத்தகைய சட்டமே
அடித்தட்டு மக்களின் அரணாகத் திகழ முடியும்.
“கருவிலிருக்கும்
குழந்தை முதல் இயற்கை மரணம்வரை அனைத்து உயிர்களும் போற்றப்பட வேண்டும்; பலவீனமானவர்களைப்
புறந்தள்ளும் ‘நுகர்வுக் கலாச்சாரம்’ (Throwaway
culture) ஒழிய வேண்டும்” எனும் ‘உயிர்ப் பாதுகாப்பு’ பற்றியும், “சமூகத்தின் முதலாவது இயற்கை அடித்தளம் குடும்பமே;
தலைமுறைகளை இணைக்கும் ஆன்மிக மற்றும் சமூக நிலைத்தன்மை இங்குதான் பிறக்கிறது. ஆகவே,
குடும்பக் கட்டமைப்பு சிறப்புற அமையவேண்டும்” என்றும்,
“புதிய தலைமுறையினர் உண்மையை நேசிக்கவும், மனித கண்ணியத்தை மதிக்கவும் கற்றுத்தரும்
பள்ளிக்கூடங்களாக நமது கல்வி நிறுவனங்கள் மாறவேண்டும்” என்றும்
சமூகத்தின் அடிப்படை விழுமியங்களைத் திருத்தந்தை
வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர்ந்தோரின் அவலமும்
சமூக நீதியும்
இன்று
உலகையே அச்சுறுத்தும் மிக மோசமான மனிதநேய நெருக்கடி, புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின்
துயரமாகும். ஸ்பெயினின் தற்போதைய சோசலிச அரசு, புலம்பெயர்ந்தோருக்குச் சாதகமான பொருளாதார
மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த ஐரோப்பாவும் உலகமும்
இதில் இன்னும் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இது
குறித்து அவர் இருமுனைச் சமூக நீதியை (Twofold demand of social justice) முன்வைத்தி ருக்கிறார். ஒன்று, பாதுகாப்பான
சட்டப்பூர்வ வழிகள். அதாவது, வறுமை, போர் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு
வருவோருக்கு மரியாதையான வரவேற்பும், அவர்கள் புதிய சமூகத்தோடு ஒருங்கிணைவதற்கான சமவாய்ப்புகளும்
வழங்கப்படவேண்டும். மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் அவர்கள் சிக்குவதைத் தடுக்க
பன்னாட்டுக் கூட்டுறவு அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு, தாய்நாட்டிலேயே
வாழும் உரிமை. அதாவது, வறுமை, பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக
எவரும் தங்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறக் கூடாத சூழ்நிலையை அந்தந்த நாடுகளிலேயே
உருவாக்க உலக நாடுகள் பாடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத் தவறுகளுக்குத்
திரு அவையின் மன்னிப்பு
திருத்தந்தையின்
உரையில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு குறிப்பு, திரு அவை தன் கடந்த காலத் தவறுகளை வெளிப்படையாக
ஒப்புக்கொண்டதாகும். அட்லாண்டிக் கடந்த அடிமை வணிகத்திலும், காலனித்துவ ஆதிக்கத்திலும்
திரு அவையின் சில பிரிவுகள் ஆற்றிய பங்கை மறைக்காமல், “கிறித்தவ விழுமியங்களின் உன்னதத்தைத்
திரு அவையே சில காலங்களில் கடைப்பிடிக்கத் தவறியுள்ளது” என்று
கூறி, வத்திக்கானின் சார்பில் அண்மையில் அவர் கோரிய மன்னிப்பை மீண்டும் நினைவுபடுத்தினார்.
இது அவரது வெளிப்படையான நேர்மையைக் காட்டுகிறது.
ஆயுதப் பெருக்கத்திற்கு
எதிரான அறைகூவல்
இன்று
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள போர் பதற்றமும், உக்ரைன் மீதான இரஷ்யாவின்
படையெடுப்பும் உலகை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக ஆபத்தான புவிசார் அரசியல்
சூழலுக்குள் தள்ளியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டங்களை
(Defense Budgets)
உயர்த்தி, ஆயுதப் பெருக்கத்தில் ஈடுபட்டு வருவதைக்
கடுமையாகச் சாடிய திருத்தந்தை, “ஆயுதங்கள் தற்காலிக அமைதியைக் கொண்டுவரலாமே தவிர, ஒருபோதும்
நிரந்தரமான நீதியான அமைதியைக் கட்டியெழுப்ப முடியாது; ஒவ்வொரு போரும் இறுதியில் மனிதகுலத்தின்
பேச்சுவார்த்தை திறனுக்குக் கிடைத்த மாபெரும் தோல்வி” என்று
தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவும்,
போர்க்கள அறமும்
நவீனத்
தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) இராணுவத் துறையில் புகுத்தப்படுவதைக்
குறித்துத் திருத்தந்தை விடுத்த எச்சரிக்கை மிகக் கூர்மையானது. உயிர் மற்றும் இறப்பு
குறித்த இறுதி முடிவுகளை ஒருபோதும் தானியங்கி அமைப்புகளிடமோ (Automated Systems)
அல்லது கணினி அல்காரிதம்களிடமோ ஒப்படைக்கக்கூடாது. மனிதனின் தார்மீகப் பொறுப்புகளுக்குப்
பதிலாக, தொழில்நுட்பத்தைப் புகுத்தக்கூடாது என்று உலகச் சமூகத்திற்கு அவர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
அதிகாரத் தொனி கொண்ட
மொழியைக் களைதல்
இன்றைய
சூழலில் திருத்தந்தை லியோவின் இந்த உரை மிக அவசரமான, அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பல்வேறு ஊழல் புகார்களாலும், அரசியல்
துருவமுனைப்பாலும் சட்டம் இயற்ற முடியாமல் தவித்து வரும் இந்த இக்கட்டான அரசியல் சூழலில்,
திருத்தந்தையின் வார்த்தைகள் ஒரு சிறப்பான திசைகாட்டியாக (Moral Compass)
வந்துள்ளன.
‘அரசியல்
எதிரிகளைத் தொடர்ந்து இழிவுபடுத்துவது சனநாயகம் ஆகாது’ என்று
எச்சரித்த திருத்தந்தை, போர்களும் வன்முறைகளும் கொண்ட இச்சூழலில் நமது மொழியும் அன்றாட
உரையாடலும் அன்பை விதைப்பதாகவும் நல்லுறவை வளர்ப்பதாகவும் அமையவேண்டும்; அதற்கு, ‘அதிகாரத்
தொனி கொண்ட மொழியைக் களைதல்’ (Disarming
Language) என்ற சிறப்பானதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.
வன்முறையை
ஒழிப்பதற்கு முன்பாக நமது சொற்களில் உள்ள வன்முறையை நீக்கவேண்டும். உறுதிப்பாட்டிற்கு
இகழ்ச்சி தேவையில்லை; கருத்து வேறுபாட்டிற்கு அவமதிப்பு தேவையில்லை. மாற்றுக்கருத்துடையோரையும்
மதித்துப் பேசும் பண்பை மீட்டெடுத்தால் மட்டுமே, பேச்சுவார்த்தைகள் மூலம் உலகளாவிய
அமைதியை எட்ட முடியும். ஸ்பெயின் நாடு உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்று
அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இறுதியாக,
நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, “சட்டத்திட்டங்களை இயற்றும்போது காகிதங்களைப் பார்க்காமல்,
இரத்தமும் சதையுமான மனிதர்களைப் பாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை லியோவின் செய்தி,
உலகத் தலைவர்கள் அனைவருக்குமான படிப்பினையாகும். புனித யாக்கோபின் (Saint James)
ஆசியும், அன்னை மரியாவின் (Our Lady of the Pillar) பேரருளும் கொண்ட ஸ்பெயின் திருநாடு,
அமைதி மற்றும் மனிதநேயத்தின் புகலிடமாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்தி, அவர் தனது
உரையை நிறைவு செய்துள்ளார்.
திருத்தந்தை
14-ஆம் லியோவின் இந்த மாட்ரிட் பிரகடனம், வெறுமனே ஒரு மதத் தலைவரின் உரையல்ல; மாறாக,
அது உலகளாவிய அமைதி, மனிதக் கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை நோக்கி மனிதகுலம் பயணிக்கவேண்டிய
பாதையைக் காட்டும் ஒரு கலங்கரை விளக்கமாகும்!