இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு இளையோரை உருவாக்குவது குறித்து மேய்ப்புப்பணிச் சிந்தனை (சென்ற இதழ் தொடர்ச்சி)
விவிலிய கால இளையோர்
செயலற்ற பார்வையாளர்கள் அல்லர்
இளையோரைப்
பொழுதுபோக்குகளைச் செயலற்று நுகரும் நுகர்வோராக திருவிவிலியம் காட்டவில்லை; மாறாக,
மனிதகுலத்திற்கான இறைவனின் திட்டத்தில் துணிச்சலோடு பங்கேற்பாளர்களாகவே முன்வைக்கிறது.
அனுபவம் வாய்ந்த போர்வீரர்களே நடுங்கி நின்றபோதும், தாவீது எதார்த்தத்தை விட்டு ஓடிவிடவில்லை;
அவர் கோலியாத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டார்: “இந்தப் பெலிஸ்தியன் பொருட்டு யாருடைய
இதயமும் கலங்க வேண்டியதில்லை” (1சாமு 17:32). சமூகத்தை அச்சுறுத்தும்
அரக்கர்களான அநீதி, போதை, ஊழல், பயம் மற்றும் ஒழுக்கக் குழப்பம் ஆகியவற்றை இளையோர்
துணிவோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதை தாவீது நமக்குக் கற்பிக்கிறார். யோசேப்பு சோதனைகளை
எதிர்த்து நின்றார்; துரோகத்தையும் சிறைவாசத்தையும் சகித்துக்கொண்டார்; இறுதியாக, தன்
ஞானத்தாலும் நேர்மையாலும் நாடுகளைக் காப்பாற்றினார்: “நீங்கள் எனக்குத் தீமை செய்ய
நினைத்தீர்கள்; ஆனால், கடவுள் அதை நன்மையாக முடித்தார்”
(தொநூ 50:20). பகுத்தறிவு, உணர்ச்சி முதிர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் அடையாளமாக
யோசேப்பு விளங்குகிறார். தலைவர்கள் நம்பிக்கையிழந்தபோது,
யூதித் துணிச்சலான நம்பிக்கையோடு எழுந்து நின்றார்: “ஆண்டவர் ஒரு பெண்ணின் கையின் மூலமாய்
அவனை வீழ்த்துவார்” (யூதித் 8:33). அவர் ஒழுக்கநெறித்
தெளிவு, ஆன்மிகத் துணிவு மற்றும் சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாகத்
திகழ்கிறார்.
அனைத்திற்கும்
மேலாக, இயேசு கிறிஸ்து தாமே சமூக உணர்வுள்ள ஓர் இளைஞருக்குரிய மிகச்சிறந்த முன்மாதிரியாக
நம் முன்னே நிற்கிறார். அவர் இளம் வயதிலேயே போதகர்கள் நடுவில் அமர்ந்து, அவர்கள் பேசுவதைக்
கேட்டும், அவர்களிடம் வினவியும், ஞானத்தைத் தேடுபவராயும் காணப்பட்டார் (லூக்
2:46). அவர் வளர வளர ஏழைகள், துன்புறுவோர், ஒதுக்கப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர்மீது
மிகுந்த அக்கறை கொண்டவராக மாறினார். அவருடைய இளமைப் பருவம் சுயநலத்தால் வடிவமைக்கப்படவில்லை;
மாறாக, இரக்கம், இறைவேண்டல், பொறுப்புணர்வு மற்றும் இறையாட்சியின் மீதான அர்ப்பணிப்பு
ஆகியவற்றாலேயே வடிவமைக்கப்பட்டது. திருவிவிலிய கால இளையோர் ஒருபோதும் பொழுதுபோக்குக்
கலாச்சாரத்தால் உருவாக்கப்படவில்லை; அவர்கள் நம்பிக்கை, ஒழுக்கம், துணிவு மற்றும் மனிதகுலத்திற்கான
சேவை ஆகியவற்றாலேயே உருவாக்கப்பட்டார்கள்.
நமது கல்வி நிறுவனங்கள்
தோல்வியடைந்து விட்டனவா?
இந்த
நெருக்கடி, வேதனையானது என்றாலும் அவசியமான சில கேள்விகளை நம்மிடம் எழுப்புகிறது. நம்
இளைஞர்களுக்கு நாம் எத்தகைய கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்? நமது பள்ளிகளும் கல்லூரிகளும்
நற்பண்பு, சமூக விழிப்புணர்வு, குடிமைப் பொறுப்பு மற்றும் தார்மீகத் துணிவு ஆகியவற்றை
முற்றிலும் புறக்கணித்துவிட்டு, வெறும் தேர்வுகளுக்கும் வேலைவாய்ப்பிற்கும் மட்டுமே
அவர்களைத் தயார்படுத்தி இருக்கின்றனவா? நாம் அவர்களுக்குப் போட்டியிடக் கற்றுக் கொடுத்திருக்கிறோமே
தவிர, பிறர்மீது அக்கறை கொள்ளக் கற்றுக் கொடுக்கவில்லை. நுகரக் கற்றுக் கொடுத்திருக்கிறோமே
தவிர, பங்களிப்புச் செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. சாதிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறோமே
தவிர, சேவை செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. நவீனக் கல்வியானது பெரும்பாலும் தொழில்நுட்பத்
திறன் கொண்ட நபர்களை உருவாக்குகிறது. ஆனால், சமூகத்தோடு தொடர்பில்லாத மனிதர்களையே அது
உருவாக்குகிறது. அது இரக்கமில்லாத நிபுணர்களையும், ஒழுக்கநெறி சார்ந்த அடித்தளம் இல்லாத
சாதனையாளர்களையும், கலாச்சார வேர்களற்ற நுகர்வோரையும் மட்டுமே உருவாக்குகிறது.
உண்மையான
கல்வி என்பது வெறும் தகவல்களைக் கடத்துவது மட்டுமே அல்ல; அது மனச்சான்றை உருவாக்குவதாகும்.
ஆழமாகச் சிந்திக்கவும், தாராளமாக அன்பு செய்யவும், துணிவோடு செயல்படவும், சமூகத்தில்
பொறுப்புணர்வுடன் நிமிர்ந்து நிற்கவும் கூடிய இளம் ஆண்களையும் பெண்களையும் கல்வி உருவாக்க
வேண்டும். உண்மையான மனித உறவுகளைப் பலவீனப்படுத்தும் ‘தூக்கியெறியும் கலாச்சாரம்’ (throwaway
culture) மற்றும் ’எண்மத் தொழில்நுட்பத் தனிமை’ (digital
isolation) ஆகியவற்றிற்கு எதிராக, திருத்தந்தை
பிரான்சிஸ் தொடர்ந்து எச்சரித்து வந்தார். அவர் தனது ‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christus Vivit) என்ற திருத்தூது அறிவுரை மடலில்,
“நுகர்வோர் சமூகத்தின் கவர்ச்சியான மற்றும் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட சலுகைகளுக்கு
எதிராக, இளையோர் தங்களின் விமர்சனப்பூர்வமான சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்” (Christus Vivit, 105) எனக் குறிப்பிடுகிறார். மேலும்,
“எண்மத் தொழில்நுட்ப உலகம் உங்களைச் சுயநலம், தனிமை மற்றும் வெற்று இன்பங்களுக்குள்
மூழ்கடிக்கும் அபாயத்திற்கு உள்ளாக்கக்கூடும்” என்றும்
அவர் கூறுகிறார். இந்த வார்த்தைகள் இன்றைய நமது சூழலுக்கு மிகவும் பொருத்தமானவையாகும்.
திரு அவையின் ஞானம்
தீய
செல்வாக்குகளின் மூலம் மனம் சீரழிவதைக் குறித்துத் திரு அவைத் தந்தையர் நமக்கு எச்சரித்துள்ளனர்.
“மனம் உடலுக்குக் கட்டளையிடும் போது, உடல் உடனடியாக அதற்குக் கீழ்ப்படிகிறது. ஆனால்,
மனம் தனக்குத்தானே கட்டளையிடும் போது, அது எதிர்ப்பைச் சந்திக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் ஹிப்போ நகரின் புனித அகுஸ்தினார்.
இந்த உள்மன எதிர்ப்பை ஒழுக்கத்தின் மூலமும், இறையருளின் மூலமுமே வெல்ல வேண்டும். இளையோரை
உருவாக்குவதே சமூகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது என்று எச்சரித்த புனித ஜான்
கிறிசோஸ்தம், “பிள்ளைகளைப் புறக்கணிப்பது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும்” என்று கூறியுள்ளார். எனவே, இளம் மனங்கள் எண்மத் தொழில்நுட்ப
சக்திகளாலும், வணிக நலன்களாலும், கொள்கை ரீதியான முரண்களாலும் முற்றிலும் வடிவமைக்கப்படும்போது,
திரு அவையினால் வெறும் பார்வையாளராக அமைதியாக இருக்க முடியாது.
திரு அவை செய்ய வேண்டியது
என்ன?
நமது
மறைமாவட்டங்கள், பங்குகள், இளைஞர் இயக்கங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை
முழுமையான மனித உருவாக்கத்திற்கான மையங்களாக மாறவேண்டும். திரு அவையின் பணி என்பது
வெறும் அருளடையாளங்களை வழங்குவது மட்டுமல்ல; மாறாக, நம்பிக்கை, கலாச்சாரம், மொழி மற்றும்
ஒழுக்க விழுமியங்களில் வேரூன்றிய, சமூகப் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதுமாகும்.
எனவே, தற்காலப் போக்குகளைவிட உண்மைக்கும், சுயவிளம்பரத்தை விடச் சேவைக்கும், புகழைவிட
ஞானத்திற்கும், வசதி வாய்ப்புகளை விடத் தியாகத்திற்கும் மதிப்பளிக்கும் இளம் மனங்களை
நாம் வடிவமைக்கவேண்டும். நம் இளைய தலைமுறையினர் சமூகத்தோடு பொறுப்புணர்வுடன் தங்களை
ஈடுபடுத்திக் கொள்ள அவர்களைத் தயார்படுத்தும் அதேவேளையில், அவர்கள் தங்களது நம்பிக்கை,
தமிழ்ப் பண்பாடு, மொழி மற்றும் நமது நாகரிகத்தின் ஆன்மிகச் செழுமை ஆகியவற்றில் ஆழமாக
வேரூன்றி நிலைத்திருக்க நாம் அவர்களுக்கு உதவவேண்டும்.
பங்கு
இளையோர் குழுக்கள் வெறும் கொண்டாட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் அமைப்புகளாக
மட்டுமே சுருங்கிவிடக் கூடாது; அவை தலைமைத்துவம், இறைவேண்டல், சமூக விழிப்புணர்வு மற்றும்
அறிவுசார் உருவாக்கத்திற்கான மையங்களாக மாற வேண்டும். அதேபோல, நமது கத்தோலிக்கக் கல்வி
நிறுவனங்கள் விமர்சனப் பார்வைகொண்ட சிந்தனை, தார்மீகப் பொறுப்புணர்வு, குடிமை விழிப்புணர்வு,
உரையாடல், சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் பொது நலன் மீதான அக்கறை ஆகியவற்றை வளர்க்க
வேண்டும். அனைத்திற்கும் மேலாக, இளையோர் ஏழைகளையும் துன்புறுவோரையும், விளிம்புநிலை
மனிதர்களையும் களத்தில் சந்திக்கவேண்டும். ஏனெனில், மனிதகுலத்தின் காயங்களைத் தொட்டுணராத
வரை, நம்பிக்கை என்பது ஆழமற்றதாகிவிடும், கல்வி தனது ஆன்மாவை இழந்துவிடும்.
ஆகவே,
நமது இளைஞர்கள் எண்மத் தொழில்நுட்ப ஏமாற்று வேலைகளுக்குப் பலியாகாமல், உண்மையின் சாட்சிகளாக
மாறட்டும். அவர்கள் கலாச்சாரத்தைச் செயலற்று நுகரும் நுகர்வோராக இல்லாமல், நீதியும்
இரக்கமும் நிறைந்த ஒரு சமூகத்தைப் படைப்பவர்களாக மாறட்டும். அவர்கள் தற்காலப் போக்குகளைப்
பின்பற்றுபவர்களாக இல்லாமல், கிறிஸ்துவின் சீடர்களாக விளங்கட்டும். நமது குடும்பங்கள்,
பள்ளிகள், பங்குகள், இளையோர் பணிக்குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து,
நமது இளைஞர்களின் தார்மீக மற்றும் அறிவுசார் அடித்தளங்களை மறு சீரமைக்கும் இந்தப் புனிதமான
பணியில் கைகோர்த்துச் செயல்படட்டும்.
நமது
இளையோர் அனைவரும் இவ்வுலகிற்கு ஒளியாகவும், உண்மை, நீதி, இரக்கம் மற்றும் நம்பிக்கை
ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு புதிய நாகரிகத்தைக் கட்டியெழுப்புபவர்களாகவும் மாறுவதற்கு,
ஆண்டவர் தாமே அவர்களை வழிநடத்தி வலிமைப்படுத்துவாராக.
உங்கள்
அனைவருக்கும் என் செபமும் ஆசிரும்!