news-details
சிறப்புக்கட்டுரை
விடுதலையா? கட்டுப்பாடா? (இளமை ஒரு சவால்! – 04)

ரு நெருங்கிய நண்பருக்கு இரண்டு பையன்கள். முதல் பையனை மிகவும் கண்டிப்பாக வளர்த்தார். பையன் வெறுப்புடனே வளர்ந்தான். அம்மாவின் பாசம் கைகொடுத்தது. உருப்படியாக வளர்ந்தபின் தன் குடும்பத்துடன் அப்பாவிடமிருந்தே விலகிக்கொண்டான்.

இரண்டாம் பையனுக்கு அப்பாவும் செல்லம், அம்மாவும் செல்லம். சுற்றுச்சூழல் மோசம். புகை, குடி என்று கெட்டுப்போனாலும், பெற்றோரிடம் பாசமாக ஒட்டிக்கொண்டான். பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். மனைவி, பிள்ளைகளோடு வறுமையில் சிக்கிக்கொண்டான். சொத்தில் தன் பங்கைக் கேட்டான். பெரிய வீடு. நடுவில் சுவர்கட்டி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பெற்றவர்கள் ஒருபக்கம் சோகத்தைச் சுமந்துகொண்டு தள்ளாத வயதில் காலம் தள்ளுகிறார்கள்.

இளைஞர்கள் சுதந்திரமாக வளரவேண்டுமா? கட்டுப்பாட்டுடன் வளரவேண்டுமா?

சுதந்திரமாக வளரும் பிள்ளைகள் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டுப் போகிறார்கள். கட்டுப்பாட்டில் வளரும் இளைஞர்கள் பெற்றோர் மேல் பகைமை பாராட்டுகிறார்கள்.

காலங்காலமாகஐந்தில் வளையாதது, ஐம்பதில் நிச்சயம் வளையவே வளையாது என்று நம் முன்னோர் கூறி வந்திருக்கிறார்கள். ஆனால், இன்று எல்லாம் விடுதலை மோகமே தறிகெட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.

மேலைநாட்டு நடத்தையியல் வல்லுநர்கள்பிள்ளைகளைத் திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது என்று வழிகாட்டுகிறார்கள். நம் நாட்டில் இந்த மனப்போக்கு வளர வளரப் பிள்ளைகளைத் திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது என்கிற மனப்போக்கு பெற்றோரிடம் வளர்ந்து வருகிறது. ‘ஓடிப்போய்விடுவான், தற்கொலை செய்து கொள்வான் என்கிற பயம் வேறு. பின்னால் திருத்திக்கொள்ளலாம், திருந்திவிடுவான், திருந்தி விடுவாள் என்று பெற்றோர் காத்திருக்கிறார்கள்.

சிறுவயதில் பெற்ற முழுச் சுதந்திரத்தைப் பின்னால் விட்டுக்கொடுக்க நம் இளைஞர்கள் என்ன ஏமாளிகளா?

விளைவு? இளைஞர்கள் வாழ்வும் பாழாகிப் போகிறது; பெற்றோர் வாழ்வு தடுமாற்றத்தில் முடிகிறது.

சிறு வயதில் வறுமையைச் சந்தித்து, போராடிப் படிப்படியாக வளமான வாழ்வைப் பெறுவது மனநிறைவு தரும் பயணம். சிறுவயதில் செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்துவிட்டுப் படிப்படியாக வறுமைக்குத் தள்ளப்படுவதுபோல கொடுமை எதுவுமில்லை. சுதந்திரம் விடுதலை எல்லாம்கூட அப்படித்தான்.

சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துவிட்டுப் பின்னால் கட்டுப்பாட்டிற்குள் வருவது சுலபமில்லை. முதலில் கட்டுப்பாட்டோடு வாழப் பழகிக்கொண்டு படிப்படியாக நல்ல சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதுதான் சுலபம்.

வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்த ஒரு நீச்சல்குளம். ‘நான் முதலில் சுதந்திரமாக நீந்திப் பார்க்கிறேன் என்று அதில் குதித்துவிட முடியுமா?

நமது இளமைப் பயணத்தில் ஒவ்வொரு சவாலையும் சந்திக்க நாம் மூன்று படிநிலைகளைச் சந்திக்கவேண்டும்.

முதல் கட்டம் நம் வழிகாட்டிகளின் கட்டுப்பாட்டில் வளர்வது (dependence), கற்றுக்கொள்வது (Learning), அடுத்த கட்டம் அவர்கள் துணையோடு வாழப் பழகுவது (Inter dependent). இங்கே நம்முடைய செயல்திறன் (Skills) வளர்கிறது, நல்ல பழக்கங்கள் உருவாகின்றன (behaviour). மூன்றாவது கட்டத்தில் நாம் தனியாக, சுதந்திரமாக உலகைச் சந்திக்கப் பழகுகிறோம் (Independent).

இதைத்தான் நவீன உளவியல் சொல்லித் தருகிறது. மேலைநாட்டில் பிள்ளைகளை அடிக்கக்கூடாது, கடுமையாகத் திட்டக்கூடாது, சர்வாதிகாரத்தனமாக அடக்குமுறைகளைக் கையாளக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள்.

அடக்குமுறை வேறு, கட்டுப்பாடு வேறு. கட்டுப்பாடு கண்டிப்பாகவேண்டும். அது அன்பு கலந்ததாக, பொறுமையாக, வழிகாட்டித் திருத்துவதாக அமையவேண்டும்.

சில பெற்றோர் இதைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வது உண்மைதான். கொஞ்சம் முரட்டுத்தனமாக நம்மைக் கட்டுப்படுத்த முயல்வதும் உண்மைதான். ஆனால், எந்தப் பெற்றோரும் பிள்ளைகள் கெட்டுப்போகவேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்கள் மிக நன்றாக இருக்க வேண்டும் என்கிற நல்ல ஆசைதான், நல்ல நோக்கம்தான் அவர்களை உந்தித்தள்ளுகிறது.

அதிகமாகச் செல்லம் கொடுத்துக் கெடுக்கும் பெற்றோரைவிட, நல்ல பழக்கங்களை வளர்க்கும் கண்டிப்பான பெற்றோர் பிள்ளைகளுக்கு நிச்சயம் நன்மைதான் செய்கிறார்கள்.

மிகப்பெரிய சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் சுயக்கட்டுப்பாடு நிறைந்தவர்கள் (self discipline). அன்பு கலந்த கட்டுப்பாட்டில் வளர்ந்தவர்கள்.

சிறகை விரித்துப் பறக்கப் பழகுவோம்; ஆனால், சிறகு முளைக்கும்வரை பெற்றோரின் அரவணைப்பில் காத்திருப்போம்.

நம் பெற்றோரின் அன்பு கலந்த கட்டுப்பாடுதான் நம் வருங்காலத்திற்கு உத்தரவாதம். நம் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்தெடுக்கும் பாதுகாப்பு. நம் பெற்றோரின் கண்டிப்பை நாம் மனநிறைவோடு ஏற்றுக்கொண்டு திருந்துவோம்.