1944-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் உச்சமடைந்த நேரம். காங்கிரஸ் கட்சி தேச விடுதலைக்காக ‘வெள்ளையனே, வெளியேறு’ எனப் போராட்டம் நடத்துகிறது. மறுபக்கத்தில், திரை மறைவில் ஆங்கில அரசிடம் அரசுப் பதவிகளைப் பெற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது.
பேரறிஞர்
அண்ணா தனது ‘திராவிட நாடு’ இதழில் காங்கிரஸ் கட்சியைச் சாடி ‘பிஸ்கட்’ எனும் தன் புகழ்பெற்ற சிறுகதையை எழுதினார்.
துரைசாணி
அம்மா தன் பங்களா வராண்டாவில் அமர்ந்து பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செல்ல நாய் ஜிம்மி அருகில் நின்று வாலாட் டுகிறது. துரைசாணி அம்மா ஒரு பிஸ்கட்டை ஜிம்மியிடம் வீசி ‘கேட்ச்’ என்கிறாள். ஜிம்மி பிஸ்கட்டை வாகாகக் கவ்விக்கொண்டு இன்னும் வேகமாக வாலாட்டுகிறது.
வேலைக்காரன்
இராமசாமி, துரைசாணி அம்மாவிடம், “எசமானி அம்மா, காலையில் இருந்து சாப்பிடலே, பசிக்குது”
என்றார். துரைசாணி அம்மா முகம் சுளித்து, “என்னது, ஜிம்மி தின்கிற பிஸ்கட்டை நீ கேட்கிறாயா? நீ
என்ன நாயா? போ வெளியே” என்கிறார். வேலைக்காரன் இராமசாமி தலை குனிந்தவாறு செல்கிறார். காட்சி மாறுகிறது.
கதர்
சட்டை, குல்லாவுடன் காங்கிரஸ் தலைவர் துரைசாணி அம்மாவைச் சந்திக்கிறார்.
“மேடம் துரைசாணி அம்மா, எங்கள் மக்கள் துன்பப்படுகிறார்கள்; எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்”
என்கிறார். துரைசாணி அம்மா உதட்டில் விரல் வைத்து “உஷ், ஜிம்மி தூங்குகிறது, சத்தம் போடாதே” என்கிறாள்.
காங்கிரஸ்
தலைவர் குரலில் பணிவு கூட்டி, “அம்மா, தயவுசெய்து டொமினியன் அந்தஸ்தாவது கொடுங்கள்”
என்கிறார். துரைசாணி அம்மா ஒரு பிஸ்கட்டை காங்கிரஸ் தலைவர் காலடியில் போடுகிறார். பின் சொல்கிறார், “பிஸ்கட் வேணுமா? அப்ப ஜிம்மி மாதிரி குரை, வாலாட்டு”
என்கிறார்.
தலைவர்
சுற்றும் பார்த்து விட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து, இடுப்பை வால்மாதிரி ஆட்டிக்கொண்டு ‘லொள், லொள்’ என்கிறார். துரைசாணி அம்மா விழுந்து விழுந்து சிரித்தவாறு இன்னொரு பிஸ்கட்டைப் போடுகிறாள். தலைவர் அந்தப் பிஸ்கட்டை எடுத்துச் சட்டைப் பையில் பத்திரமாக வைத்துக்கொள்கிறார்.
துரைசாணி
அம்மா சொல்கிறாள், “இப்போ போய் உன் மக்களிடம் சுதந்திரம் வாங்கியாச்சுன்னு சொல்” என்கிறார்.
இக்கதை
பதவிக்காகக் குறுக்குவழி தேடும் காங்கிரஸ் கட்சியின் முகத்திரையைக் கிழித்தது. இக்கதை
வெளியான அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழ் இக்கதைக்காக அரசால் தடை செய்யப்பட்டது.
இந்திய
அரசியல் அமைப்பு
கூட்டாட்சி முறையை உள்ளடக்கியது. ஒன்றிய அரசு அதிகாரம், மாநில அரசு அதிகாரம், பொதுவான அதிகாரம் என மூன்று வகைகளைக்
கொண்டது. அரசியல் கட்சிகள், தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்ற வகையில் பிரிக்கப்படுகின்றன.
முதன்
முதலாக 1967-இல் தி.மு.க.
என்ற மாநிலக் கட்சி ஆட்சிக்கு வரும்வரை கூட்டாட்சி முறையில் வாதங்கள், பிரதிவாதங்கள் இல்லை. ஒன்றிய அரசு, மாநில அரசுகளை நசுக்குகிறது. மாநிலச் சுயாட்சிவேண்டும் என்பது, தி.மு.க.வின் ஐம்பெரும் கொள்கை முழக்கத்தில் முதன்மையானது.
காங்கிரஸ்,
பா.ச.க. என்ற
தேசிய அரசியலிலும், மாநிலக் கட்சிகளின் மூன்றாம் அணி என்ற அரசியலும் தவிர்க்க இயலாத ஒன்றாகும். இதன் அடிப்படையில் எதிர்ப்பதைவிட உறவாடிக் கெடுப்பதில் தேசியக்
கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. தங்கள் அரசியல், ஆட்சி அதிகாரத்திற்காக இருபெரும் தேசியக் கட்சிகளும் செய்த அரசியல், அரசியல் அமைப்பிற்கே சவால் விட்டதாகும். 356 பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தல், நெருக்கடி நிலை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து
நீக்கம், காஷ்மீர் உடைப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
தேசியக்
கட்சிகள் மாநிலக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வளைப்பததற்காக ஒன்றிய அரசின் புலனாய்வுப் பிரிவுகள் இறக்கிவிடப்படும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டாம் நிலை தலைவர் சுவேந்து அதிகாரியைப் பயன்படுத்தி பா.ச.க.
மம்தா பானர்ஜி அவர்களை வீட்டிற்கு அனுப்பியது.
தமிழ்நாட்டு
அரசியலைப் போலவே, பத்து ஆண்டுகளாக மகாராஷ்டிரா அரசியலை ஊன்றிக் கவனித்து வருகிறோம். சிவசேனா உடைப்பு, அதன் பல பிரிவுகள், தேசியவாத
காங்கிரஸ் உடைப்பு, அதன் உட்பிரிவுகள், ஆட்சி அமைத்தல், கவிழ்த்தல், தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்க ஒரு கூட்டணி என நடந்த காட்சிகள்
மக்களின் தீர்ப்பை மதிக்காத இருபெரும் தேசியக் கட்சிகளின் ஆட்சி அதிகார வெறியாகும்.
தமிழ்நாட்டு
அரசியலில் 79 ஆண்டுகளாக நடக்காத அதிசயங்கள் நடந்தன. தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் பிரிந்த தலைவர்கள்
ஒவ்வொருவரும் புதுதில்லி சென்று, உள்துறை அமைச்சரைச் சந்தித்த பின் அரசியல் முடிவுகளை எடுத்தார்கள். அ.தி.மு.க. என்ற தொண்டர்களின்
கட்சியை பா.ச.க.
சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது.
எம்.ஜி.ஆர். அவர்கள்
தி.மு.க.விலிருந்து
பிரிந்ததற்கு, அ.தி.மு.க. உருவானதற்கு காங்கிரஸ்
மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் பின்னணி இருந்தது என்பதே வரலாறாகும். தங்களின் புதிய அடிமைகளால்
மாநில அரசியல் சூழல்களை மடை மாற்றும் வலிமை பெறுகிறார்கள்.
தேசியக்
கட்சிகள் தங்கள் பேர வலிமையால், மாநிலக் கட்சிகளை முடக்குகிறார்கள். வேட்பு மனு திரும்பப் பெறும் நாள்வரை சீட் பேரம் பேசுகிறார்கள். அதன்பின் வேட்பாளர் தேர்வில் திணறித் திண்டாடுகிறார்கள். தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணியில் ஒரு சிறு கட்சி ஒரு தொகுதியில் தாமரையிலும், மற்றொரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் நிற்கிற அதிசயம் நடந்தது. ‘இந்தியா’ கூட்டணியில் கட்சியில் இல்லாத - வேறு கட்சியில் சீட் கேட்டவருக்குச் சீட் கொடுத்த புதிய அரசியல் வரலாறும் பதிவானது.
தேசியக்
கட்சிகள் தங்கள் தேவைகள் முடிந்தவுடன் மாநிலக் கட்சிகளின் காலை வாரி விடுவதிலும், முதுகில் குத்துவதிலும் வல்லவர்களாக இருக்கின்றன. ஆட்சி அதிகாரம் என்ற பிஸ்கட் பெற சதுரங்க ஆட்டங்கள் பல நடத்துகிறார்கள்.
2026 தமிழ்நாட்டுத் தேர்தல்
முடிவுகளுக்குப் பின் தொங்கு சட்டசபை அமைந்தது. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், ‘இந்தியா’ கூட்டணியினரும், எதிர் என்.டி.ஏ. கூட்டணியினரும்
ஆளும் அரசிற்கு ஆதரவாக வாக்களித்தனர். என்.டி.ஏ. கூட்டணியினர்
கொறடா உத்தரவை மீறி வாக்களித்தனர். அ.தி.மு.க. கட்சி அவர்களுக்கு
மன்னிப்பு வழங்கிவிட்டது. இருப்பினும், சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்கள் பதவி பறிப்புக்கு ஆளாகலாம் என்பதும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகும்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் முடிவுகள், ஆட்சி அமைப்பு, கூட்டணி மாற்றம் என்பது 2029 பாராளுமன்றத்
தேர்தலில், தேசிய அளவில் மூன்றாவது அணி என்ற முயற்சிகளுக்கு வித்திட்டுள்ளது. தேசியக்
கட்சிகளின் ‘பிஸ்கட் அரசியல்’ என்ற வர்ணிப்பு புதிய உரு பெற்றுவிட்டது. பத்தாண்டு காலப் பல மாநில
அரசியலைப் புரட்டிப்பார்த்தால், மாநிலக் கட்சிகளும்,
கொள்கைச் சித்தாந்தக் கட்சிகளும் பிஸ்கட்டை நோக்கி நகர்ந்துவிட்டன என்பதே உண்மை.
மக்களின்
வாக்கு சக்தியைக் கேவலப்படுத்தும் அரசியல் கட்சிகளை, மக்கள் வாக்கு
வழியே மீண்டும் தண்டிப்பார்கள் என்பதே நம்பிக்கை மிகு நாளைய
அரசியலாகும்.