‘தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்’ எனப் போற்றப்படும் தஞ்சைத் தரணியின் நிலை இன்று நெஞ்சைப் பிளப்பதாய் உள்ளது. கர்நாடக அரசு, காவிரி நதியில் நமக்குச் சேரவேண்டிய தண்ணீரை விடாமல் முரண்டு பிடிப்பதால், அந்நீரை நம்பியே விவசாயம் செய்து வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் கண்களில் இன்று கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.
தஞ்சைப்
பகுதிகளின் நிலங்களில் விளையும் விளைபொருள்கள் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுவதால் தஞ்சைத் தரணியைத்தான் தமிழ்நாடே தன் வாழ்வாதாரத்திற்கு நம்பியிருக்கிறது. இச்சூழ்நிலையில் ஆரம்ப நிலையிலிருந்தே கர்நாடகம் இப்பிரச்சினையில் நாடகங்களைத்தான் அரங்கேற்றி வருகிறது. ஆனால், அது போடும் நாடகத்தை யாராலும் இரசிக்கத்தான் முடியவில்லை.
காவிரியின் அமைப்பு
காவிரி
நதி கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் முடிகிறது. 800 கி.மீ. நீளமுள்ள
காவிரி நதி 320 கி.மீ. தூரம்
கர்நாடக மாநிலத்திலும், 64 கி.மீ. கர்நாடக-தமிழ்நாடு எல்லையிலும், 416 கி.மீ. தமிழ்நாட்டிலும்,
125 கி.மீ. நீளம் காவிரி டெல்டா பகுதியிலும் பாய்ந்து இறுதியில் சிறு ஓடையாக வங்கக் கடலில் கலக்கிறது.
காவிரியின் பழமை
காவிரியின்
பாசனப் பகுதி, சிந்து நதிப் பள்ளத்தாக்கைப் போன்று மிகவும் பழமை வாய்ந்தது. கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளின் பாசனங்கள் இதற்கு நீண்ட காலத்திற்குப் பின்பே உருவாக்கப்பட்டன என்பதிலிருந்து காவிரியின் பழமையை நாம் அறிந்துகொள்ள முடியும்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஒருமுறை காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரைகள் உடைந்துவிட்டனவாம். உடைந்த கரைகள் வழியே வெளியேறிய தண்ணீர் தற்போது உள்ளாறு என்று அழைக்கக்கூடிய சிறு ஓடை வழியாகக் கொள்ளிடத்தில் கலந்ததாம். இந்த உடைப்பைச் சரிசெய்வதற்காக அப்போது சோழ நாட்டை ஆண்ட மன்னன் கரிகால் சோழன் என்பவன், இன்றும் காவிரியின் குறுக்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கல்லணையைக் கட்டி முடித்தானாம். இந்த வரலாற்றுச் சான்றிலிருந்து, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காவிரித் தண்ணீரைத் தமிழர்களாகிய நாம் உபயோகப்படுத்தி வந்திருக்கிறோம் என்கிற உண்மை தெரிய வருகிறது. எனவே, தொடர்ந்து அந்நீரைப் பயன்படுத்துவதற்கான உரிமை நமக்கு நிறையவே இருக்கிறது.
பாசனத் திட்டங்கள்
காவிரி
நீர், தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய அளவைப் பொறுத்து, வெவ்வேறு காலங்களில், பல்வேறு பாசனத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அத்திட்டங்களின்படி காவிரி டெல்டா பகுதிகள் 12,90,000 ஏக்கர்களும், மேட்டூர் பாசனத்திட்டம் 3,22,600 ஏக்கர்களும், கட்டளைத் திட்டம் 1,22,300 கொள்ளிடம் கீழ் அணைக்கட்டு 1,63,100 சேலம்-திருச்சி கால்வாய் 1,12,000 சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு 60,700 மேட்டூர் கால்வாய் 45,000 புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாய் 20,600 புள்ளம்பாடி கால்வாய் திட்டத்தின்படி 23,100 ஏக்கர்களும் காவிரி நீர் வரத்தின் மூலம் பயன்பெறவேண்டும். ஆனால், கர்நாடக அரசு செய்துவரும் ஒப்பந்த மீறல் மோசடிகளால் இத்திட்டங்களின் பலன் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. இதன் காரணமாக, காவிரியை நம்பியிருக்கும் சுமார் 35 இலட்சம் விவசாயத் தொழிலாளர்கள் இன்று வேலை இழந்து நிற்கிறார்கள். 21 இலட்சத்து 59 ஏக்கர் நிலம், காய்ந்து கருகிக் கொண்டிருக்கிறது.
முதல் ஒப்பந்தம்
தமிழ்நாடு,
கர்நாடகம் என்று பெயர் மாற்றம் அடையும் முன்பே, இவ்விரு மாநிலங்களுக்கிடையே காவிரிப் பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன. இப்பிரச்சினையைப் பிள்ளையார்சுழி போட்டுத் தொடங்கிவைத்தது அப்போதைய மைசூர் அரசுதான். அது அன்றைய சென்னை அரசின் அனுமதி பெறாமலேயே தன் விருப்பத்திற்குப் பாசனப் பரப்புகளை அதிகரிக்கத் தொடங்கியது. மைசூர் அரசின் தன்னிச்சையான தான்தோன்றித்தனமான போக்கால், சென்னை அரசின் பாசனப்பரப்புகள் பெரிதும் பாதிப்புக்கு உட்பட்டன. இதன் எதிரொலியாக 1890-1892-ஆம் ஆண்டுகளில் இரு மாநிலங்களுக்கிடையேயும் பேச்சுவார்த்தைகள் நடந்து, முடிவில் 1892-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தமும் ஏற்பட்டது. அவ்வொப்பந்தத்தின்படி, காவிரியிலோ, அதன் துணை நதிகளான ஹேமாவதி, இலட்சுமணத் தீர்த்தம், கபினி, சுவர்ணவதி, யகாச்சி ஆகியவற்றிலோ மைசூர் அரசு அணைகள் கட்ட விரும்பினால், சென்னை அரசின் அனுமதி பெற்ற பின்பே நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.
மேலும், மைசூர் அரசு அணைகள் கட்டுவது, தனது பாசன வசதிகளுக்கு இடையூறு ஏற்படுத்துமென்று தெரிந்தால், அதற்கு அனுமதி மறுக்கின்ற அதிகாரத்தையும் சென்னை அரசுக்கு அந்த ஒப்பந்தம் வழங்கியது.
புதிய ஒப்பந்தம்
போகப்போக
கர்நாடக அரசின் சுயரூபம் வெளிப்பட்டது. 1892-ஆம் ஆண்டின் ஒப்பந்த விதிகளை அப்பட்டமாக மீறத் தொடங்கியது கர்நாடக அரசு. சென்னை அரசின் அனுமதி பெற்று 1911-ஆம் ஆண்டு 11 டி.எம்.சி.
தண்ணீரைத் தேக்கி வைக்கும் உயரத்தில் சுண்ணம்பாடி அணையைக் கட்டத் தொடங்கியது மைசூர் அரசு. ஆனால், எதிர்காலத்தில் 41 டி.எம்.சி.
தண்ணீரைத் தேக்கிவைக்கும் உயரத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற சுயநல எண்ணத்தோடு ஆரம்பத்திலேயே அணையினுடைய அடித்தளத்தை அகலமாக அமைத்துக்கொண்டது. இதன் மூலம் ஒப்பந்த விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டது மைசூர் அரசு.
இரு
மாநிலங்களுக்கிடையேயும்
பிரச்சினைகள் வளர்ந்தன. பிரச்சினை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு விடப்பட்டது. ஆனால், நீதிபதி ஹென்றி கிரிஃபின் என்பவர் மைசூர் அரசுக்கு ஆதரவாக அப்போது தீர்ப்புச் சொல்லிவிட்டார். எனவே, பிரச்சினையை ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது சென்னை அரசு. ஒன்றிய அரசும் மைசூர் அரசுக்குச் சாதகமாகவே நடந்து கொண்டது.
எங்கும்
நியாயம் கிடைக்காமல் போகவே, இறுதியில் இங்கிலாந்திலுள்ள இந்தியச் செயலரிடம் சென்னை அரசு முறையீடு செய்தது. அவர் எடுத்துக்கொண்ட முயற்சியால் இரு மாநிலங்களுக்கிடையேயும்
1924-ஆம் ஆண்டு ஒரு புதிய ஒப்பந்தமும், 17-06-29-இல் மற்றொரு துணை ஒப்பந்தமும் ஏற்பட்டது.
இந்த
ஒப்பந்தத்தின்படி முதலாவது, 44.827 டி.எம்.சி
கொள்ளளவுள்ள கிருஷ்ணசாகர் அணைக்கட்டை மைசூர் அரசு கட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் 12.5 இலட்சம் ஏக்கர் புதிய பாசனப் பரப்பை அது அதிகரித்துக்கொள்ள முடியும். இரண்டாவது, 93.5 டி.எம்.சி.
கொள்ளளவுள்ள மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக 3.01 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு சென்னை அரசு வசதி செய்து கொள்ளலாம். மூன்றாவது, 45 டி.எம்.சி.
கொள்ளளவுள்ள அணையைத் தனது துணை நதிகளில் அமைத்து 1.10 இலட்சம் ஏக்கருக்குப் புதிய பாசன வசதிகளை மைசூர் அரசு ஏற்படுத்திக்கொள்ளலாம். எனினும், சென்னை அரசின் நீர்ப்பாசன வசதிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது அமைய வேண்டும். எனவே, இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சென்னை அரசுக்கு அறிவிக்க வேண்டும்.
நான்காவது,
சென்னை அரசு தனது துணை நதிகளில் புதிய அணைகள் அமைத்துக் கொள்ளலாம். பவானி, நொய்யல், அமராவதி நதிகளில் அணைகளைக் கட்டினால் அதன் கொள்ளளவுகளில் அறுபது விழுக்காட்டிற்கு மேற்படாதவாறு காவேரியின் துணை நதிகளில் ஒன்றில் மைசூர் அணைகளைக் கட்டிக்கொள்ளலாம். எனினும், இது சென்னை அரசுக்குச் சேர வேண்டிய நீரின் அளவைப் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். ஐந்தாவது, இந்த ஒப்பந்தம் உருவாகி ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளக்கூடிய புதிய மாறுதல்களைச் செய்து கொள்ளலாம்.
கர்நாடகத்தின்
ஒப்பந்த
மீறல்
ஐம்பது
ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் ஒப்பந்தத்தின் சில பிரிவுகளைச் சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதை மறுபரிசீலனை செய்து மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்கிறது மேற்குறிப்பிட்ட விதிகளின் கடைசிப் பகுதி. ஆனால், 1892-ஆம் ஆண்டிலும், 1924-ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களுமே காலாவதியாகிவிட்டதாக, கர்நாடக அரசு கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், அன்றைய மைசூர் அரசுக்கு விதிக்கப்பட்ட ஒப்பந்த விதிகள், இன்றைய கர்நாடக அரசைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அது வாதிடுகிறது.
மற்றொரு
விதியில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய தண்ணீரை முழுவதும் அனுப்பிய பின்னரே தனக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரைக் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டில் சேமித்துக்கொள்ளலாம் என்றும், நிர்ணயிக்கப்பட்ட அளவைச் சேமித்தவுடன் மேலும் உபரியாக வரும் தண்ணீரில் தேவைப்படும் அளவு தமிழ்நாட்டிற்குக் கொடுத்துவிடவேண்டுமென்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசோ தனது கிளை நதிகளில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, சுவர்ணவதி, இலட்சுமணதீர்த்தம் போன்ற அணைகளைக் கட்டி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுக்கும், மேட்டூர் நீர்த்தேக்கத்திற்கும் வருகின்ற தண்ணீரைத் தடுப்பதால், இப்போதெல்லாம் காவிரியில் வருகின்ற தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. அதனால்தான் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரமுடியவில்லை என்றும் கர்நாடகம் கதைவிடுகிறது.
நடுவர் மன்றம்
இதுவரைக்கும்
தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையைக் குறித்து 27 முறைகளுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. ஆனால், எல்லாமே தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன அல்லது நாய்க்கு எலும்புத்துண்டைப் போடுவதைப்போலக் குறைந்த அளவு தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, 1983-இல் ‘தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் சங்கம்’ எனும் அமைப்பு காவிரிப் பிரச்சினையைக் கையாள நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
மேலும்,
இது குறித்து 4-12-86 அன்று தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு மனு ஒன்றையும் கொடுத்தனர். இதன் பலனாக 4-5-90-ஆம் நாளில் நடுவர் மன்றம் அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
21-1-90 அன்று நடுவர்
மன்றத்தை ஒன்றிய அரசு அமைத்தது. பம்பாய் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. சித்தகோஷ் முகர்ஜி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி திரு. எஸ்.டி. அகர்வால், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி திரு. என்.எஸ். ராவ் ஆகியோர் அதற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். நடுவர் மன்றம் அமைத்ததன் பலனாக அதன் நீதிபதிகளிடம் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் குறைகளை நேரிடையாகச் சொல்ல வாய்ப்புக் கிடைத்ததே தவிர, மற்றபடி தமிழ் நாட்டிற்கு நேரிடையாகத் தண்ணீர் திறந்துவிடச் சொல்ல அதற்கு அதிகாரமில்லாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.
இந்நிலையில்,
சுப்ரீம்கோர்ட் உடனடியாகக் காவிரி ஆணையத்தை அமைக்கச்சொல்லி ஒன்றிய அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு, செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது. இச்சூழ்நிலையில், எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்கிற கதையாக ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் ஓட்டுவேட்டை நடத்த தன்னாலான பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன.
தற்போது அரங்கேறவிருக்கும் மேடையில் கர்நாடகம் எந்த மாதிரியான வேடம் கட்டவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.