அலுவலகத்தில் மற்ற ஊழியர்கள் அனைவரும் ஒரு புதிய ஃப்ராஜெக்ட்டுக்காகவோ அல்லது அலுவலக விழாக்களுக்காகவோ தேனீக்களைப் போல இரவும் பகலும் சுறுசுறுப்பாக உழைப்பார்கள். ஆனால், ராகவன் மட்டும் எப்போதும் சோர்வாகக் கண்கள் சொருகி, ஏதோ பெரிய நோயாளி போலத் தன்னைத் திரையிட்டுக் கொள்வான்.
“சார்,
அவனுக்குக் கொஞ்சம் உடம்பு முடியல போல... பாவம், அந்த வேலையை நானே பார்த்துக்கிறேன்” என்று சக ஊழியர்கள் தாயுள்ளத்தோடு அவனுக்காகப் பரிந்து
பேசுவார்கள்.
ராகவன்
பயங்கரமான புத்திசாலி. ஒரு ‘கோடிங்’ சிக்கலை மற்றவர்கள் நாள் முழுக்க மண்டையை
உடைத்துக் கொண்டு தேடினால், இவன் கூரிய கத்திபோலச் சில நிமிடங்களில் சிக்கலைத் தீர்த்து
விடுவான். ஆனால், அவனிடம் ஒரு விசித்திரமான தந்திரம் இருந்தது. வேலை என்று வந்துவிட்டால்,
தன் உடம்பை வெயிலில் வதங்கிய கத்தரிக்காய் போல மாற்றிக்கொள்வான்.
“என்ன
ராகவன், இன்னைக்கும் தலைவலியா?\" என்று டீம் லீடர் கேட்கும்போதே, “ஆமா சார், சைனஸ்
பிராப்ளம். நேத்து நைட்டெல்லாம் தூக்கமே இல்லை...” என்பான் சோகமான குரலில்.
உடனே
மேனேஜருக்கும், சக ஊழியர்களுக்கும் அவன் மேல் ஒரு சாப்ட் கார்னர் வந்துவிடும்.
“சரி
சரி, நீங்க இன்னைக்குச் சீக்கிரம் கிளம்புங்க. அந்த டாஸ்க்கை சுனில் பார்த்துப்பான்” என்று அவனுக்கு எப்பொழுதும் ஒரு சொகுசான இடத்தைக் கொடுத்து
விடுவார்கள்.
ஒருநாள்
அந்த நிறுவனத்தின் அமெரிக்கக் கிளையில் ஒரு பெரிய ஃப்ராஜெக்ட்டை வழி நடத்த, திறமையான
ஒரு மேலாளர் தேவைப்பட்டார். அது வெறும் பதவி உயர்வு மட்டுமல்ல; ராகவனின் வாழ்க்கையையே
வாணவேடிக்கையாக மாற்றக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு.
திறமையின்
அடிப்படையில் பார்த்தால், அந்தப் பதவிக்கு ராகவன்தான் தகுதியானவனாக இருந்தான். மேலதிகாரிகளின்
கூட்டத்தில் அவனது பெயர் பரிசீலனைக்கு வந்தது.
“ராகவன்
ரொம்ப டேலண்டான பையன். அமெரிக்கா ஃப்ராஜெக்டுக்கு அவன்தான் கரெக்ட்!” என்றார் ஓர் அதிகாரி. ஆனால், அங்கிருந்த முதன்மை அதிகாரி, “நீங்க சொல்றது
உண்மைதான். ஆனா, அவனால அங்க இருக்குற குளிரையும், கடுமையான வேலைப் பளுவையும் தாங்க
முடியுமா? அவன் எப்போ பார்த்தாலும் ஏதோ ஒரு நோயாளியைப் போலவே இருக்கானே! அங்கே போய்
அவனுக்கு ஏதாச்சும் உடம்பு முடியாம போனா ஃப்ராஜெக்ட்டே வீணாகிடும்” என்று மறுத்துவிட்டார்.
இறுதியில்,
ராகவனைவிடக் குறைந்த திறமையுடைய, ஆனால் இரும்புத் தூணைப் போலச் சுறுசுறுப்பாக இருந்த
மற்றோர் ஊழியருக்கு அந்த அமெரிக்க வாய்ப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட்டன. செய்தி
அறிந்த ராகவன் அதிர்ந்து போனான். இத்தனை காலம், தான் சுகமாக இருக்க நினைத்து ஏந்திய
‘அனுதாபம்’ என்ற ஆயுதம், இன்று தன் எதிர்காலத்தையே
பதம் பார்த்துவிட்டதை அவன் உணர்ந்தான்.
அலுவலகத்தில்
எப்போதும் போல அவனுக்குத் தேநீர் கொண்டு வரும் ஊழியர் வழக்கம்போல அதே அனுதாபத்தோடு,
“தம்பி, முகம் ரொம்ப வாடிப் போயிருக்கு. உடம்பு சரி இல்லையா? நீங்க பேசாம இன்னைக்கும்
சீக்கிரம் வீட்டுக்குப் போகலாமே” என்றார். ஆனால், இன்று அந்த வார்த்தைகள் ராகவனின் காதில்
ஈட்டி போலப் பாய்ந்தன. போலி நிழலில் ஒதுங்க நினைத்தவன், இன்று உண்மையான சூரிய அஸ்தமனத்தை
இழந்து பரிதாபமாக அமர்ந்திருந்தான்.
‘சாட்பிஃசிங்’ (Sadfishing) என்பது சமூக ஊடகங்களில் மற்றவர்களின்
அனுதாபம், கவனம் அல்லது ஆதரவைப் பெறுவதற்காக ஒருவர் தனது மனக்கவலை அல்லது தனிப்பட்ட
துயரங்களை மிகைப்படுத்திப் பதிவிடும் செயலாகும். இந்தச் சொல் 2019-ஆம் ஆண்டில் ரெபேக்கா
ரீட் (Rebecca Reid)
என்பவரால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட பிரச்சினைகளை மிகைப்படுத்தியோ
அல்லது பொய்யாக உருவாக்கியோ மற்றவர்களின் பரிதாபத்தையும் லைக்குகளையும் கவனத்தையும்
ஈர்க்கும் செயலை அனுதாபத் தூண்டில் அல்லது சாட்பிஃசிங் என்கின்றனர்.
‘சாட்பிஃசிங்’ செய்பவர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் மருத்துவ ரீதியான
மனச்சோர்வு அல்லது பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. குடும்பம் அல்லது
நண்பர்களிடம் நேரடி ஆதரவு கிடைக்காத இளைஞர்கள் (சுமார் 60%) சமூக ஊடகங்களை ஒரு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர்.
ஆண்களைவிட
பெண்கள் தங்கள் உணர்ச்சிகரமான போராட்டங்களைச் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிர்ந்துகொள்வதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, சாட்பிஃசிங் என்பது ஒரு கவனத்தை ஈர்க்கும் செயல் மட்டுமல்ல;
அது தீர்க்கப்படாத மன உளைச்சலின் ஓர் அறிகுறியுமாகும்.
பல
நேரங்களில் மக்கள் உண்மையான மன உளைச்சலில் இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் அது வெறும்
கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டும் செய்யப்படலாம். ஒரு பதிவு உண்மையான உதவியை நாடுகிறதா?
அல்லது வெறும் அனுதாபத்தைத் தேடுகிறதா? என்பதை நிதானமாகத் தீர்மானிக்கவேண்டும்.
இணையத்திற்கு
வெளியே உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மனக்குறைகளைப் பகிர்ந்துகொள்வதே சிறந்தது
(Offline support). சமூக ஊடகங்களில் கிடைக்கும் தற்காலிக
ஆதரவு நீண்டகால மனநலத்திற்குப் பயன் தராது என்பதை உணரவேண்டும்.
தனிப்பட்ட
வாழ்க்கையின் மிக நெருக்கமான துயரங்களைப் பொதுவெளியில் பகிரும்போது ஏற்படும் ஆபத்துகளைக்
கவனத்தில் கொள்ளுங்கள். மன அழுத்தம் அல்லது தனிமை அதிகமாக இருந்தால், சமூக ஊடகங்களில்
பதிவிடுவதற்குப் பதிலாக முறையான ஆலோசகர்கள் (Counselors) அல்லது மருத்துவர்களிடம் உதவி பெறுவதே
சரியான தீர்வாகும். உண்மையான அங்கீகாரம் என்பது சும்மா எல்லாரும் நம்மைத் திரும்பிப்
பார்க்க வைப்பதில் இல்லை; யாரும் பார்க்காதபோது நாம் காட்டும் உழைப்பிற்கும், நம்முடைய
தகுதிக்கும் மற்றவர்கள் தரும் மரியாதையில்தான் இருக்கிறது.