news-details
ஞாயிறு மறையுரை
ஜூன் 28, 2026 ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு - 2அர 4:8-11,14-16; உரோ 6:3-4,8-11; மத் 10:37-42 (இறைவனின் முகவரி பசியோடு வரும் அடியார்)

நாம் சாலையோரங்களிலோ அல்லது ஆலய வாசல்களிலோ பசியோடு அமர்ந்திருக்கும் ஒருவரைப் பார்க்கும்போது, மிக இயல்பாகவே நம் இதயத்தில் கனிவு பிறக்கிறது. நம் கைகள் நம் பைக்குள் சென்று சில நாணயங்களையோ, பணத்தையோ தேடியெடுத்து அவர்களிடம் மகிழ்வோடு கொடுக்கின்றன. இப்படி நாம் செய்யும் தானமும் தர்மமும் மிகவும் போற்றத்தக்க உன்னதமான நற்செயல்களாகும். ஏனெனில், நாம் கொடுக்கும் அந்தச் சிறு உதவிதான் பிறர்மீது நாம் காட்டும் அன்பின் முதல் புள்ளி; அன்பு செய்யத் தொடங்குவதற்கான ஓர் அழகான நுழைவாயில்! அங்கிருந்து ஒருபடி மேலே சென்று, பசி என்று நம்மை நோக்கி வரும் ஒருவரை, இறைவனின் பிரதிநிதியாக நம் இல்லத்தில் ஏற்று, இன்முகத்தோடு இன்சொல் பேசி, அவரின் பசியாற்றுவதே கிறிஸ்து நமக்குக் கற்றுத்தரும் உண்மையான விருந்தோம்பல்.

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில், நம்மைத் தேடிவரும் இறையடியாரையும், எளியவரையும் கனிவோடு வரவேற்று, அவர்களின் பசியாற்றும் உன்னதமான விருந்தோம்பல் வாழ்விற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில்சோறும் நீரும்ஒருபோதும் விற்பனைப் பொருளாகப் பார்க்கப்படவில்லை. ஆனால், இன்று எல்லா ஊர்களிலும் உணவகங்கள் பெருகிவிட்டன. உயிர் காக்கும் குடிநீரும் கூட விற்பனைப் பொருளாக மாறிவிட்டது. தமிழர் பண்பாட்டில்வறியாருக்குச் சோறிடுதல்என்பது வெறும் கடமையாக அல்லாமல், அறத்தின் ஆகச் சிறந்த கோட்பாடாகவே வலியுறுத்தப்பட்டது. அது தூய அன்பின் அடையாளமாகவே திகழ்ந்தது. கிராமப்புறங்களில் வழிப்போக்கர் யாராவது உண்ணாமல் இரவில் படுத்திருந்தால், ஊரார் தேடிச் சென்றுஇரவுச்சோறுகொடுக்கும் உன்னத வழக்கம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்புவரை நம் நடைமுறையில் இருந்திருக்கிறது. தம் மண்ணில், தம் கண்முன்னே ஒருவர் இரவில் பசியோடு உறங்கச் செல்வது தமக்கு நேர்ந்த மானக்கேடு என்று நம் முன்னோர் கருதியுள்ளனர்.

அதனால்தான் சோற்றினைஉயிர் மருந்துஎன வர்ணிக்கும் மணிமேகலை காப்பியம் வறியவர், மாற்றுத்திறனாளர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் எனச் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்குத் தடையின்றி உணவளிக்கவேண்டும் என ஆணித்தரமாக வலியுறுத்துகிறது. தமிழ் இலக்கியங்கள் பசியை ஒரு கொடிய நோயாகப் பார்த்ததன் காரணமாக, அந்தப் பசியைத் தீர்ப்பவரை மருத்துவராகக் கண்டன. ‘பசிப்பிணி மருத்துவர்என்றுதான் உணவளிப்பவர்களை நம் இலக்கியங்கள் நெஞ்சம் உருகப் போற்றுகின்றன. தமிழ்நாட்டில் கால்பதித்த சமண சமயமும்கூட, தாம் வலியுறுத்திய நால்வகைக் கொடைகளுள் (உணவு, மருந்து, கல்வி, அடைக்கலம்), ‘உணவுக் கொடையையேமுதலாவதாக வைத்துப் பேசுகிறது.

அன்னசத்திரங்கள் வைப்பதும், வழிப்போக்கரின் தாகம் தீர்க்கத் தண்ணீர் பந்தல்கள் அமைப்பதும் பெரும் புண்ணியச் செயல்களாகப் போற்றப்பட்டன. தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண மரபில், உலகப் பற்றுகளைத் துறந்து வாழும் துறவியருக்கு- இறையடியாருக்கு உணவிடுவதும், அவர்களை இன்முகத்தோடு உபசரிப்பதும் இல்லற வாழ்வின் ஆகச் சிறந்த அறமாகக் கருதப்பட்டது. இதற்கு மிகச்சிறந்த சான்று புறநானூற்றுப் பாடல் ஆகும். சாகா வரம் தரும் தேவர்களின்அமிழ்தமேகிடைப்பதாக இருந்தாலும், பசியோடு வருபவர்களைத் தவிக்கவிட்டு, அதைத் தனித்து உண்ணும் சுயநல வழக்கம் நம் முன்னோரிடம் இருந்ததில்லை என்கிறது சங்க இலக்கியம்:

இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே!” - புறநானூறு (182)

எனவே, பசியோடு வரும் துறவியரின் பசிப்பிணியைப் போக்குவது, இறைவனுக்கே செய்யும் உன்னத வழிபாடாகப் போற்றப்பட்டது. ‘உணவளிப்பதே உயிர் அளிப்பதுஎன்ற இந்த உன்னத வாழ்வியல் நெறியைத்தான் இன்றைய இறைவார்த்தைகளும் நமக்கு மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

முதல் வாசகத்தில், சூனேம் ஊரைச் சேர்ந்த ஒரு செல்வாக்குமிக்கப் பெண், தன் வழியே கடந்து செல்லும் இறைவாக்கினர் எலிசாவை மிகவும் போற்றி வந்தார். அவரை வெறும் வழிப்போக்கராகப் பார்க்காமல், அவர் ஓர் இறையடியார் என்பதை அறிந்து, அவரைத் தன் இல்லத்திற்கு அழைத்து அன்போடு உணவளிக்கிறார். அத்தோடு அவரது கனிவு நின்றுவிடாமல், இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர் தங்கி ஓய்வெடுப்பதற்கெனத் தன் மாடியிலேயே ஒரு சிறிய அறையையும் அமைத்துக் கொடுக்கிறார். இறைவனின் அடியாருக்குச் செய்யும் பணிவிடை, அந்த இறைவனுக்கே செய்யும் பேரறம் என்பதை ஆழமாக உணர்ந்திருந்த அந்தப் பெண், பிரதிபலன் பாராமல் காட்டிய அந்தத் தூய விருந்தோம்பல்தான் மகப்பேறின்றி இருந்த அவருக்குப் பேரின்பத்தையும், ஒரு மகப்பேற்றின் ஆசிரையும் கொண்டுவந்தது.

இன்றைய நற்செய்தியில் இயேசு, தம் திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து நற்செய்திப் பணியாற்ற அனுப்பியபோது, அவர்களுக்கு நோய்களைக் குணமாக்கவும், இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யவும், பேய்களை ஓட்டவும் அதிகாரங்களை வழங்கும் அதேவேளையில், தம் சீடர்கள் உலக வாழ்வில் சந்திக்கப்போகும் சவால்களையும் ஆபத்துகளையும் குறித்த எச்சரிக்கையையும் வெளிப்படையாகவே எடுத்துரைக்கிறார். குறிப்பாக, “தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்என்ற கடினமான ஆன்மிகச் சவாலை விடுக்கிறார். மேலும் அதன் தொடர்ச்சியாக, ‘ஏற்றுக்கொள்ளுதல், அதாவது, ‘வரவேற்று உபசரித்தல், ‘ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுத்தல்என்ற விருந்தோம்பலின் உன்னதப் பண்புகளையும், அப்படி உபசரிப்பவர் தகுந்த பலனைப் பெறுவார் என்பதையும் ஓர் உறுதிமொழியாகவே வழங்குகிறார். விருந்தோம்பல் நிகழும்போது, அதனைத் தருவோரும் பெறுவோரும் இறை ஆசிரால் நிறைவர் என்பதை நாம் இதிலிருந்து புரிந்துகொள்கிறோம்.

இயேசு கற்றுத்தந்த இந்த வரவேற்பும் உபசரிப்பும் தொடக்கக் கிறித்தவர் நடுவே நிலவிய அடித்தளமான அனுபவம் என்றால் அது மிகையல்ல. கிறித்தவ மறையை இத்தனை நூற்றாண்டுகளாக வாழவைத்ததன் ஒரு முக்கியக் காரணம் தொடக்கக் கிறித்தவர் மற்றும் ஏனைய நல்ல உள்ளங்கள், சீடர்கள், மறைப்பணியாளர்களுக்குத் தந்த வரவேற்பும் விருந்தோம்பலும்தான். கிறிஸ்துவின் சீடர்கள் ஊர் ஊராக அல்லது நாடுவிட்டு நாடு சென்றபோது, அவர்களை வரவேற்பதற்கும் ஒருசில இல்லங்கள் திறந்திருந்தன. இந்த இல்லங்களில் நற்செய்தியும் இயேசுவின் இறுதி உணவும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஆழமாகச் சிந்தித்தால், சீடர்களை வரவேற்ற இந்த இல்லங்களே முதல் ஆலயங்களாக விளங்கின.

ஆனால், இன்று நம் சமுதாயத்தில் கிறித்தவ விருந்தோம்பலின் நிலை என்ன? பொதுவாக, இவ்வுலகில் மனிதநேயம் குறைந்து வருவது போலவே, நம் குடும்பங்களிலும் விருந்தோம்பல் என்ற பண்பு மறைந்து வருகின்றது. அயலவர்மீது கொண்ட அச்சமும், தேவையற்ற சந்தேகங்களும் அதிகரித்துவிட்டதால், வரவேற்பும் கனிவும் காற்றில் கரைந்துவிட்டன. நமது சுயநல நெருப்பு கொளுந்து விட்டு எரிவதால், ‘தவித்த வாய்க்குத் தண்ணீர் தரும்அடிப்படை ஈரமும் நமக்குள் வறண்டு வருவதைக் காண்கிறோம். இந்தத் தடையை உடைத்து, நம் இதயங்களை அகலப்படுத்தவே இன்றைய இறைவார்த்தைகள் நமக்குச் சில வாழ்வியல் பாடங்களை வழங்குகின்றன.

முதலாவதாக, இறையடியவரையும் துறவியரையும் போற்றுதல்வேண்டும். உலக ஆசைகளைத் துறந்து, இறைப்பணியைச் சுமந்து வரும் அவர்களை, நம் இல்லம் தேடி வரும் ஆசிராகப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு உணவிட்டு உபசரிப்பது நம் கடமை மட்டுமல்ல; அது நம் குடும்பத்திற்கு இறைவனின் அருளைக் கொண்டுவரும் உன்னத வழியும்கூட.

இரண்டாவதாக, யாரையும் வேறுபடுத்திப் பார்க்காத இளகியமனம் வேண்டும். பசி என்று நம் வாசல் தேடி வருபவர் யாராக இருந்தாலும் சாதி, மத, இன வேறுபாடின்றி, அவர்களின் பசியை முதலாவதாகப் போக்கவேண்டும். நம்மிடம் இருக்கும் உணவில் ஒரு பகுதியை வறியவருக்குப் பகிர்ந்து கொடுக்கும்போது, நம் இல்லத்து உணவு ஒருபோதும் குறையாத அமுதசுரபியாக மாறும்.

மூன்றாவதாக, கைம்மாறு கருதாத கனிவு வேண்டும். மாரி எனப்படும் மழை, இந்த உலகிற்கு எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராமல் பொழிவதைப் போல, நாமும் பிரதிபலன் கருதாமல் உதவ வேண்டும். மனிதர் நமக்குக் கைம்மாறு செய்யாவிட்டாலும், விண்ணகத் தந்தை நமக்குரிய கைம்மாறைக் கண்டிப்பாக அளிப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்குவேண்டும்.

எனவே, பசியோடு நம்மை நோக்கி வரும் ஒவ்வோர் எளியவரிலும், இறையடியாரிலும் உறைந்திருப்பது இறைவனே என்பதை ஆழமாக உணர்வோம். சோறும் நீரும் மனிதகுலம் பகிர்வதற்கானவை; அவை விற்பதற்கோ அல்லது சுயநலத்தோடு சேமித்து வீணாக்குவதற்கோ அல்ல என்பதை இச்சமூகம் உணரட்டும். இனி நம் இல்லக் கதவுகளும், இதயக் கதவுகளும் பசியோடு வருபவர்களுக்காக எப்போதும் திறந்திருக்கட்டும். ஒரு கிண்ணம் குளிர்ந்த நீரிலாவது நம் அன்பைத் தொடங்குவோம். கைம்மாறு கருதா இறைவனின் பேரன்பு நம் இல்லங்களையும் நம் வாழ்வையும் என்றென்றும் நிரப்பட்டும்.