இரவு 2.15 மணி.…
மருத்துவமனை
வழித்தடங்கள் மெதுவான வெளிச்சத்தில் அமைதியாக நின்றுகொண்டிருந்தன. பகலில் மக்கள் கூட்டத்தால் நிரம்பிய அந்த இடம், இப்போது ஓர் ஆலயத்தைப் போல அமைதியாக இருந்தது.
ஆனால்,
அந்த அமைதிக்குள் எத்தனை கதைகள்?… எத்தனை பயங்கள்? எத்தனை கண்ணீர்கள்? ICU வாசலுக்கு வெளியே ஒரு வயதான நபர் அமர்ந்திருந்தார். கையில் பழைய செபமாலை. உதடுகள் மெதுவாக நகர்கின்றன. ‘அன்னை மரியே!… என் மகனை மட்டும் காப்பாத்திடு!’
அவருக்கு
அருகில் இருந்த நாற்காலியில் பாதி குடிக்கப்பட்ட தேநீர் குளிர்ந்துவிட்டது. ஆனால், அவரது கண்கள் மட்டும் ICU கதவிலிருந்தே
நகரவில்லை. அந்த நேரத்தில் அவருக்குப் பணம் நினைவில் இல்லை; பதவி நினைவில் இல்லை; உலகம் நினைவில் இல்லை; ஒரே ஒரு விசயம் மட்டுமே மனத்தில் இருந்தது: ‘என் குழந்தை உயிருடன் திரும்பிவர வேண்டும்.’
மருத்துவமனையின்
இரவுகள் மனிதர்களை மாற்றிவிடுகின்றன. பகலில் தன்னம்பிக்கையோடு பேசும் மனிதர்கள்கூட, இரவில் இறைவனின் முன் உடைந்துபோகிறார்கள். ஏனெனில், அங்கேதான் மனிதனுக்குப் புரிகிறது... உயிர் என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லையென்று.
ஓர்
அறையில் புதிதாகப் பிறந்த குழந்தையின் அழுகை கேட்கிறது. அதேநேரத்தில் மற்றோர் அறையில், ஒரு குடும்பம் தங்களின் அன்பான ஒருவரின் இறுதிமூச்சை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஒரே கட்டடத்திற்குள் பிறப்பும்…
மரணமும்,… நம்பிக்கையும்… பயமும்,
கண்ணீரும்… அற்புதமும்!…
அதுதான் மருத்துவமனை! ஒரு செவிலியர் அமைதியாக நோயாளியின் போர்வையைச் சரிசெய்கிறார். பலமணி நேர கடமையால் கண்கள் சிவந்திருந்தாலும், அவர் சிரிக்க முயற்சிக்கிறார். “அம்மா,… கொஞ்சம் தண்ணீர் குடிங்க,… எல்லாம் சரியாகிடும்.”
இந்த
வார்த்தைகள் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், சில நேரங்களில் இந்த ஓர் அக்கறைதான் ஒரு நோயாளிக்கு உயிர் வாழும் தைரியமாக மாறிவிடுகிறது.
மருத்துவமனை
என்பது வெறும் சிகிச்சை அளிக்கும் இடமல்ல; அது மனித அகந்தை உடையும் இடம்; அங்கே பணக்காரர் தனியாக அழுகிறார்; ஏழை அமைதியாகச் செபிக்கிறார்; படித்தவர் பதறுகிறார்; படிக்காதவர் ‘இறைவன் இருக்கிறார்’ என்று
நம்பிக்கையுடன் சொல்கிறார்; அங்கே எல்லாரும் ஒரே மாதிரி.
ICU வாசலுக்கு வெளியே சில நேரங்களில் அனைத்து மதங்களும் ஒன்றாக நிற்கின்றன. ஒருவர் செபமாலை உருட்டுகிறார். மற்றொருவர் குர்ஆன் வசனங்களை வாசிக்கிறார். மற்றொருவர் அமைதியாகக் கைகளைக் கூப்பி நிற்கிறார். ஆனால், எல்லாருடைய செபமும் ‘இறைவா… இன்னும் கொஞ்ச நாள் இவர்கள் வாழ அருள்தாரும்’ என்று
ஒரே வானத்தை நோக்கித்தான் செல்கிறது.
மருத்துவமனையின்
இரவு நேரங்களில் பல உண்மைகள் கற்றுக்கொள்ளப்படுகின்றன.
வாழ்க்கை மிகவும் குறுகியது. அன்பை வெளிப்படுத்தத் தாமதிக்கக்கூடாது. மன்னிப்பதை நாளைக்குத் தள்ளிவைக்கக்கூடாது.
‘நான் இருக்கேன்’
என்ற வார்த்தை கூட ஒருவருக்கு உயிர் வாழக் காரணமாக மாறலாம். சில நேரங்களில் மருத்துவமனைப் படுக்கைகளில் படுத்திருப்பவர்கள் மருந்தைவிட அதிகமாக எதிர்பார்ப்பது ஓர் அன்பான குரலைத்தான்: ‘பயப்படாதீங்க,… நான் உங்களோட இருக்கேன்.’
இன்று
மருத்துவமனையின் ஓர் அறையில் யாரோ ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கலாம். யாரோ ஒருவர் கண்ணீர் மல்கச் செபித்துக் கொண்டிருக்கலாம். யாரோ ஒருவர் அதிசயத்திற்காகக் காத்திருக்கலாம். ஆனால், அந்த இரவின் ஆழ்ந்த அமைதிக்குள் கூட, இறைவன்
அமைதியாக நடந்து கொண்டிருக்கிறார். ஒரு செவிலியரின் கரங்களில்,… ஒரு மருத்துவரின் முயற்சியில்,… ஒரு தாயின் கண்ணீரில்,… ஓர் அருள்சகோதரியின் செபத்தில்... ஆம், மருத்துவமனையின் இரவு என்பது மனித சக்தி முடிவடையும் நேரமல்ல; இறைவனின் கருணை தொடங்கும் நேரம். அதனால்தான் அந்த இரவு அமைதிக்குள் கூட ஒரு
பெரிய செபம் தொடர்ந்து உயர்கிறது: ‘இறைவா,… இந்த உயிரை மட்டும் காப்பாற்றிவிடு.’
மருத்துவமனையின்
இரவு அமைதியாகத் தோன்றலாம்; ஆனால், அந்த அமைதிக்குள் ஆயிரம் செபங்கள் வானத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன.
மனிதர்களின்
கைகள் சோர்ந்துபோகும் இடத்தில், இறைவனின் கரங்கள் இன்னும் வேலை செய்துகொண்டே இருக்கின்றன. ஏனெனில், சில இரவுகள் மருந்துகளால் அல்ல; கருணையால் விடிகின்றன.