ஐரோப்பியக் கத்தோலிக்க ஸ்கவுட் மற்றும் கைட்ஸ் (Scouts and Guides) இயக்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, அதன் உறுப்பினர்களை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ, நற்செய்தியைத் தங்களின் வாழ்வின் வழிகாட்டியாகக் (Navigator) கொள்ள இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். “இயற்கை எனும் புத்தகத்தை இறைவார்த்தையோடு இணைத்துப் படியுங்கள்” என்று குறிப்பிட்ட திருத்தந்தை, “நற்செய்தி என்பது வெறும் புத்தகம் அல்ல; மாறாக, அது சவால்களால் சோர்ந்து போயிருக்கும் மனிதகுலத்திற்கு, நீதி மற்றும் உண்மையைத் தரும் கிறிஸ்துவோடு ஏற்படும் நேரடிச் சந்திப்பாகும்” என்றார். இவ்வியக்கத்தின் கல்விப்பணி மற்றும் சேவை மனப்பான்மையைப் பாராட்டிய அவர், பிரதிபலன் பாராத சேவையே சுயநலத்திலிருந்து மனிதனை விடுவித்துச் சமூகப் பொறுப்பை வளர்க்கும் என்றார். தலைவர்களின் முன்மாதிரியான வாழ்வும், ஆன்மிக உதவியாளர்களாகச் செயல்படும் அருள்பணியாளர்களின் பணியும் இளையோரின் நம்பிக்கை வளர்ச்சிக்கு முக்கியம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, வணிக நோக்கிலான ஐரோப்பாவாக இல்லாமல், கத்தோலிக்க விழுமியங்களை உள்ளடக்கிய மக்களுக்கான ஐரோப்பாவைக் கட்டமைக்க உழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.