திருப்பலி முன்னுரை
அன்பார்ந்த
சகோதர-சகோதரிகளே! இன்று நம் கத்தோலிக்கத் திரு அவை, தன் மையமும் ஊற்றுமாக விளங்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழாவைப் பெருமகிழ்வோடு கொண்டாடுகிறது.
இன்றைய
நற்செய்தி இருவகை உணவுகளை நம்முன் வைக்கிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களுக்குப் பொழியப்பட்ட மன்னா உணவு இறைப்பராமரிப்பின் அடையாளமாக இருந்தாலும், அது தற்காலிகமானது; நிலைவாழ்வைக் கொடுக்கவில்லை. ஆனால், விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு நிலைவாழ்வை அளிக்கிறார். “மானிட மகனுடைய சதையை உண்டு, அவரது இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்” என்ற
இறைவார்த்தையின்படி, நற்கருணை நமக்கு மீட்பையும் பகிர்தலையும் நிலை வாழ்வையும் வழங்கும் அன்பின் அடையாளமாகத் திகழ்கிறது. நற்கருணையில் இயேசு உண்மையாகவே உயிரோடு பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை உணர்த்தவே பீடத்தின் அருகில் ஒளிரும் விளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. அன்று புனிதர்கள் இந்த நற்கருணையை உள்வாங்கி, தாங்களே வாழும் நற்கருணையாய் மாறி இறைவனைப் பிரதிபலித்தார்கள். நாமும் நம் உள்ளமாகிய ஆலயத்தை ஒப்புரவு அருளடையாளத்தால் தூய்மை செய்து, தகுந்த தயாரிப்போடு இயேசுவை உட்கொள்வோம். கத்தோலிக்கக் கிறித்தவர்கள் என்பதில் பெருமைகொண்டு, உயிருள்ள இயேசுவை நம் வாழ்வில் அனுபவித்து ஆசிபெற, இத்திருப்பலியில் பக்தியோடு இணைவோம்!
முதல் வாசக
முன்னுரை
இன்றைய
முதல் வாசகம் உடலுக்கு வலுவூட்டும் உணவை மட்டுமல்லாமல், ஆன்மாவிற்குத் தேவையான ஆன்மிக உணவைப் பற்றியும் பேசுகிறது. நமது உடல் நலனுக்கு அன்றாட உணவு எவ்வளவு முக்கியமோ, அதைவிட நம் ஆன்மாவின் வளர்ச்சிக்கு இறைவார்த்தை மிகவும் இன்றியமையாதது. எனவே, இறைவார்த்தையை நம் வாழ்வின் உணவாக ஏற்று, அதன் வழிநடக்க அழைப்பு விடுக்கும் இம்முதல் வாசகத்திற்குப் பக்தியோடு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
இறைவன்
நமக்கு இலவசமாகக் கொடுத்த இந்த உன்னத வாழ்வில் பிளவுகள், பிரிவுகள், சுயநலக் குழு மனப்பான்மைகள் மற்றும் வேறுபாடுகள் அனைத்தையும் களைந்தெறிய இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் பங்குபெறுவதால், கிறிஸ்துவின் பிள்ளைகளாய் ஒன்றிணைந்து, அவர் விரும்பும் ஒருமைப்பாட்டைக் காத்து, பிறரோடு இணக்கமாக வாழவேண்டும் என்று வலியுறுத்தும் இவ்வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உயிருள்ள உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை நற்செய்தி விழுமியங்களின்படி வழிநடத்தத் தேவையான ஞானத்தையும் அருள்வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நற்கருணையில்
வாழும் ஆண்டவரே! எம் பங்கு மக்கள் அனைவரும் நற்கருணையின் மகத்துவத்தை உணர்ந்து, தகுந்த தயாரிப்போடு உம்மை உட்கொள்ளவும், நற்கருணை நாதரின் உயிருள்ள பிரசன்னத்தை அன்றாட வாழ்வில் கண்டுகொள்ளும் அகவொளியைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நற்கருணை
நாதரே! நாங்கள் அனைவரும் இந்த வழிபாட்டின் ஆசிரைப் பெற்று நம்பிக்கையோடு வாழவும், எங்கள் குடும்பங்களில் அன்பும், அமைதியும் என்றும் நிலைத்திருக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நற்கருணையில்
வாழும் நல்லவரே! புற்றுநோய் மற்றும் தீராத வியாதிகளால் அவதியுறும் எம் மக்களுக்குத் தெய்வீகக் குணமளித்துத் தேற்றவும், உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து எம் மக்களைக் காத்து நலமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.