இரவு 1.30 மணி. அறையின் விளக்கு அணைந்துவிட்டது. ஆனால், இன்னும் ஒரு வெளிச்சம் மட்டும் முகத்தில் விழுகிறது - அது மொபைல் திரையின் வெளிச்சம். கண்கள் சோர்ந்திருக்கின்றன. மனம் எதையோ சுமந்து கொண்டிருக்கிறது. ஆனால், விரல்கள் மட்டும் தொடர்ந்து Scroll செய்து கொண்டிருக்கின்றன.
ஒரு Reel; மற்றொரு Video; சில Memes; சில Status updates. அப்படியே
நேரம் நகர்கிறது. ஆனால், வாழ்க்கை மட்டும் எங்கோ நின்றுபோன மாதிரி தோன்றுகிறது.
இன்று
மனிதன் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கிறான். ஆனால், பல நேரங்களில் இதயத்தில்
வெறுமையாகிவிட்டான். மனிதன் இயந்திரங்களோடு இணைந்தான்; ஆனால், இதயங்களோடு இணைவதை இழந்துவிட்டான்.
இன்று
பலரின் அலைப்பேசியில் 100% சார்ஜ் இருக்கிறது.
ஆனால், மனத்தில் உற்சாகம் இல்லை; உறவுகளில் உயிர் இல்லை; செபத்தில் ஆழம் இல்லை; வாழ்க்கையில் அமைதி இல்லை.
காலையில்
கண் திறந்தவுடன் முதலில் பார்க்கப்படுவது இறைவனின் முகமல்ல;… Notification Screen. ‘யாராவது
message பண்ணிருக்காங்களா?’ ‘என் போஸ்டுக்கு எத்தனை லைக் வந்திருக்கு?’, ‘அவன் ஆன்லைன்ல இருக்கானா?’.... இப்படித்
தொடங்கும் நாள், அதே Screen வெளிச்சத்தோடு
இரவிலும் முடிகிறது. ஆனால், அந்த Screen வெளிச்சத்தால்
உள்ளத்தின் இருளை அகற்ற முடியவில்லை.
“வரலாற்றில் என்றுமில்லாதவாறு நாம் தொடர்புகளின் உச்சத்தில் இருக்கிறோம்; இருப்பினும், இதுவரை இல்லாதவாறு தனிமையின் ஆழத்திலும் வீழ்ந்திருக்கிறோம்” என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
முன்பு
மனிதர்கள் தனிமையில் இறைவனைத் தேடினார்கள். இன்று தனிமையில் போனைத் தேடுகிறார்கள். சில நிமிடங்கள் அமைதியாக உட்காருவதற்கே இந்தத் தலைமுறை பயப்படத் தொடங்கிவிட்டது. ஏனெனில், அமைதியில்தான் உள்ளத்தின் உண்மையான சத்தங்கள் கேட்கத் தொடங்குகின்றன.
நான்
உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேனா? என்னை யாராவது உண்மையாகப் புரிந்துகொள்கிறார்களா?
நான் சோர்ந்து போய்விட்டேனா? என் வாழ்க்கை எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறது? இந்தக்
கேள்விகளிலிருந்து தப்பிக்கத்தான் நாம் மீண்டும் போன் திரைக்குள் ஓடிவிடுகிறோம்.
“அமைதியாக இருந்து நான் இறைவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” (திபா
46:10),
இன்று
பல உறவுகள் அருகில் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால், உண்மையில் மனிதர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் தொலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே வீட்டில் நான்கு பேர் இருந்தாலும், நான்கு பேரின் கண்களும் நான்கு போன் திரைகளில்தான் இருக்கின்றன.
சாப்பிடும்போது,
பயணத்தில், தூங்குவதற்கு முன், செப நேரத்திலும் கூட இறைவனுடன் பேச நேரமில்லை; ஆனால், தெரியாத மனிதர்களின் வாழ்க்கையை Scroll செய்ய
நேரம் இருக்கிறது. இந்த உலகம் நமக்கு Connection கொடுத்தது;
ஆனால், அமைதியை எடுத்துக்கொண்டது.
நாம்
ஆன்லைனில் எல்லாருடனும் இணைந்து இருக்கிறோம். ஆனால், நம்முடைய உள்ளத்தோடு மட்டும் தொடர்பை இழந்துவிட்டோம். சில ஸ்டேட்டஸ்களுக்குப் பின்னால் அமைதியான குரல் இருக்கிறது. சில ‘ஐயாம் ஃபைன்’-களுக்குப் பின்னால் உடைந்த இதயங்கள் இருக்கின்றன. தொலைப்பேசியில் கேலரி நிரம்பிக்கொண்டே இருக்கிறது; ஆனால், இதயம் காலியாகிக்கொண்டே இருக்கிறது.
இன்று
போனில் பேட்டரி குறைந்தால் உடனே சார்ஜரைத் தேடுகிறோம். ஆனால், வாழ்க்கை சோர்ந்துபோனால், இறைவனைத் தேட மறந்துவிடுகிறோம். உண்மையில் மனிதனின் ஆன்மாவுக்கும் ஒரு சார்ஜர் தேவை. அதுதான் செபம்! அதுதான் அன்பு! அது குடும்பத்தோடு மனம் திறந்து பேசும் சில நிமிடங்கள். அது அமைதியாக இறைவனின் முன்னால் அமர்வது. ஏனெனில், Wi-Fi சிக்னல் இல்லாமல் போன் செயல்படாததுபோல, இறைவனுடன் இணைப்பு இல்லாமல் உள்ளம் அமைதியாக இருக்காது.
ஒருநாள்
முழுவதும் போனைச் சார்ஜ் செய்ய மறக்கமாட்டோம்; ஆனால், பல நாள்களாக நம்
ஆன்மா Low Battery நிலையில்
இருப்பதைக்கூட கவனிக்காமல் வாழ்கிறோம்.
இந்தக்
கட்டுரையை வாசிக்கும் நீங்களும் சில நிமிடங்கள் உங்கள் போனை ஒதுக்கிவையுங்கள். யாருக்காவது அழைத்து, ‘நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?’ என்று அன்புடன் கேளுங்கள். குடும்பத்தினருடன் மனம் திறந்து பேசுங்கள். சில நிமிடங்கள் அமைதியாக இறைவனுடன் செபத்தில் இணைந்திருங்கள். ஏனெனில், உலகில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது முக்கியமல்ல; உங்கள் குடும்பத்திற்கும் இறைவனுக்கும் நேரம் ஒதுக்கி இருப்பதுதான் உண்மையில் முக்கியம்.
போனில்
Full Charge இருந்தாலும்,
அன்பில்லாத வாழ்க்கை வெறுமையானதே. இறைவன் இல்லாத இதயம் எப்போதும் Low Battery நிலையில்தான்
இருக்கும்.