பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார்
நீடுவாழ் வார் (குறள் 6)
குறள் விளக்கம்: ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை
அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
சிந்தனை: அறிவியல் வெளிநோக்கியது: ஆன்மிகம் உள்நோக்கியது.
புறப்பார்வையை அகற்றி அகப்பயணம் செய்தால் ஒழுக்க நெறியில் நீண்ட நாள் வாழமுடியும்.
ஐம்பொறிகளும் உலக இன்பங்களை உள்ளத்திற்குள் கொண்டு வருபவை. கண்களை மூடி, தனக்குள் பிரயாணம்
செய்து ஆன்ம வாழ்வை மனிதன் நோக்கவேண்டும்.
கலீல்
கிப்ரானுடைய இந்தக் கதை ஆழமானது: ஒரு நகரத்தில் நாய் ஒன்று இருந்தது. அது திடீரென்று
மெய்ஞானமடைந்தது. மற்ற நாய்களிடம், “குரைப்பதை நிறுத்துங்கள்; தேவையில்லாமல் குரைப்பதாலேயே
நம் ஆற்றலில் பெரும்பகுதி வீணாகிவிடுகிறது” என்று
போதனை செய்தது.
ஆனால்,
குரைப்பதை நிறுத்துவது நாய்களுக்குக் கடினமாக இருந்தது. அவை அந்த அறிவுரை வழங்கிய நாயிடம்
விளக்கமளித்தன: “நீங்கள் ஒரு மாபெரும் நாய். நீங்கள் சொல்வது எல்லாம் மெய்தான். ஆனால்,
நாய்கள் எங்களால் மௌனமாகத் தியானம் செய்ய முடிவதில்லை” என்றன.
தன்னைப்
போல் சாதாரண நாய்களால் செய்ய இயலவில்லை என்பது அறிவுஜீவி நாய்க்கு மகிழ்வைத் தந்தது.
சில நாள்களுக்குப் பின், பிற நாய்கள் முடிவெடுத்தபடி ஒருநாள் குரைக்காமல் இருந்தன.
அறிவு ஜீவி நாய்க்கோ எந்த நாயும் குரைக்காமல் இருப்பது ஆச்சரியம் அளித்தது. பின் ஓர்
இருண்ட மூலைக்குச் சென்று குரைக்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து எல்லா நாய்களும் குரைக்க
ஆரம்பித்தன. அறிவுஜீவி நாய் மீண்டும் போதிக்க ஆரம்பித்தது.
இக்கதையில்
தவறான எண்ணத்தோடு அறிவு ஜீவி நாய் மற்ற நாய்களுக்கு வழிகாட்டுகிறது. குரைப்பது என்ற
பொறியை அடக்கி, ஆற்றலைப் பெருக்கு என்ற அறிவுஜீவி நாய் போதித்த போதனை சரியானது. ஆனால்,
அப்போதனையைப் பிற நாய்கள் கடைப்பிடிப்பதை அது விரும்பவில்லை. தங்கள் பலவீனத்தைக் கட்டுப்படுத்தி
அவை முயற்சிகள் மேற்கொள்வதையும் அது விரும்பவில்லை.
மாற்கு
நற்செய்தி இயல் 9 இறைவார்த்தைகள் 42 முதல் 47-இல் இறைமகன் இயேசு, “என்மீது நம்பிக்கை
கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக்
கல்லைக் கட்டி கடலில் தள்ளி விடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில்
விழச்செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்திற்குள்
தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள்
கால் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய்
நரகத்தில் தள்ளப்படுவதைவிட, கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். நீங்கள்
இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணுடையவராய் இறையாட்சிக்கு
உட்படுவது உங்களுக்கு நல்லது” என்கின்றார். நமது நல்வாழ்வுக்கு இடறலாய்
இருக்கும் பொறிகளை இறைமகன் இங்கு வரிசைப்படுத்துகின்றார். கை, கால், கண் என அங்க அவயங்களை
வரிசைப்படுத்திவிட்டு, அவை இல்லாதிருப்பதே நலம் என்கிறார். அகப் பயணத்தில் ஆர்வம் காட்டி
வாழ்வோம்.