news-details
ஆன்மிகம்
தோமா கால் பதித்த தேசம் – 05

பெர்சியா அரசன் டேரியஸ் கி.மு.  515-இல் சிந்து சமவெளி மாகாணத்தைக் கைப்பற்றி, தட்சசீலத்தைத் தலைநகராக்கிக் கொண்டான். யூதர்கள் பலர் பெர்சியாவிலிருந்து வந்து இங்கு குடியேறலாயினர். இதனால் பெர்சியம், யூத மதங்கள் இவற்றோடு ஜொராஸ்ட்ரியத் (Zoroastrianism) தத்துவமும் இங்கே ஏற்பட்டது.

தட்சசீல நகரின் வளமை மற்றும் செழுமை பற்றிக் கூறவேண்டுமானால் அதற்குரிய சான்றாக விளங்குவது கி.மு. 326-ஆம் ஆண்டில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பாகும். அவன் முதலில் பெர்சியாவைக் கைப்பற்றிய பின்னர் சிந்து சமவெளிப் பகுதியை நெருங்கினான். அப்போது தட்சசீல மன்னன் ஹம்பி, அலெக்சாண்டரின் படைபலத்திற்கு அஞ்சி அவனிடம் சரணடைந்து ஓர் உடன்படிக்கை செய்துகொண்டான். அதன்படி அலெக்சாண்டருக்குப் பரிசாக ஏராளமான மாடுகள், ஆடுகள் மற்றும் படைவீரர்களை வழங்கினான்அந்த அளவுக்கு மிகச் செழுமையான நகரமாக தட்சசீலம் விளங்கிற்று என அலெக்சாண்டருடன் வந்திருந்த கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சில காலம் கழித்து, மௌரியர் ஆட்சியின் கீழ் வந்த தட்சசீலம் அவர்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கிற்று. கி.மு. 272-இல் மகா அசோகரின் ஆட்சிக்கு இந்நகர் உட்பட்டு, இங்கே புத்த சமயக் கொள்கைகள் பரப்பப்பட்டன. புத்த விகார்கள், தூண்கள் பலவும் கட்டப்பட்டன. பின்னர் அரசுகள் மாறி, கி.மு. 19-இல் பார்த்தியர்கள் ஆளத் தொடங்கினர்.

பார்த்தியர்கள் தொடக்க காலத்தில் ஜொராஸ்டர் என்ற ஈரானிய தீர்க்கத்தரிசியின் தத்துவங்களையே தங்கள் சமயக் கொள்கைகளாகப் பின்பற்றினர். பாரசீகம், கிரேக்க மரபுகள் கலந்த கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினர். மிகச்சிறந்த குதிரை வீரர்களாகவும், வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாகவும் பாராட்டத்தக்கப் போர்வீரர்களாகவும் விளங்கினர். மேலும் கட்டடக் கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.

கட்டடக் கலையில் பேரார்வம் கொண்ட அரசன் கொண்டோபரஸ், தலைநகர் தட்சசீலத்தில் 352 அடி நீளமும், 272 அடி அகலமும் கொண்ட பெரிய தோர் அரண்மனையை அமைத்து வாழ்ந்தாலும், எல்லாரும் வியக்கத்தக்க வகையில் உரோமானியக் கலைநயம் மிக்க மற்றொரு புதிய அரண்மனை தனக்குவேண்டும் என்று ஆசைப்பட்டான். அதன் பொருட்டே தன் நாட்டு வணிகரான ஹப்பானின் மூலம் சிறந்த கட்டடக் கலைவல்லுநரை வெளிநாடுகளில் தேடினான். அரசன் கட்டளைப்படியே ஹப்பானும் தோமாவைக் கண்டறிந்து அவரைத் தன்னோடு அழைத்து வந்திருந்தான்.

அரசன் கொண்டோபரசைத் தலைநகர் தட்சசீலத்தில் ஹப்பான் அறிமுகத்துடன் சந்தித்தார் தோமா. தோமாவின் உயர்ந்த தோற்றம், சிவந்த நிறம், வலிமைமிகு கரங்கள், நுண்ணிய பார்வையுடைய கண்கள் இவற்றைக் கண்டதும் அரசனுக்குத் தோமாவின்பால் நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நாள்களில் வணிகத்தால் பல நாடுகள் தொடர்புகளில் இருந்தன. பல்வேறு நாடுகளில் வணிகத்தின் பொருட்டு வேற்று நாட்டினரும் நடமாடுவதால் தோமாவின் உருவத் தோற்றத்தை அவன் அதிசயமாகப் பார்க்கவில்லை.

உம்மை நான் வரவழைத்த காரணத்தை ஹப்பான் கூறியிருப்பார். எல்லா நாட்டினரும் வியப்படையும்படிக்கு புதிய அரண்மனை ஒன்றைக் கட்ட விரும்புகிறேன். நீர் சிறந்த தச்சர் என்று கேள்விப்பட்டேன். மரம் மற்றும் கற்களைக் கொண்டு என்னென்ன செய்வீர்?” என்று கேட்டான் அரசன்.

தோமா அமைதியான குரலில்மரக்கட்டைகள், கற்களைப் பயன்படுத்தி பெரிய கோவில்கள், அரண்மனைகள், நினைவிடங்களை அமைக்க முடியும். கல்தூண்கள், மிகப்பெரிய வாயிற்கதவுகள், சன்னல்கள், மேல்மாடங்கள் கூடிய அரண்மனையை எழுப்பித் தரமுடியும்என்று கூற, “இத்தகைய அனுபவம் மிக்க தச்சரைத்தான் நான் தேடினேன்என்று மனம் மகிழ்ந்து போனான் அவன். தோமாவிடம் கட்டடக் கலைப் பற்றி உரையாடியவன் அவரை அரண்மனை கட்டவேண்டிய இடத்தைக் காட்ட ஊருக்கு வெளியே வரவழைத்தான்.

தான் அரண்மனை அமைக்க விரும்பிய இடத்தைக் காட்டி, அது குறித்து அரசன் கேட்டபோதுஅரண்மனை கட்டுவதற்கு இது மிகச்சிறந்த இடம்என்று தோமா ஒப்புதல் அளித்தார். “அப்படியானால் உடனடியாக வேலையைத் தொடங்குங்கள்எனக் கேட்டுக்கொண்ட அரசனிடம்குளிர் காலத்தில்தான் என் பணியை ஆரம்பிப்பேன்என்று தோமா கூறிய பதில் அவனுக்கு வியப்பாக இருந்தது.

எல்லாரும் கோடைக்காலத்தில்தான் கட்டட வேலையைச் செய்வார்கள். நீர் குளிர்காலம் என்கிறீர். குளிர்காலத்தில் எப்படி அரண்மனை கட்ட இயலும்?” என்று அரசன் கேட்க, தோமாவோஅப்போதுதான் என்னால் இயலும். குளிர்காலத்தில் தொடங்கி கோடைக்காலத்திற்குள் அரண்மனையைக் கட்டி முடிப்பேன்என்றார் உறுதியாக.

அயல்நாட்டாருக்கு இந்தியப் பகுதிகளின் வெப்பம் எப்போதும் ஒத்துக்கொள்ளாது என்பது ஒருபுறமிருக்க, தோமாவின் உள்மனதிற்குள் ஏதோ எண்ணமும் இருந்தது.

தோமாவின் உறுதியான பதில் குறித்துச் சிந்தித்த அரசன், “இப்போது நீங்கள் செல்லலாம்; இன்னும் சில நாள்களில் தங்களைச் சந்திப்பேன். அதற்குள் அரண்மனைக்கான வரைபடம் ஒன்றைத் தயாரித்துக் கொடுங்கள்என்றான். தோமாவும் ஒப்புக்கொண்டார். அரசனின் வேண்டுகோள்படியே தோமா வரைபடத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அதற்காக இரும்பாலான ஓர் அளவுகோலைக் கொண்டு அரண்மனையின் சுற்று எல்லைகளை, உள் அளவுகளை அளக்கலானார்.

கோடைக்காலத்தில் வெப்பம் தாக்காத வகையில் அறைகளைக் குறித்தார். குளிர்காலத்தில் நெருப்பு மூட்டிக் குளிர்காய புகைபோக்கிகளைக் குறிப்பெடுத்தார். சூரிய ஒளி பாயும்படிக்குக் கிழக்குப் பகுதியில் கதவுகள் அமைத்தார். வெளிச்சமும் குளிர்ந்த காற்றும் தாராளமாக வரக்கூடிய வகையில் மேற்கு நோக்கியபடி சன்னல்களுக்கு இடங்கள் கொடுத்தார். தெற்குப்பகுதியில் வெளிச்சமான சமையல் அறைகளுக்கு இடம் ஒதுக்கினார். வடக்கில் நீர்த்தேக்கங்களுக்கு வசதி செய்தார். அங்கிருந்து தண்ணீர் வரும் குழாய்களுக்குப் பாதைகள் வகுத்தார். அரண்மனையின் மையப்பகுதியில் புதையல் அறையை நிர்மாணித்தார்.

அரண்மனைக் கலைஞர்கள் வசிக்க இடமும், அரண்மனைக்குச் சற்று தொலைவில் குதிரைகள், கழுதைகளுக்கான தொழுவங்களும் குறிக்கப்பட்டன. பணி முடியும்வரை பொன், வெள்ளி, கொல்லர்கள், மரவேலைப்பாடு செய்பவர்கள். வண்ணம் பூசுபவர்களுக்கான தங்குமிடங்களைக் குறித்தார். இவற்றையெல்லாம் அளவுகளோடு குறித்துக்காட்டி வரைபடத்தைத் தயாரித்த தோமா, அதனை அரசனிடம் அளித்தபோது வரைபடத்தைக் கண்ட அரசன் தோமாவின் தொழில்நுட்ப அறிவைக் கண்டு வியந்து போனான். தோமாவைப் பாராட்டியவன், “நீர் திறன் மிக்கவர் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னுடைய பணிச்சுமைகள் காரணமாக என்னால் அடிக்கடி இங்கே வரமுடியாது. வேறு மாநிலத்தில் தங்கவிருக்கிறேன். எனவே, தலைநகர் திரும்ப சில காலமாகலாம். உமக்குத் தேவையான அளவுக்கு பொன், வெள்ளிக்காசுகளை அளிக்கிறேன். கட்டடப் பொருள்களை வாங்கப் பயன்படுத்திக்கொள்ளும். மேலும், தேவைப்பட்டால் செய்தி அனுப்பும், ஏற்பாடு செய்கிறேன். நான் திரும்பி வருகையில் இந்த வரைபடத்தில் திட்டமிட்டுள்ளபடி அரண்மனையை முடித்துவையும்என்றவன், அங்கிருந்து நம்பிக்கையோடு புறப்பட்டுப் போனான்.

அரசன் புறப்பட்டுப் போனபின்பு, அவனுடைய நம்பிக்கையைத் தோற்கடிக்கும் விதமாக இறைநம்பிக்கையில் தோமா இயல்பாகச் செயல்பட ஆரம்பித்தார். அரசன் கொடுத்த பணத்தை அரண்மனை கட்டச் செலவிடாமல், அருகிலுள்ள நகர்ப்புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்கும் கால்நடையாகச் சென்றவர், அரசன் வந்து கேட்டால் என்ன பதில் கூறுவது என்பது பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல், கையிலிருந்த பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்து உதவிக்கொண்டே நடந்தார்.

அரசன் கொண்டோபரஸ் அரண்மனை கட்டுவதற்காகத் தன்னிடம் கொடுத்த பணத்தை ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவிய தோமா, தான் செல்லும் இடமெங்கும் நற்செய்தியைப் போதிக்கலானார். அத்துடன் நோயாளர்களைக் குணப்படுத்துவதும், தீய ஆவிகளை ஓட்டுவதுமாக மக்களுக்கு நன்மைகள் புரிந்தார். அவர் இருக்குமிடம் தேடி மக்கள் வரத் தொடங்கினர். அவரோ ஓரிடத்தில் இல்லாமல் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.      

(தொடரும்)