தமிழ்நாடு சிறைப்பணி அமைப்பானது சிறைக்கைதிகளுக்கும், அவர்களின் குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு மற்றும் அவர்களின் நலனுக்காக உழைக்கும் தேசியத் தன்னார்வ இயக்கமாகும். இது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையால் யூபிலி 2000-ஆம் ஆண்டில் இந்தியச் சிறைப்பணியாக அங்கீகரிக்கப்பட்டது.
நமது
தன்னார்வத் தொண்டர்கள் ஏறக்குறைய நாடு முழுவதும் 850 பிரிவுகளில் வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் குறிப்பாக, ஆற்றுப்படுத்துதல், மருத்துவ முகாம், இலவசச் சட்ட உதவிகள், வேலை சம்பந்தமான பயிற்சி முகாம்கள் மூலமாக இந்தியாவில் உள்ள சிறைகளில் மிகவும் தியாக உள்ளத்தோடு சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக, வெளிநாட்டுச் சிறைவாசிகள் நமது இந்தியச் சிறைகளில் மொழி அறியாது வாடி வருகின்றனர். அவர்களது குரலைக் கேட்டு நமது தாயாம் திரு அவை அந்நாட்டுத் தூதர்கள், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது குடும்பத்தினரோடு இணைத்து வைப்பது நமது சிறப்புப் பணியாகும்.
புனித
மாக்சிமிலியன் கோல்பே தன்னுடைய துணிவான வாழ்வு முறையால் சிறைக்கைதிகளைப் பாதுகாப்பதில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். புனித கோல்பே இரண்டாம் உலகப் போரின்போது சிறைபிடிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். இவர் சிறைக்கைதிகளோடு இருந்தபோது தனக்காக அளிக்கப்பட்ட சிறிதளவு உணவையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டார். பலரைச் சிறப்பானதோர் ஒப்புரவு அருள்சாதனம் பெற ஆயத்தம் செய்து, அவர்களுக்காகச் செபம் செய்தார்.
இறுதியாக,
ஒரு சகோதரருக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து, இன்றைய உலகில் யாரும் செய்ய இயலாத செயலை அன்று செய்து முடித்தார். இந்தத் தியாக மனநிலை பகிர்தல், தனக்கு முக்கியம் என்று கருதுகின்ற சில பொருள்கள், செபம், நேரம், பணம் மற்றும் நம்வாழ்வுமுறை ஆகியவற்றை இன்று இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
தமிழ்நாட்டில்
9 மத்தியச் சிறைச்சாலைகள், 5 பெண்கள் தனிச் சிறைச்சாலைகள், 10 மாவட்டச் சிறைச்சாலைகள், 3 திறந்தவெளி சிறைச்சாலைகள் மற்றும் கிளை சிறைச்சாலைகள் உள்பட 120 சிறைச்சாலைகளில் ஏறக்குறைய 22,631 சிறைவாசிகள் நமது வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 18 மறைமாவட்டங்களில் மறைமாவட்ட ஆயர்களது மேற்பார்வையில் சிறைவாசிகளின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, சிறைவாசிகளின் குடும்பங்களுக்குப் பொருளாதார உதவி, வாழ்வாதார உதவி, சிறைவாசிகளுக்கு மன ஆற்றுப்படுத்துதல், சிறைப்பணி தன்னார்வத்
தொண்டர்கள் வழியாக நடைபெற்று வருகிறது.
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயரின் உதவியுடன் உற்றார்-உறவினர் இல்லாதவர்களுக்கு மறுவாழ்வு இல்லம் ஒன்று திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை
கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சிறைவாசிகள் தங்களுக்கு ஒருவருமில்லை என்ற மன ஏக்கத்தை மாற்றும்
முயற்சியாக இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது.
மேலும்,
இம்மடலின் வழியாக, பேராயர்கள், ஆயர்கள், மாநிலக்குழு மற்றும் தமிழ்நாடு சிறைப்பணியின் 18 மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தல், சிறைச்சாலை சந்திப்பில் திரு அவையின் பிரசன்னத்தைக் கொண்டுவருதல் போன்ற அவர்களது இடைவிடாத முயற்சிகள் விலைமதிப்பற்றவை.
தமிழ்நாட்டில்
உள்ள எங்கள் 18 மறைமாவட்டக் குழுக்களின் அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நாங்கள் உளமார அங்கீகரிக்கிறோம். மறக்கப்பட்டவர்களுடன் நடந்து, சட்ட உதவியை எளிதாக்கி, சிறை நண்பர்களின் குடும்பங்களுக்கு மன ஆலோசனை, வாழ்வாதார
உதவி மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவி என விடாமுயற்சியுடன் பணிபுரிந்து வருகிறார்கள்.
அவர்களின் தன்னலமற்ற சேவை நம்பிக்கை இல்லாத இடத்தில் நம்பிக்கையைக் கொண்டு வருகிறது.