அண்மையில் கொண்டாடப்பட்ட 6-வது உலக தாத்தா-பாட்டியர் மற்றும் முதியோர் நாளை முன்னிட்டு, வத்திக்கான் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ‘குடும்பம் மற்றும் வாழ்வுக்கான’ ஆணையத்தின் முதியோர் பணிப் பொறுப்பாளர் விட்டோரியோ ஸ்கெல்ஸோ, “முதியோர் பராமரிக்கப்படவேண்டிய சுமையல்ல; மாறாக, போற்றப்பட வேண்டிய கொடை. சேவைகளை அமைப்பது மட்டும் போதாது; உறவுகளைக் கட்டியெழுப்பவேண்டும். அப்போதுதான் இறைவனால் நாம் மறக்கப்படவில்லை என்ற உண்மை, குடும்பத்தாலும் பங்குச் சமூகத்தாலும் நாம் மறக்கப்படவில்லை என்ற தினசரி அனுபவமாக மாறும்” என்று கூறினார். “ஒதுக்கித்தள்ளும் கலாச்சாரத்தைக் கைவிட்டு, தனிமையில் வாழும் முதியோரைச் சந்திக்க அழைப்பு விடுத்தார். முதியோர் தங்களின் பலவீனத்திற்கு அஞ்சாமல், உலக அமைதிக்காகத் தொடர் செபம் செய்யும் பணியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், இளையோரும் முதியோரும் இணைந்து செயல்படும் தலைமுறைக்கு இடையேயான உறவே திரு அவையின் வாழ்வை வளப்படுத்தும் என்றும் கூறினார்.