news-details
சிறப்புக்கட்டுரை
(MEP 250) மனிதர்களை உருவாக்கிய மரபு! திண்டிவனத்தின் வேதியர் உருவாக்கப் பயணம்

திரு அவையின் வரலாறு என்பது ஆலயங்களின் வரலாறு மட்டுமல்ல; அது மனிதர்களை உருவாக்கிய வரலாறும் ஆகும். குறிப்பாக, இறைநம்பிக்கையைத் தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்ற இறைமக்களின் வரலாறில்லாமல் எந்தத் திரு அவையின் வளர்ச்சியையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

தமிழ்நாட்டுத் திரு அவையின் வளர்ச்சியில் கத்தோலிக்க வேதியர்கள் ஆற்றிய பங்கு அளவிட முடியாதது. கிராமங்களின் மையத்தில் வாழ்ந்து, இறைவார்த்தையை அறிவித்து, இறைமக்களை வழிநடத்தி, குருக்களின் அருள்பணியை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றவர்கள் இவர்களே. குருக்களின் வருகை அரிதாக இருந்த காலங்களிலும், இறைநம்பிக்கைச் சமூகங்களின் ஆன்மிக வாழ்வை உயிர்ப்புடன் காத்து வளர்த்தவர்கள் வேதியர்களே.

தொலைநோக்குப் பார்வையிலிருந்து தொடங்கிய பயணம்: அருள்தந்தை தாமஸ் கவன்-டஃபி

1918-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மறைத்தளத்திற்கு வந்த அருள்தந்தை தாமஸ் கவன்-டஃபி, வளர்ந்து கொண்டிருந்த கிறித்தவச் சமூகங்களுக்கு உள்ளூர் பணியாளர்கள் தேவை என்பதை ஆழமாக உணர்ந்தார். குறிப்பாக, மக்களின் மொழியிலும் பண்பாட்டிலும் வாழ்ந்து, நற்செய்தியை அவர்களின் வாழ்க்கையோடு இணைத்துச் சொல்லக்கூடிய வேதியர்களின் அவசியத்தை இவர் தெளிவாகக் கண்டறிந்தார்.

இதன் விளைவாக, 1921-ஆம் ஆண்டு திண்டிவனத்தில் ஆசிரியர் - வேதியர் உருவாக்கப் பள்ளியை நிறுவினார். கல்வியையும் மறைக்கல்வியையும் இணைத்த இந்த முயற்சி, ஒரு பயிற்சி மையத்தின் தொடக்கம் மட்டுமல்ல; தமிழ்நாட்டுத் திரு அவையின் எதிர்காலத்திற்கான தீர்க்கதரிசன முதலீடாகவும் அமைந்தது.

இவரது பார்வையில் வேதியர் என்பது வெறும் போதகர் அல்லர்; மாறாக, நற்செய்தியின் சாட்சி, சமூகத்தின் வழிகாட்டி, இறைநம்பிக்கையின் பாதுகாவலர் மற்றும் உள்ளூர் திரு அவையின் அர்ப்பணிப்புள்ள பணியாளர்.

மறுமலர்ச்சிக்கு உயிரூட்டியவர்: அருள்தந்தை எட்மெண்ட் பெக்கர்

இரண்டாம் உலகப்போரின் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தப் பணிக்குப் புதிய உயிர் அளித்தவர் அருள்தந்தை எட்மெண்ட் பெக்கர். வேதியர் ஊழியம் திரு அவையின் நற்செய்திப் பணிக்குத் தவிர்க்க முடியாத கருவி என்பதை உணர்ந்த இவர், மறுமலர்ச்சிப் பணியை உறுதியுடன் முன்னெடுத்தார்.

1961-ஆம் ஆண்டு பேராயர் அம்புரோஸ் அவர்களின் ஆசிர்வாதத்துடன் வேதியர் உருவாக்க மையம் மீண்டும் திறக்கப்பட்டது. “அவர் பெருகவும் நான் சிறுகவும்வேண்டும்என்ற திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் அதன் ஆன்மிக இலட்சியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

முறையான பாடத்திட்டங்கள், ஆன்மிக உருவாக்கம், தமிழ்மொழியில் மறைக்கல்வி வளங்கள் மற்றும் மேய்ப்புப் பணிக்கான நடைமுறைப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் வேதியர் உருவாக்கம் புதிய பரிமாணத்தை அடைந்தது. 1963-ஆம் ஆண்டு முதல் குழுவைச் சேர்ந்த வேதியர்கள் Missio Canonica பெற்றுப் பல மறைமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வு, இந்தப் பணியின் வரலாற்றுச் சிறப்பை வெளிப்படுத்தியது.

உறுதியான அடித்தளத்தை அமைத்தவர்: அருள்தந்தை ஆந்திரே கரோஃப்

1961-ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட மையத்தின் முதல் இயக்குநராக அருள்தந்தை ஆந்திரே கரோஃப் பொறுப்பேற்றார். அறிஞர், வரலாற்றாசிரியர் மற்றும் அர்ப்பணிப்புள்ள மறைப்பணியாளர் என்ற சிறப்புகளை ஒருங்கே கொண்டிருந்த இவர், உருவாக்கப் பணிக்கு உறுதியான திசையையும், நிலையான அடித்தளத்தையும் வழங்கினார்.

இவரது பார்வையில் வேதியர் என்பது அறிவைப் பரப்புபவர் மட்டுமல்லர்; இறைவார்த்தையில் வேரூன்றிய, திரு அவை உணர்வில் வளர்ந்த, இறைமக்களோடு பயணிக்கும் இறைநம்பிக்கையின் சாட்சி. எனவே, மனித, ஆன்மிக, அறிவுசார் மற்றும் மேய்ப்புப்பணிசார் பரிமாணங்களை ஒருங்கிணைக்கும் முழுமையான உருவாக்க முறையை இவர் வலியுறுத்தினார்.

ஒரு மையத்திலிருந்து ஓர் இயக்கமாக...

திண்டிவனத்தில் தொடங்கிய இந்த முயற்சி, பின்னாளில் தமிழ்நாட்டுத் திரு அவையின் மறைக்கல்வி மற்றும் உருவாக்க இயக்கமாக வளர்ந்தது. இன்று TNBCLC என அறியப்படும் இந்த நிறுவனம் வேதியர் உருவாக்கம், விவிலிய விழிப்புணர்வு, திருவழிபாட்டுப் புதுப்பிப்பு மற்றும் பொதுநிலையினர் உருவாக்கம் ஆகிய துறைகளில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.

1961 முதல் 2009 வரை நூற்றுக்கணக்கான வேதியர்கள் இம்மையத்தில் உருவாக்கப் பெற்றுள்ளனர். அவர்களின் ஊழியத்தின் வழியாக ஆயிரக்கணக்கான குடும்பங்களும், கிராமச் சமூகங்களும் இறைநம்பிக்கை வாழ்வில் வளர்ச்சி பெற்றுள்ளன. இந்தப் பணி புள்ளி விவரங்களால் அளவிட முடியாத ஆன்மிகச் செல்வமாகும்.

உயிரோடு வாழும் பாரம்பரியம்

பாண்டிச்சேரியில் MEP மறைப்பணியாளர்களின் 250 ஆண்டுகால அருள்பணியை நாம் நினைவுகூரும் இந்த நேரத்தில், இவர்களின் தொலைநோக்குப் பார்வை, நற்செய்தி ஆர்வம் மற்றும் மனித உருவாக்கத்தின் மீதான அர்ப்பணிப்பின் உயிருள்ள நினைவுச் சின்னமாக திண்டிவனம் TNBCLC விளங்குகிறது.

அருள்தந்தை தாமஸ் கவன்-டஃபி விதைத்த விதை, அருள்தந்தை எட்மண்ட் பெக்கர் புதுப்பித்து வளர்த்த மரம், அருள்தந்தை ஆந்திரே கரோஃப் உறுதியான வேரூன்றச் செய்த பாரம்பரியம் ஆகியவை இன்று பல தலைமுறைகளின் வாழ்வில் கனி கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

திரு அவையின் எதிர்காலம் அதன் மனிதவள உருவாக்கத்தில்தான் உள்ளது என்பதை திண்டிவனத்தின் வேதியர் உருவாக்க வரலாறு நமக்கு ஒரு நிலையான உண்மையை நினைவூட்டுகிறது.