சிலியின்
கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 27-28 தேதிகளில் நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவின் சவால்கள்’
என்ற உலகக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்குத் திருத்தந்தை லியோ அனுப்பிய செய்தியில், “தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைக்கும் புதிய வாய்ப்புகளுக்கு இடையே, மனிதக் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், உண்மைக்கும் பொதுநலனுக்கும் சேவை செய்யும் வகையிலும் செய்தித்தொடர்புகள் அமையவேண்டும்” என
அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தந்தையின்
‘மகத்தான மானுடம்’ (Magnifica Humanitas) என்ற
சுற்றுமடலின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவின் அறநெறி மற்றும் பண்பாட்டுத் தாக்கங்கள் குறித்து இலத்தீன் அமெரிக்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் ஆலோசித்தனர். சாண்டியாகோ பேராயர் கர்தினால் பெர்னாண்டோ சோமாலி தொடக்க உரையாற்றுகையில், “சமூக ஊடகங்கள் மனித உறவுகளையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தளங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை விட மனிதக் கண்ணியமும் உண்மையுமே மிக முக்கியம்”
என்று வலியுறுத்தினார். தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி அனைத்திற்கும் மனிதனின் மீறமுடியாத கண்ணியமே முதன்மை அடிப்படையாகவும் இறுதி இலக்காகவும் இருக்கவேண்டும் என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.