மறைப்பணியின் வரலாற்றில் என்றும் நிலைக்கும் புகழுடன் விளங்கும் மறைபரப்புச் சபைகளுள் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை (Paris Foreign Missions Society - MEP) சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது. 1776-ஆம் ஆண்டு (250 ஆண்டுகளுக்கு முன்) புதுவை மண்ணில் வேரூன்றிய MEP சபையின் மறைப்பணி, இறைநம்பிக்கையை அறிவித்ததோடு நிற்காமல், உள்ளூர் திரு அவையின் வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தையும் அமைத்தது. எனவே, 2026-ஆம் ஆண்டை, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டம் யூபிலி ஆண்டாகக் கொண்டாடி மகிழ்கிறது. இந்த அருள் நிறைந்த ஆண்டில், பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் தோற்றமும் வளர்ச்சியும், புதுவை மறைப்பணியின் உருவாக்கமும் வளர்ச்சியும், MEP ஆயர்களின் மேய்ப்புப் பணியும், தென்னிந்திய திரு அவைக்கு சிறப்பாக, புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு அவர்கள் வழங்கிய மகத்தான ஆன்மிக, கல்வி, சமூக மற்றும் பண்பாட்டுப் பங்களிப்புகளையும், வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அறிந்துகொள்வது சாலச்சிறந்தது.
யார் இந்த
MEP மிஷனரிகள்?
பாரிஸ்
அயலக மறைபரப்புச் சபைக்கு நீண்ட வரலாறு உண்டு. இச்சபையானது பல்வேறு துறவற சபைகளிலிருந்து வேறுபட்டது. இச்சபைக் குருக்கள் துறவற வார்த்தைப்பாடு கொடுப்பதில்லை. மணத்துறவு பூண்டவர்கள். இவர்கள் தமது தாய்நாட்டில் பணியாற்றுவதில்லை. பிற நாடுகளில் நற்செய்தி அறிவிப்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவர்கள். இதனாலேயே இச்சபை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை என அழைக்கப்படுகிறது. இச்சபை அதிகாரப்பூர்வமாக
1663-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதற்கு முன்பே சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
1629-ஆம் ஆண்டு
வெந்தாதூர் கோமகன் கென்றி தெ லெவி, உலக
வாழ்வின் பெருமைகளையும் பதவிகளையும் துறந்து, தன்னை முழுமையாக இறைப்பணிக்காக அர்ப்பணித்தார். ஏழைகள், நோயாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்காக அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட இவரது பணிகள், பிரான்சில் புதிய ஆன்மிக விழிப்புணர்வை உருவாக்கின. அதன் தொடர்ச்சியாக, 1630-ஆம் ஆண்டு ‘தேவ நற்கருணைக் குழு’ அவரால் நிறுவப்பட்டது. பின்னர் 1646-ஆம் ஆண்டு மன்னர் 14-ஆம் லூயி அனுமதியுடன் வெளிநாட்டு மறைப்பணிக்காக குருக்களை உருவாக்கும் உயரிய நோக்குடன் பாரிசில் ஒரு குருமடம் நிறுவப்பட்டது.
1653-ஆம் ஆண்டு
சீனா மற்றும் டோங்கிங் பகுதிகளில் பணியாற்றிய இயேசு சபைக்குரு அருள்திரு. அலெக்சாந்தர் தே ரோட், மறைப்பணி
நடைபெறும் நாடுகளிலேயே உள்ளூர் குருக்களை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடைய சிந்தனையை உரோமை மறைபரப்புப் பேராயத்தின் முன்வைத்தார். அவரது முயற்சியின் பலனாக, 1657-ஆம் ஆண்டு அருள்தந்தையர்கள் பிரான்சுவா பல்லு, லாம்பெர்ட் தெ லா மோத்
ஆகியோர் உரோமை சென்று மறைப்பணிக்கான அனுமதியைப் பெற்றனர். 1658-ஆம் ஆண்டு அவர்கள் அப்போஸ்தலிக்க விக்கர்களாக நியமிக்கப்பட்டனர்.
அவர்களோடு 1660-ஆம் ஆண்டு அருள்திரு. இஞ்ஞாசி கொத்தோலெந்தி அவர்களும் அப்போஸ்தலிக்க விக்கராக நியமிக்கப்பட்டார். இம் முயற்சிகளின் சிகரமாக பிரான்சில் 1663-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் நாள் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இதற்கு பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயி அரசு அங்கீகாரமும், 1664-ஆம் ஆண்டு திருத்தந்தை ஏழாம் அலெக்சாந்தர் திரு அவையின் அதிகாரப்பூர்வ ஒப்புதலும் வழங்கினர். தொடக்கத்தில் இவர்கள் கொச்சின்-சீனா, டோங்கிங், சீனா ஆகிய மூன்று நாடுகளில் மட்டும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு, சையாம் மற்றும் தெற்கு ஆசியப் பிரெஞ்சுக் காலனிகளில் பணியாற்றத் தொடங்கினார்.
புதுச்சேரி எவ்வாறு
ஆசிய
மறைப்பணித்தளங்களின்
மையம்
ஆனது?
தொடக்கத்தில்
MEP சபை மிஷனரிகள் தெற்காசிய நாடுகளுக்கு இந்தியா வழியாகச் சென்றனர். ஆனால், அப்போது புதுவையில் அவர்கள் மறைப்பணி எதுவும் தொடங்கவில்லை. புதுச்சேரியுடனான இச்சபையின் உறவு 1688-ஆம் ஆண்டில் தொடங்கிப் படிப்படியாக வலுவடைந்தது. சையாம் (தாய்லாந்து) நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சியால் அங்கிருந்து வெளியேறிய அருள்தந்தையர்கள் தெ லியோன், தெ
லா விங்ச் ஆகிய மறைப்பணியாளர்கள் புதுச்சேரியில் தஞ்சமடைந்தனர். ஜீதியாவில் இயங்கி வந்த MEP சபையின் பொருளகம் 1688-ஆம் ஆண்டு புதுச்சேரியில் நிறுவப்பட்டது. 1720-ஆம் ஆண்டு புதுவையில் பெரியக்கடை வீதிக்கு அருகில் புனித காணிக்கை அன்னை கோவிலை இவர்கள் கட்டினர். மேலும், 1767-ஆம் ஆண்டு சையாமிலிருந்த குருத்துவக் கல்லூரி அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1771-ஆம் ஆண்டு புதுச்சேரி அருகிலுள்ள வீராம்பட்டினத்தில் புதிய குருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. 1775-ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பத்திநாதர், அதனை உரோமைத் திரு அவையின் நேரடி பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்தார். இதன் மூலம் புதுச்சேரி ஆசிய மறைப்பணிகளுக்கான குறிப்பிடத்தக்க மையமாக உருவெடுக்கத் தொடங்கியது.
இயேசு சபையினரின்
மலபார்
மிஷன்
MEP சபையிடம் ஒப்படைக்கப்பட்டது
ஏன்?
18-ஆம்
நூற்றாண்டின் மையப்பகுதியில் இயேசு சபைக்கு எதிராக ஐரோப்பாவில் அரசியல் மற்றும் மத எதிர்ப்புகள் தீவிரமடைந்தன.
1759-ஆம் ஆண்டிலிருந்து பல நாடுகளில் அவர்களது
பணிகள் தடைசெய்யப்பட்டன. இறுதியில், 1773-ஆம் ஆண்டு இயேசு சபையானது திருத்தந்தை 14-ஆம் கிளமெண்ட் அவர்களால் உலகமெங்கிலும் தடை செய்யப்பட்டது. அப்போது மதுரை மற்றும் கோரமண்டல் பகுதிகளின் மறைப்பணிகள் தலைமையை இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டன. அந்தச் சூழலில், புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியின் முக்கிய மையமாகவும், அதன் ஆளுநரான திரு. லா லொரிஸ்தான் பாரிஸ்
அயலக மறைபரப்புச் சபையின் பணிகளை ஆதரிப்பவராகவும் விளங்கினார். இதனால் புதுச்சேரி கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லும் மறைப்பணியாளர்களின் முக்கிய இடைநிலையமாகவும், MEP சபையின்
நிர்வாக மையமாகவும் மேலும் வலிமை பெற்றது.
இந்நிலையில்,
தென்னிந்திய மறைப்பணிகளின் எதிர்காலம் குறித்து உரோமை மறைபரப்புப் பேராயமும், பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயியும் ஆலோசித்து, அவற்றின் பொறுப்பை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தனர். அதன் பின்னர், அச்சபை சையாம் நாட்டின் அப்போஸ்தலிக்க விக்கராகப் பணியாற்றிய ஆயர் பியர் பிரிகோ அவர்களைத் தென்னிந்திய மறைப்பணிகளின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. உரோமை மறைபரப்புப் பேராயம் திருத்தந்தை ஆறாம் பத்திநாதரின் ஆணையின்படி, முன்னர் இயேசு சபையினர் நிர்வகித்த கோரமண்டல் கடற்கரை மறைப்பணிகளை அவரது மேற்பார்வையில் ஒப்படைத்தது. 1776-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் நாள் பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி இந்த ஏற்பாட் டிற்கு அரசு ஒப்புதலை வழங்கினார். பின்னர், அதே ஆண்டு டிசம்பர் 30-ஆம் நாள் அரசாணை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையிடம் அனுப்பப்பட்டதன் மூலம், தென்னிந்திய மறைப்பணிகளின் பொறுப்பு அதிகாரப்பூர்வமாக அச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1777-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் நாள் ஆயர் பிரிகோ சட்டப்பூர்வமாக மலபார் மிஷனை ஏற்று, மறைப்பணியைத் தொடங்கினார். இவ்வாறு, அரசியல் மற்றும் மத நெருக்கடிகளின் மத்தியில்
உருவான இச்சபை, புதுவையையும் தென்னிந்தியத் திரு அவையையும் புதிய மறுமலர்ச்சியின் பாதையில் வழிநடத்தி, அதன் வரலாற்றில் தலைமுறைகள் போற்றும் நீடித்த பங்களிப்பைச் செய்தது.
புதுவை மறைப்பணியில்
MEP சபை ஆயர்களின்
அர்ப்பணிப்பும்
மேய்ப்புப்
பணிகளும்
1777-ஆம் ஆண்டு
பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை புதுவை மறைப்பணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, தென்னிந்தியத் திரு அவை அமைதியான சூழலில் இல்லை. அரசியல் ஆதிக்கப்போட்டிகள், ஐரோப்பிய வல்லரசுகளின் மோதல்கள், போர்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதியப் பாகுபாடுகள் என எண்ணற்ற சவால்கள்
மறைப்பணியின் பாதையைச் சூழ்ந்திருந்தன. ஆனால், அந்த இருண்ட சூழல்களிலேயே இறையருளை நம்பிக்கையாகக் கொண்டு பணியாற்றிய பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை ஆயர்கள், புதுவை மறைப்பணியின் அடித்தளத்தை உறுதிப்படுத்தியதோடு, அதன் எதிர்கால வளர்ச்சிக்கும் நிலையான திசையைக் காட்டினர்.
புதுவையை
மறைப்பணியின் மையமாகத் தேர்ந்தெடுத்து பணியைத் தொடங்கிய ஆயர் பிரிகோ (1776-1791), புதுவை மிஷனின் முதல் தலைவராக வரலாற்றில் இடம்பெற்றார். மிகக் குறைந்த மறைப்பணியாளர்களுடன் பரந்த நிலப்பரப்பில் நற்செய்தியை எடுத்துச் செல்லும் கடினமான பொறுப்பை ஏற்ற அவர், அதிகார எல்லைப் பிரச்சினைகள், அரசியல் குழப்பங்கள் மற்றும் வெளிப்புற எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மறைப்பணியின் வேர்களை ஆழமாக ஊன்றினார். அவரது காலத்திலேயே புதுவை மிஷனின் நிர்வாக அடித்தளம் உருவாகத் தொடங்கியது.
அவருக்குப்
பின் பொறுப்பேற்ற ஆயர் ஷம்பெனுவா (1791-1810), பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம், ஆங்கிலேயர்-பிரெஞ்சுக்காரர் மோதல்கள், திப்பு சுல்தானின் படையெடுப்புகள் போன்ற வரலாற்றுச் சூழல்களுக்கிடையில் மறைப்பணியை நிலைநிறுத்தினார். எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த மறைப்பணியாளர்களைக் கொண்டு தொலைதூரக் கிராமங்களையும் அடைந்து, இறைமக்களுடன் உயிரோட்டமிக்க உறவை வளர்த்தார். எதிர்ப்புகள் பெருகிய காலத்திலும் தளராத நம்பிக்கையுடன் பணியைத் தொடர்ந்த அவரது மனவுறுதி புதுவை மறைப்பணிக்கு உயிரூட்டியது.
ஆயர்
ஹெபர்ட் (1810-1836) அவர்களின் காலம், மனிதநேயப்பணியின் பொற்காலமாக நினைவுகூரப்படுகிறது. காலரா, கொடிய பஞ்சம், வறுமை போன்ற பேரிடர்களால் துன்புற்ற மக்களின் நடுவே இறையன்பின் முகமாக வாழ்ந்தார். திரு அவையின் சொத்துகளையும், வழிபாட்டுப் பொருள்களையும் விற்று ஏழைகளின் பசியைத் தீர்த்த அவரது தியாகம், நல்ல மேய்ப்பனின் அர்ப்பணிப்பிற்கு அழியாத சான்றாகும். சாதிய வேறுபாடுகளால் பிளவுபட்ட சமூகத்தில் சமத்துவத்தின் விதைகளை விதைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை.
புதுவை
மறைப்பணியை வழிநடத்திய ஆயர் பொனான் (1836-1861) அவர்கள், அதன் வரலாற்றில் மறுமலர்ச்சியை உருவாக்கிய தொலைநோக்குப் பார்வையுடைய தலைவராகத் திகழ்ந்தார். இந்திய குருக்களை உருவாக்குதல், மறைப்பணி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துதல், அச்சகப் பணியைத் தொடங்குதல், மறைமாநிலப் பேரவைகளை நடத்துதல், கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்துதல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் மறைப்பணிக்கு புதிய பரிமாணத்தை அளித்தன. அவரது காலத்தில் 1845-ஆம் ஆண்டு புதுவை, மைசூர், கோயம்புத்தூர் ஆகிய தனித்தனி மிஷன்கள் உருவாக்கப்பட்டதும், 1846-ஆம் ஆண்டு மதுரை மிஷன் மீண்டும் இயேசு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டதும் நிர்வாக வரலாற்றில் முக்கிய மைல்கற்களாக அமைந்தன. பெண்கல்வி, உள்ளூர் குருக்களின் உருவாக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றிலும் அவர் முன்னோடியான பங்களிப்பை வழங்கினார்.
ஆயர்
கொதெல் (1861-1867) குறுகிய காலமே பணியாற்றியிருந்தாலும் கருணை, எளிமை மற்றும் ஏழைகளின் மீதான பேரன்பால் மக்களின் உள்ளங்களில் நிலையான இடம்பெற்றார். கல்விப் பணி, அனாதைகளின் பாதுகாப்பு, சமூகநலச் சேவைகள் ஆகியவற்றில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு மறைப்பணியின் மனிதநேய முகத்தை மேலும் வெளிப்படுத்தியது.
ஆயர்
லவுணான் (1868-1892) அவர்கள், பொருளாதார நெருக்கடிகளும் சமூகப் பிரிவினைகளும் நிறைந்த காலத்தில் உறுதியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். சமூக ஒற்றுமையையும் திரு அவை ஒழுங்கையும் வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்தன. 1886-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்நாள் திருத்தந்தை 13-ஆம் சிங்கராயரின் மனித மீட்பு (Humane Salutis) என்ற
ஆணையின்படி, இந்தியாவில் கத்தோலிக்க ஆட்சிப்பீடம் நிறுவப்பட்டது. அப்போது புதுவை உயர்மறைமாவட்டத்தின் முதல் பேராயராக உயர்த்தப்பட்ட அவர், புதுவைத் திரு அவையை புதிய நிர்வாகக் கட்டமைப்பிற்குள் அழைத்துச்சென்றார். நீண்டகால அதிகாரப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, திரு அவையின் எதிர்கால வளர்ச்சிக்காக உறுதியான அடித்தளத்தை அமைத்தார்.
பேராயர்
காந்தி (1892-1909) அவர்கள், புதுவை உயர்மறைமாவட்டத்தின் வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு இட்டுச் சென்றார். இந்தியக் குருக்களின் உருவாக்கம், கிராமப்புறக் கல்வி விரிவாக்கம், புதிய கிறித்தவக் குடியிருப்புகள், திரு இருதய ஆண்டவர் பக்தியின் பரவல் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பணிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. 1907-ஆம் ஆண்டு புதுவை திரு இருதய ஆண்டவர் ஆலயம் அபிஷேகம் செய்யப்பட்டது அவரது ஆட்சிக்காலத்தின் மறக்க முடியாத நிகழ்வாகும். சாதிய மோதல்களும் சமூகப் பதற்றங்களும் தலைதூக்கிய காலத்திலும், அமைதி, ஒற்றுமை மற்றும் இறைநம்பிக்கையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் புதுவைத் திரு அவையின் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.
பேராயர்
மோரெல் (1909-1930) அவர்கள், முதல் உலகப்போர், பொருளாதார நெருக்கடி, இந்திய விடுதலை இயக்கம், தொற்றுநோய்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்ற கடினமான சூழ்நிலைகளில் மறைப்பணியை வழிநடத்தினார். 1918-ஆம் ஆண்டு மறைமாவட்டப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த அமைப்பை (DGS - Diocesan Organization of Schools) உருவாக்கியதும், 1921-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை நிறுவியதும் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களாகும். துன்ப நேரங்களில் மறைப்பணியாளர்களை மக்களோடு இணைத்து, கல்வி, மருத்துவம், நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்திய அவரது தலைமையால் திரு அவை மக்களின் நம்பிக்கையின் இல்லமாகத் திகழ்ந்தது.
பேராயர்
கோலாஸ் (1930-1955) அவர்கள், புதுவை உயர்மறைமாவட்டத்தைத் தன்னிறைவு பெற்ற உள்ளூர் திரு அவையாக மாற்றும் தொலைநோக்குடன் செயல்பட்டார். இந்தியக் குருக்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களைக் குருமடங்களில் சேர்த்தல், புதிய கல்வி நிறுவனங்களை நிறுவுதல், தரமான கல்வியை அனைவருக்கும் எட்டச் செய்தல் ஆகியவற்றில் அவர் அளித்த பங்களிப்பு அளப்பரியது. 1932-ஆம் ஆண்டு கடலூரில் இளங்குருமடம் தொடங்கப்பட்டதும், 1934-ஆம் ஆண்டு புதுவை பெரிய குருமடம் பெங்களூருக்கு மாற்றப்பட்டு புனித பேதுரு குருமடமாக வளர்ச்சி பெற்றதும் அவரது காலத்தின் முக்கிய நிகழ்வுகளாகும். அவரது தலைமையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இந்தியக் குருக்கள் திருநிலைப்படுத்தப்பட்டனர்.
அருள்சகோதரிகளின் கல்வி, மருத்துவம், சமூகநலப் பணிகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்தார். இரண்டாம் உலகப்போரின் சவால்களைக் கடந்தும், கல்வி, சமூகநீதி, உள்ளூர் குருத்துவ வளர்ச்சி ஆகியவற்றிற்கு அவர் அமைத்த அடித்தளம், பிற்காலங்களில் புதுவை உயர்மறைமாவட்டத்தின் தன்னிறைவு வளர்ச்சிக்கான வலுவான தூணாக அமைந்தது.
MEP சபையின்
ஆயர்கள் ஒவ்வொருவரும் தமது காலத்தின் சவால்களை வெறுமனே எதிர்கொண்டவர்கள் அல்லர்; மாறாக, இறைநம்பிக்கையின் ஆற்றலால் அவற்றை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றிய தொலைநோக்குடைய மேய்ப்பர்கள். அவர்கள் விதைத்த இறைநம்பிக்கை, கல்வி, சமத்துவம், சமூகப் பொறுப்பு, உள்ளூர் குருத்துவ வளர்ச்சி ஆகிய உயரிய இலட்சியங்களே இன்று புதுவை உயர்மறைமாவட்டம் தன்னிறைவு பெற்று சிறந்து விளங்குவதற்கான உறுதியான அடித்தளங்களாகத் திகழ்கின்றன.