news-details
சிறப்புக்கட்டுரை
நற்செய்தியை அறிவித்த உலகியத் துறவு அமைப்பு

உரோமையை மையமாகக் கொண்டு செயல்பட்ட மையத் திரு அவையின் நிர்வாகம் துறவற சபைகளின் உள்கட்டமைப்புகளுக்குச் சட்ட வடிவம் கொடுத்து, அவர்களின் ஆன்மிகம், திருப்பணி, சமூக மற்றும் சமயப்பணி, திரு அமைப்பின் உறுப்பினர்களின் வாழ்நாள் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட அந்த அமைப்புகளுக்கு ஒரு சாதாரண அமைப்பாகவோ (association), உலகியத் துறவு அமைப்பாகவோ (institute)  அல்லது துறவறச் சபையாகவோ (congregation) செயல்பட அவர்களை அங்கீகரித்தது. அதேவேளையில், திரு அவை தன்னுடைய உள்கட்டமைப்புகளையும் அதன் சட்டத் திட்டங்களையும் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி விரிவாக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்ததோடு அல்லாமல், திரு அமைப்புகளையும் இத்திருப்பணிகளில் ஈடுபட அழைத்தது.

இவ்வாறு, பல்வேறு துறவறச் சபைகள் உருவாகி உலகம் எத்திசையிலும் சென்று நற்செய்தி அறிவிப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வேளையில்தான், பாரிஸ் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த பேரருள்திரு பிரான்சுவா பல்லு, பேரருள்திரு லாம்பெர்ட் தெ லா மோத் மற்றும் பேரருள்திரு இஞ்ஞாசி கோத்தலாண்டி ஆகிய அருள்தந்தையர்கள் தூய ஆவியாரால் தூண்டப்பட்டு, பாரிஸ் அயல்நாட்டு நற்செய்தி அறிவிப்புப் பணிகள் என்ற உலகியத் துறவு அமைப்பை உருவாக்கி, ஆசிய தென்கிழக்கு நாடுகளை நோக்கி நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்ய அருள்பணியாளர்களை அனுப்பினார்கள்.

17-ஆம் நூற்றாண்டில் இவர்கள் சீனா, ஜப்பான், மலேசியா, கம்போடியா, வியட்நாம், பர்மா, சியாம், கொரியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், தாய்வான், மொரிசியஸ், பிலிப்பைன்ஸ், பிரேசில், நியூ கலிபோர்னியா போன்ற உலகின் கடையெல்லைகளுக்கும் சென்று நற்செய்தியை அறிவித்தனர். இக்குருக்களை பாரிஸ் குருமடத்தில் உருவாக்கி, அவர்களை நற்செய்தி அறிவிப்பிற்காக அனுப்பினர்.

ஏறக்குறைய 17-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியிலிருந்து 1773 வரை அவர்கள் தங்களின் மறைப்பணித்தளங்களுக்குச் செல்கின்றபோது, கப்புச்சின் சபை மற்றும் இயேசு சபையினரின் மறைப்பணித்தளமாக இருந்த இந்தப் புதுச்சேரியை ஓர் இடைநிலைத் தங்குமிடமாகவும், தங்களின் பொருள்களைச் சேகரித்துவைத்து அனுப்பும் ஒரு பொருள்பாதுகாப்புக் கிடங்கு இடமாகவும் இப்புதுச்சேரியை மையமாக அமைத்தனர்.

1773-இல் இயேசு சபை கலைக்கப்பட்டபோது, திரு அவை இந்தக் கர்நாட்டிக் மறைப்பணித்தளத்தை பாரிஸ் அயல்நாட்டு நற்செய்தி அறிவிப்புப் பணிகள் என்ற உலகியத் துறவு அமைப்பிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு 1776 முதல் கர்நாட்டிக் மிஷன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, புதுவையை மையமாகக் கொண்டு இந்தியா முழுவதும் குறிப்பாக, புதுவை, தமிழ்நாட்டின் பல பகுதிகள், கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளில் ஏறக்குறைய 700 MEP குருக்களுக்கும் மேலாக இம்மண்ணில் பணிபுரிந்து தங்களையே தியாகம் செய்திருக்கின்றனர்.

MEP நற்செய்தி அறிப்பாளர்களின் தொலைநோக்குப் பார்வை

MEP ஒரு துறவறச் சபை அல்ல; இது ஓர் உலகியத் துறவு அமைப்பு. எனவேதான் தங்களின் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கான செலவுகளைத் தங்களின் நாட்டிலிருந்தும், தாங்கள் பிறந்த ஊரிலிருந்தும், தங்களின் உடன்பிறப்புகள் மற்றும் பெற்றோரிடமிருந்தும், தங்கள் நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்தும் பொருளுதவிகளைப் பெற்றுத் திரு அவையின் உள்கட்டமைப்புகளை நம் மண்ணில் கட்டியெழுப்பியுள்ளார்கள். தங்களின் மறைப்பணித்தளத்தின் பல பகுதிகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தாலும், MEP பிரெஞ்சு அருள்தந்தையர்கள் இன, மொழி பேதமின்றி, தாங்கள் பணிசெய்த இடங்களிலெல்லாம் செய்த நிதி முதலீடுகள் கணக்கிட முடியாதவை.

மறைப்பணித்தளக் உள்கட்டமைப்பு: சுயசார் புடைத்தன்மை - நிலங்கள், பண்ணைகள்

நற்செய்திப் பணியாளர்கள் தாங்கள் எந்த மறைப்பணித்தளங்களுக்குச் சென்றாலும், முதலில் ஆலயம், பள்ளிகள், துறவற இல்லங்கள், ஆகியவைகளை வடிவமைத்தனர். அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் ஒவ்வொரு பங்கும் பொருளாதாரச் சுயசார்புடைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பது அவர்களின் கனவு. எனவே, அந்தத் தளத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய நிலம், பண்ணை போன்ற சொத்துகளை வாங்கினர். அங்குதான் அவர்கள் கோவில்களையும் பள்ளிகளையும் துறவற இல்லங்களையும் கட்டினர். இவை அனைத்தையும் தங்கள் துறவற அமைப்பின் உதவியோடும், தங்களின் சொந்தப் பணத்தைக் கொண்டும் வாங்கினர், கட்டியெழுப்பினர்.

இன்று நம் கண்களுக்குப் புலப்படும் வகையில் பார்க்கின்றபோது, புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம், கும்பகோணம் மறைமாவட்டம், சேலம் மறைமாவட்டம், தர்மபுரி மறைமாவட்டம், பெங்களூரு உயர்மறைமாவட்டம், மைசூர் மறைமாவட்டம், கோயம்புத்தூர் மறைமாவட்டம், வேலூர் மறைமாவட்டத்தின் சில பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானாவிலுள்ள சில மறைமாவட்டங்கள், ஊட்டி மறைமாவட்டம், விசாகப்பட்டினம் மறைமாவட்டம், வாரணாசி மறைமாவட்டம், வட கிழக்கு இந்தியாவில் உள்ள சில மறைமாவட்டங்கள் மற்றும் இலங்கை போன்ற இடங்களில் தங்கள் வாழ்வைப் பணயம் வைத்து உழைத்தனர். இந்த இடங்களிலெல்லாம் அமைக்கப்பட்ட திரு அவையின் மையங்களின் எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டு நிலம் வாங்கியுள்ளனர். கோவில்கள், சிற்றாலயங்கள், பள்ளிக்கூடங்கள் கட்டியுள்ளனர்; துறவற இல்லங்களை அமைத்துள்ளனர். இவர்கள் இவற்றையெல்லாம் வைத்து தங்களின் சபையின் வளர்ச்சிக்கு வருமானம் சேர்க்கவில்லை; மாறாக, நம் தலத் திரு அவையின் வளர்ச்சிக்காக, பொருளாதார சுயசார்புத்தன்மையை இலக்காக வைத்து, முதலீடு செய்துள்ளனர்.

பேராலயங்கள், திருத்தலங்கள் - ஆலயங்கள்: மேற்கூறிய எல்லா மறைமாவட்டங்களின் பேராலயங்கள் ஏறக்குறைய இவர்கள் காலத்தில்தான் கட்டப்பட்டவை. மனம் திரும்பிய மக்கள் பெரும்பாலும் ஏழைகள். எனவே, நம் மக்களால் வழங்க இயலாது என்பது எதார்த்தம். நம்முடைய மறைமாவட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், ஜென்ம ராக்கினி அன்னை பேராலயம், வில்லியனூர் மாதா திருத்தலம், அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம் ஆலயங்கள், இருதய ஆண்டவர் பசிலிக்கா, கடலூர் முதுநகர், கடலூர் புதுநகர், திண்டிவனம், முகையூர், விரியூர், அணிலாடி, காரைக்கால், மையனூர் நெய்வேலி, விருதாச்சலம், செஞ்சி, இருதயம்பட்டு போன்ற இடங்களில் கட்டப்பட்ட ஆலயங்களுக்கு நிகராக நம்மால் இன்று கட்டியெழுப்ப முடியுமா? என்பது மிகப்பெரிய வினா!

நிரந்தரச் சொத்துகளில் குறிப்பிடத்தக்கவை

பெங்களூர் புனித இராயப்பர் குருமடம்: இன்றும் இந்தக் குருமட நிலமும், தொடக்க காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் MEP அருள்தந்தையர்களால் உருவாக்கப்பட்டு, இன்றும் நம்முடைய உயர்மறைமாவட்டத்தின் சொத்தாகவே இருக்கின்றது. இந்தப் பழைய கட்டடங்கள் இரண்டாம் உலகப் போரின்போது, காயம்பட்ட பிரித்தானிய, இந்தியப் படைவீரர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்டேட்டுகள் () பண்ணைகள்: ஏற்காட்டில் இருந்த மைசூர் எஸ்டேட், நம்முடைய மறைமாவட்டத்தின் பணிகளுக்காக நிதி தரும் ஊற்றாக இருந்தது. பால்மாடிஸ் எஸ்டேட், சான் ஜோஸ் எஸ்டேட் மொத்தம் ஏறக்குறைய 1500 ஏக்கர் நிலங்கள் MEP அருள்தந்தையர்களால் விலைக்கு வாங்கப்பட்டவையே. கார்மேல் மடம், ஒஸ்பீஸ் மடம், பல இடங்களில் உள்ள கருணை இல்லங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையோடுஎதிர்காலக் குழந்தைகளின் பராமரிப்பிற்காக, அவர்களின்  உணவிற்குத் தேவையான நெல் பயிரிட ஏறக்குறைய 700 ஏக்கர் நிலமுடைய தஞ்சை டெல்டா பகுதியிலும் நீலவேலி எஸ்டேட்டை வாங்கினர்.

திண்டிவனம் மையம்:கத்தோலிக்க மையம்என்று அழைக்கப்படுகின்ற அந்த இடத்தில் உயர்நிலைப்பள்ளி தற்போது மேல்நிலைப்பள்ளி, ஆசிரியப் பயிற்சிப் பள்ளி, வேதியர் பயிற்சிப்பள்ளி, ஒலி-ஒளி பதிவு மையம், பாடப் புத்தகங்கள், மறைக்கல்வி நூல்கள் அச்சிட ஓர் அச்சுக்கூடம், பயிற்சி நிலை ஆசிரியர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக ஒரு மாதிரிப்பள்ளி; மேலும், விவிலிய திருவழிபாட்டு, மறைக்கல்வி பயிற்சிக்கூடங்கள், அதற்குத் தேவையான நூல்கள் உருவாக்கம்... இவைகளெல்லாம் நடைபெற இந்த மையத்தை MEP தந்தையர் உருவாக்கியுள்ளனர்.

மேலும், ஏழை மாணவர்களின் உணவுத் தேவைக்காகப் பெரிய விளைநிலங்களையும வாங்கி உள்ளனர். இந்த விளைநிலங்களில் ஒன்றில்தான் தற்போது நம்முடைய புனித அன்னாள் கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம் மறைமாவட்டம்தான் இந்த மையத்தின் கட்டடங்கள், நிலம் ஆகியவற்றை தமிழ்நாடு ஆயர் பேரவையின் விவிலிய, திருவழிபாடு, மறைக்கல்வி மையமாகச் செயல்பட வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிட வேண்டியது.

பங்கு அளவில்: நம் மறைமாவட்டத்தில் 107 பங்குகளிலும், ஏன் தற்போது மறைத்தூதுப் பணித்தளங்களாக அறிவிக்கப்பட்டு, பல துறவறச் சபைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நற்செய்தி அறிவிப்பு மையங்கள் உள்பட எல்லா இடங்களிலும் அவர்கள் எதிர்காலத்தில் அந்த மையத்திற்குச் சுய சார்புத்தன்மை இருக்கவேண்டும்; அதற்கு வேளாண்மை மூலம் வருமானத்தை ஈட்டலாம் என்ற தொலைநோக்குப் பார்வையோடும் சிந்தனையோடும் செயல்பட்டிருக்கின்றனர் என்பதைப் பார்க்கும்போது, அவர்களின் சமய மற்றும் சமூகப் பற்றை நாம் வியக்காமல் இருக்க முடியாது.

நன்கொடைகள், தானங்கள்: நம்முடைய மறைமாவட்டத்திலும், அவர்கள் பணிபுரிந்த பல மறைமாவட்டங்களிலும் சில செல்வந்தர்கள் தங்களுக்கு வாரிசுகள் இல்லாதபோது () அந்தக் கோவிலின் பாதுகாவலர்மீது அவர்களுக்கு இருந்த ஆழ்ந்த அளவிட முடியாத பற்றினால், நம்பிக்கை உணர்வோடு தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைத் தானமாகக் கொடுத்துள்ளனர். உதாரணத்திற்கு, 1933-இல் திரு. ஆரோக்கிய ஞான முதலியார் எழுதி வைத்த சாசனத்தில் ஜென்ம இராக்கினி அன்னைக்கும், வில்லியனூர் புனித லூர்து மாதாவுக்கும் எழுதி வைத்த வெள்ளி, வைர, தங்க நகைகள் மற்றும் நிலங்கள்... இவை எதையும் தங்களின் துறவு அமைப்புச் சொத்தாக மாற்றிக்கொள்ளவில்லை. நம்முடைய தலத் திரு அவைக்காகவே கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதுவே MEP-யின் தனிச்சிறப்பு.