news-details
சிறப்புக்கட்டுரை
புதுவையில் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் மறைப்பணி மற்றும் உள்நாட்டுக் குருக்களின் உருவாக்கம்

பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை என்பது ஒரு தனிப்பட்ட புனிதரின் ஆன்மிக வழியை (Charism) மையமாகக் கொண்ட துறவறச் சபை அல்ல; மாறாக, உள்நாட்டுத் திரு அவையைப் பற்றிய ஆழமான புரிதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு மறைப்பணியியலின் வெளிப்பாடாகும். தொடக்கத்தில் அது ஒரு துறவற சபையாக இருப்பதற்குப் பதிலாக, ஓர் இயக்கமாகவே இருந்தது. குறிப்பாக, பல்லுவும், அவரது தோழர்களும் உரோமானிய அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காகக் கிழக்கு நாடுகளுக்குச் செல்லவில்லை; மாறாக, உண்மையான ஆசியத் திரு அவைகளை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கே சென்றனர். ஆகவே, உள்நாட்டுக் குருக்களை உருவாக்குவது பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை, மறைப்பணியின் அடிப்படை நோக்கங்களுள் ஒன்றாக அமைந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 1664, சனவரி 28-ஆம் நாள் தாய்லாந்தின் அயூத்தியாவில் நடைபெற்ற முதல் அயூத்தியா திரு அவைக் கூட்டம்வேதியர்களுக்குப் பயிற்சி அளித்தல், அவர்களைப் பணிக்குருத்துவத்திற்கு ஆயத்தப்படுத்துதல்என்ற தலைப்பில் முழு அதிகாரத்தை ஒதுக்கியது.

வீராம்பட்டினத்தில் பெரிய குருமடம் (1771)

1664-ஆம் ஆண்டிலேயே பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை மறைப்பகுதிகளுக்குச் சேவை செய்யும் வகையில்கொலேஜ் ஜெனரல்என்ற பெயரில் ஒரு பெரிய குருமடம் தாய்லாந்தின் அயூத்தியாவில் நிறுவப்பட்டது. இதன் முதல் அதிபராக அருள்தந்தை  லனோ பணியாற்றினார். ஆரம்பத்தில் ஆறு மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இக்குருமடம், பின்னர் மக்காவிலிருந்து வந்த மூன்று மாணவர்களால் மேலும் ஒன்பதாக வளர்ச்சி பெற்றது. 1765-1767-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பர்மா-தாய்லாந்து போரின் காரணமாக, குருமடம் தென் வியட்நாமிற்கு மாற்றப்பட்டது. அங்கும் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், சமயத் துன்புறுத்தல் காரணமாக 1771-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியின் பாதுகாப்பில் இருந்த பாண்டிச்சேரி அருகிலுள்ள வீராம்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. இக்காலத்தில் அருள்தந்தை பிஞோ தெ பெஹேன்  குருமடத்தின் அதிபராக 1774-ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். பின்னர் அருள்தந்தை மாதோன் பொறுப்பேற்றார். 1775-ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பயஸ்  இந்தியாவில் இயங்கி வந்த இந்தப் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை பொதுக்குருமடத்தை அதிகாரப்பூர்வ மாக அங்கீகரித்து, திருத்தூதர் பீடத்தின் சிறப்புப் பாதுகாப்பின்கீழ் வைத்தார். எனினும், கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பாண்டிச்சேரி அதிக தொலைவில் இருந்ததால் மாணவர் சேர்க்கை குறைந்து, 1781-இல் குருமடம் மூடப்பட்டது. பின்னர் 1807-ஆம் ஆண்டு பினாங்கில் மீண்டும் தொடங்கப்பட்டு ஆசியத் திரு அவைக்குப் பெரும் சேவையாற்றியது.

உழவர்கரையில் பெரிய குருமடம் (1778)

1776-ஆம் ஆண்டு இயேசு சபை தடை செய்யப்பட்டபோது பாண்டிச்சேரி பகுதியில் இயங்கி வந்த இயேசு சபையினரின் மறைப்பணிப் பொறுப்பை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை ஏற்றுக்கொண்டது. இதுவே பின்னாளில்பாண்டிச்சேரி மறைப்பணிஎன்று அழைக்கப்பட்டது. ஆயர் பிரிகோ பாண்டிச்சேரி மறைப்பணியின் பொறுப்பை ஏற்றபோது, அவருடன் ஐந்து பாரிஸ் அயலக மறைபரப்புச் சபைக் குருக்கள் மட்டுமே வந்தனர். இந்தியாவை விட்டு வெளியேற மறுத்த பதினைந்து இயேசு சபை அருள்தந்தையரும் அவர்களுடன் இணைந்து இறைப்பணியைத் தொடர்ந்தனர். 1777-இல் அருள்தந்தை நிக்கோல் ஷாம்பெனுவா மற்றும் அருள்தந்தை ஜீன் சார்ல்ஸ் பெரின் இந்தியா வந்த பின்னர், 1820 வரை புதிய மறைப்பணியாளர்கள் மிகக் குறைவாகவே அனுப்பப்பட்டனர்பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், உள்நாட்டு இறையழைப்புகளை வளர்த்து, இந்தியக் குருக்களை உருவாக்கி, இந்தியத் திரு அவையைத் தன்னிறைவு பெற்ற உள்நாட்டுத் திரு அவையாக உருவாக்கவேண்டும் என்ற பாரிஸ் அந்நிய வேத போதக சபையின் மறைப்பணித் தொலைநோக்குப் பார்வை ஒருபோதும் மங்கவில்லை. இதுவே பின்னாளில் பாண்டிச்சேரி மறைத்தளத்தின் வளர்ச்சிக்கும், இந்தியாவில் கத்தோலிக்கக் குருக்கள் உருவாக்கத்தின் வரலாற்றிற்கும் வலுவான அடித்தளமாக அமைந்தது.

ஆயர் பிரிகோ 1777-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மறைப்பணியின் பொறுப்பை ஏற்றபோது, வீராம்பட்டினத்தில் இயங்கி வந்த கொலேஜ் ஜெனரல் (College General)  வழியாக இந்திய உள்நாட்டுக் குருக்களை உருவாக்கவேண்டும் என்று ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக மூன்று இளைஞர்களை அக்குருமடத்திற்கு அனுப்பினார். ஆனால், வெளிநாட்டினருடன் தங்கள் பிள்ளைகள் தங்கிப் பயிலக்கூடாது என்ற பெற்றோரின் எதிர்ப்பினால், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர். இந்நிலையை உணர்ந்த ஆயர் பிரிகோ மக்களின் மனநிலையையும், பண்பாட்டு உணர்வுகளையும் மதித்து பாண்டிச்சேரி மறைத்தளத்திற்கெனத் தனியான பெரிய குருமடம் தொடங்கவேண்டும் என்று தீர்மானித்தார். 1778-ஆம் ஆண்டுகிராண்ட் செமினேர்என்ற பெயரில் உழவர்கரையில் பெரிய குருமடம் நிறுவப்பட்டது. இதன் முதல் அதிபராக, பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையில் இணைந்த மேனாள் இயேசு சபை அருள்தந்தையான அருள்தந்தை புஸான் நியமிக்கப்பட்டார். 1788, டிசம்பர் 20 அன்று தோமாஸ்  என்ற முதல் இந்தியர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து 1789, சனவரி 2-ஆம் நாள் பிலிப் என்ற இரண்டாவது இந்தியரும் குருவாக அருள்பொழிவு பெற்றார்.

புதுவையில் புனித யோசேப்பு குருமடம் (1792)

1791, நவம்பர் 8-ஆம் நாள் ஆயர் பிரிகோ இறைவனடி சேர்ந்தபின் ஆயர் ஷாம்பெனுவா மறைத்தளத்தின் பொறுப்பை ஏற்றார். குருமடம் நகரத்திற்கு அருகில் இருக்கவேண்டும் என்ற நோக்கில் 1792-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பேரால யத்திற்கு அருகில்புனித யோசேப்பு குருமடம்நிறுவப்பட்டது. இதன் அதிபராக அருள்தந்தை மாஞ்ஞி நியமிக்கப்பட்டார். பன்னிரண்டு மாணவர்களில், ஷாம்பெனுவா 1810-ஆம் ஆண்டு இறக்கும்முன் ஒன்பது இந்தியர்களைக் குருவாகத் திருநிலைப்படுத்தினார். அவர்களில் இருவர் பின்னர் இறந்தனர்; ஒருவர் தேவையான தகுதிகளைப் பெறவில்லை.

1810-ஆம் ஆண்டு ஆயர் எபேர் மறைத்தளத்தின் பொறுப்பை ஏற்றபோது, மறைப்பணியின் நிலை மிகவும் சவாலானதாக இருந்தது. அப்போது மொத்தம் ஒன்பது ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஆறு பேர் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபைக் குருக்களும், மூவர் மேனாள் இயேசு சபை அருள்தந்தையரும் ஆவர். நாற்பது ஆண்டுகள் குருமட அதிபராகப் பணியாற்றிய அருள்தந்தை மாஞ்ஞி தனது மாணவர்களில் பதின்மூன்று பேரை குருத்துவ அருள்வாழ்விற்கு வழிநடத்திய பெருமையைப் பெற்றார்.

இதேகாலத்தில், திப்பு சுல்தானின் துன்புறுத்தல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குருமடத்தை நடத்துவது மிகவும் கடினமாக இருந் தது. 1813-ஆம் ஆண்டு குருமடத்தை மூடுவது குறித்து ஆயர் எபேர் சிந்தித்தார். இந்தச் செய்தியை அறிந்த அருள்தந்தை அபே டுபுவா தனது சொந்த நிதியிலிருந்து குருமடத்தை நடத்த முன்வந்தார். அவரது தாராள மனப்பான்மை காரணமாக, குருமடம் தொடர்ந்து செயல்பட முடிந்தது. ஆயர் எபேர் தனது ஆயர் பணிக்காலத்தில் எட்டு இந்தியர்களைக் குருக்களாகத்  திருநிலைப்படுத்தினார்.

1832-ஆம் ஆண்டு அருள்தந்தை பிகோ போகிளேர் அதிபராகப் பொறுப்பேற்று, சில ஒழுங்கு மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அவை மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால் பலர் குருமடத்தை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் மாற்றப்பட்டு, அருள்தந்தை ஓலாஞ் பொறுப்பேற்றாலும் நிலைமை சீரடையவில்லை. இதன் விளைவாக, குருமடம் தற்காலிகமாக மூடப்பட்டது. 1835-ஆம் ஆண்டு அருள்தந்தை லெஹோடி அதிபராக வந்து குருமடத்தை மீண்டும் திறந்து, அதன் வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டினார்.

பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டமும் (1844), குருமட வளர்ச்சியும்

1836-ஆம் ஆண்டு ஆயர் எபேர் மறைவிற்குப் பிறகு, ஆயர் பொன்னான் மறைத்தளத்தின் பொறுப்பை ஏற்றார். அப்போது அவருடன் 20 பிரெஞ்சு மறைப்பணியாளர்கள், நான்கு இந்தியக் குருக்கள், 102 வேதியர்கள் இணைந்து சுமார் 82,000 கத்தோலிக்க நம்பிக்கையாளர்களுக்கு இறைப்பணி ஆற்றி வந்தனர். 1842-ஆம் ஆண்டு அருள்தந்தை கேயோ மற்றும் அருள்தந்தை ஷெவாலியே ஆகியோர் மறைப்பணியின் எதிர்கால வளர்ச்சிக்காக அனைத்து மறைப்பணியாளர்களும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தவேண்டும் என்று பரிந்துரைத்தனர். பெரும்பாலான மறைப்பணியாளர்கள் இத்தகையதொரு கூட்டத்தை ஒரு திரு அவைக் கூட்டத்தின் (Synod) வடிவில் நடத்த வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளியிட்ட னர். இதனை ஏற்றுக்கொண்ட ஆயர் பொன்னான் 1844, சனவரி 18-ஆம் நாள் பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திரு அவைக் கூட்டம் சிறிய குருமடம், பெரிய குருமடம் உள்நாட்டுக் குருக்களின் உருவாக்கம் மற்றும் மறைப்பணியின் எதிர்கால வளர்ச்சி ஆகிய முக்கிய அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து, புதுவை மறைத்தளத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. 1844-ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டம், இந்தியத் திரு அவை வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல். 1845-1846 காலப்பகுதியில், பாண்டிச்சேரி மறைப்பணி மூன்று தனித்தனி மறைமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது (பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், மைசூர்). கோயம்புத்தூர் மற்றும் மைசூர் மறைமாவட்டங்கள் 1898-ஆம் ஆண்டு வரை தங்களுக்கெனத் தனிப்பட்ட குருமடங்களை நடத்தி வந்தன.

புதிய குருமடமும் - சாதியமும்

1844, பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டத்திற்குப் பிறகு ஆயர் பொன்னான் மறைத்தள வளாகத்திலேயே புதிய சிறிய குருமடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால், பெரிய குருமடக் கட்டடம் தொடங்கும் முன்பே எதிர்பாராத சிக்கல்கள் உருவாயின. அக்காலத்தில், சாதி மரபுகளை மதிக்கும் நோக்கில் பேராசிரியர்கள் மாணவர்களிடமிருந்து தனியே உணவருந்துவது வழக்கமாக இருந்தது. ஒருநாள், குருமடப் பேராசிரியரான அருள்தந்தை லெரூ எந்த முன்னறிவிப்பும் இன்றி, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து இந்திய முறைப்படி உணவருந்தினார். இந்தச் செய்தி வெளியே பரவியதும், பல கத்தோலிக்கர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 1847, செப்டம்பர் 29 அன்று மற்றொரு நிகழ்வு நடந்தது. மாலை திருப்புகழ் (Vespers) மற்றும் ஊர்வலத்தில் உதவுவதற்காக குருமாணவர்கள் தலைப்பாகை (Turban) அணியாமல், அங்கி (Cassock) மட்டும் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அந்தக் காலத்தில் தலைப்பாகை அணிவது குருக்களின் மரபுச் சின்னமாகக் கருதப்பட்டதால், இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலர் தேவாலயத்திற்கு வருவதை நிறுத்தினர். பாண்டிச்சேரி பேராலயமே வெறிச்சோடியது. ஆயர் பொன்னான் வெளியிட்ட ஆயர் மடலும் இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைக் கொண்டு வரவில்லை. இதனால் 1847, டிசம்பர் 27 அன்று குருமடம்காலவரையற்ற விடுமுறைஎன்ற பெயரில் தற்காலிகமாக மூடப்பட்டது. 1848, சனவரியில் அருள்தந்தை லெரூ வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், பதற்றம் தணிந்தது. குருமடம் மீண்டும் திறக்கப்பட்டபோது வெறும் 17 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இந்த அனுபவத்திற்குப் பிறகு ஆயர் பொன்னான் சிறிய குருமடத்தைபெட்டி செமினேரி கல்லூரிஎன்ற கல்வி நிறுவனமாக மாற்றி, அனைத்து இளைஞர்களுக்கும் கல்வி வழங்கும் நிலையமாக்கினார்.

பெரிய குருமடத்தின் புதிய தொடக்கம்

சிறிய குருமடப் பிரச்சினைகள் சீரடைந்த பிறகு ஆயர் பொன்னான் தனது முழு கவனத்தையும் பெரிய குருமட வளர்ச்சியின்மீது செலுத்தினார். சிறிய குருமடத்தையும், பெரிய குருமடத்தையும் தனித்தனியாகப் பிரித்தார். 1850, மே மாதத்தில், மறைத்தளத் தோட்டத்தில் புதிய பெரிய குருமடக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1850, செப்டம்பர் 18 அன்று புதிய பெரிய குருமடம் சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் முதல் இயக்குநர்களாக அருள்தந்தை கொதேல் மற்றும் அருள்தந்தை லிழோன் நியமிக்கப்பட்டனர். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இந்தக் குருமடம் வழியாக ஒன்பது இந்தியக் குருக்கள் திருநிலைப்படுத்தப்பட்டனர். 1777 முதல் 1861 வரை பணியாற்றிய நான்கு ஆயர்கள் இணைந்து மொத்தம் 27 இந்தியக் குருக்களை மட்டுமே திருநிலைப்படுத்த முடிந்தது.

பாண்டிச்சேரியில் புனித யோசேப்பு மண்டலப் பெரிய குருமடம் (1897)

1873-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மறைமாவட்டத்தில் 25 இந்தியக் குருக்கள் பணியாற்றி வந்தனர். மேலும், குருத்துவ அழைப்பைப் பெறும் இளைஞர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தது. இதனால் 1850-ஆம் ஆண்டு கட்டப்பட்ட குருமடம் மாணவர்களின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லாமல் போனது. எனவே, ஆயர் லாவேனான் புதிய குருமடக் கட்டடங்களை எழுப்பினார். 1879-ஆம் ஆண்டு அருள்தந்தை போர், குருமடத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரது 25 ஆண்டுகாலத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட குருமாணவர்கள்பெட்டிசெமினேரில் இணைந்தனர். ஆயர் லாவேனான் அவர்களின் ஆயர் பணிக் காலத்தில் 28 இந்தியக் குருக்கள் திருநிலைப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மறைமாவட்டமும் ஒரு பேராசிரியரையும் குருமடப் பணிக்காக வழங்கியது. பாண்டிச்சேரி மறைமாவட்ட மண்டலத்திற்கு எனப் பொதுவான ஒரு குருத்துவக் கல்லூரியை நிறுவ வேண்டும் என்ற கருத்து ஆயர் காந்திக்கு உருவானது. இக்கருத்தை அம்மண்டலத்தின் பிற ஆயர்களும் ஏற்றுக்கொண்டனர். இதன் விளைவாக, 1897-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பெரிய குருமடம், தென்னிந்தியாவில் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை மறைப்பணிக்கு உள்பட்ட அனைத்து மறைமாவட்டங்களுக்கும் சேவை செய்யும் மண்டலப் பெரிய குருமடமாக உயர்ந்தது. 1909-ஆம் ஆண்டு, பாண்டிச்சேரி பேராயர் மொரேல் சந்திர நாகூரில் மறைப்பணியாற்றிய அருள்தந்தை காயே அவர்களைக் குருமடத்தின் அதிபராக நியமித்தார். அவரது 25 ஆண்டுகாலச் சிறப்பான தலைமையில், பாண்டிச்சேரி மண்டலக் குருமடம் வழியாக நான்கு மறைமாவட்டங்களுக்கு 90 இந்தியக் குருக்கள் உருவாக்கப்பட்டனர்.

பெங்களூருவில் புனித பேதுரு பாப்பிறைக் குருமடம் (1934)

பாண்டிச்சேரி குருமடத்தில் இடவசதி பெரும் சவாலாக மாறியது. இதனால் 1928-ஆம் ஆண்டு திரு அவை மாகாண ஆயர்கள் ஒன்றுகூடி, பெங்களூருக்குப் பெரிய குருமடத்தை மாற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தனர். இந்தத் தீர்மானம் 1934-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம், பாண்டிச்சேரியின் புகழ்பெற்ற பெரிய குருமடம், இன்று புனித பேதுரு பாப்பிறை குருமடம் என்ற பெயரில் அறியப்படும் புதிய குருமடமாகத் திகழத் தொடங்கியது. 1934-ஆம் ஆண்டில் குருமடத்தில் நான்கு பேராசிரியர்கள் பணியாற்றினர்: அருள்தந்தை காயே (முதல்வர்) மெய்யியல் கற்பித்தார்; அருள்தந்தை கேங்கனல் அறநெறி இறையியல் கற்பித்தார்; அருள்தந்தை புவாந்தே திருவிவிலியம் கற்பித்தார்; அருள்தந்தை ஓதியோ மறைக்கோட்பாட்டு இறையியல் கற்பித்தார். அப்போது பாண்டிச்சேரி, சேலம், கும்பகோணம், கோவை, பெங்களூரு மறைமாவட்டங்களைச் சேர்ந்த 60 குருமாணவர்கள் கல்வி பயின்றனர்.

புதிய குருமடக் கட்டடத்தின் கட்டுமானச் செலவில் புனித திருத்தூதர் பேதுரு பாப்பிறை சங்கம் குறிப்பிடத்தக்க நிதி உதவி வழங்கியது. அதன் நன்றிக்கடனாக, புதிய குருமடத்திற்குபுனித பேதுரு குருமடம்என்ற பெயர் சூட்டப்பட்டது. 1942-ஆம் ஆண்டு உரோமில் உள்ள திருத்தூதர் பீடம், புனித பேதுரு குருமடத்தை அதிகாரப்பூர்வமாக மண்டலப் பெரிய குருமடமாக அங்கீகரித்தது.

1942-ஆம் ஆண்டு பெரிய குருமடம் தற்காலிகமாக சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1946-ஆம் ஆண்டு, 36 ஆண்டுகள் சிறப்பாக முதல்வராகப் பணியாற்றிய அருள்தந்தை காயே ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து அருள்தந்தை ஜாக்மார் (1946 -1949), அருள்தந்தை பாசாயிஸ்தேகி  (1949-1960), அருள்தந்தை ரோசின்னியோல் (1960-1973) ஆகியோர் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் இறுதி முதல்வர்களாகப் பணியாற்றினர்.

1973-ஆம் ஆண்டு உதகமண்டலம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்தந்தை அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்கள், புனித பேதுரு குருமடத்தின் முதல் இந்திய அதிபராகப் பொறுப்பேற்றார். இவ்வாறு 1844-இல் புதுவை திரு அவைக் கூட்டம் கனவு கண்ட இலக்கு நிறைவேறியது. இந்தியக் குருக்கள் உருவாக்கப்பட்டதோடு, குருமடத்தின் நிர்வாகமும் இந்திய ஆயர்களின் தலைமையிலும் பொறுப்பிலும் ஒப்படைக்கப்பட்டன.

1934-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி குருமடம் பெங்களூருக்கு மாற்றப்படும் வரை மேலும் 100 இந்தியக் குருக்கள் திருநிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் இறுதியாகத் திருநிலைப்படுத்தப்பட்டவர் ஆயர் மார்க் கோபு. பின்னர் அவர் 1949-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி-கடலூர் துணை ஆயராகவும், 1953-ஆம் ஆண்டு ஹைதராபாத் பேராயராகவும் பணியாற்றினார். 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, புனித பேதுரு பாப்பிறை குருமடத்தின் நிர்வாகக் குழுவில் 17 ஆயர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 250 ஆண்டுகளாக 2,123-க்கும் மேற்பட்ட குருக்கள் இக்குருமடத்தில் பயின்று திரு அவைக்குப் பணியாற்றியுள்ளனர். மேலும், இக்குருமடம் மூன்று கர்தினால்கள், 50-க்கும் மேற்பட்ட பேராயர்கள் மற்றும் ஆயர்களை உலகத் திரு அவைக்கு வழங்கியுள்ள பெருமையைப் பெற்றுள்ளது.

பாண்டிச்சேரி குருமடம் இந்தியாவின் முதல் குருமடம் அல்ல; அதற்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளில் குருமடங்களை நிறுவ பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பல குருமடங்கள் தோன்றியிருந்தாலும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் உள்நாட்டுத் திரு அவைகளுக்காக இந்திய உள்நாட்டுக் குருத்துவத்தைத் தொடர்ந்து, திட்டமிட்ட முறையில் உருவாக்கிய முதல் நீடித்த முயற்சி பாண்டிச்சேரியில் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை நிறுவிய குருமடமே என்பதில் ஐயமில்லை.

1844-ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டம் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அத்திரு அவைக் கூட்டம் உள்நாட்டுக் குருக்களின் உருவாக்கம் குறித்து முன்வைத்த பரிந்துரைகள், பின்னாளில் உரோமைத் தலைமைப்பீடத்தின் மறைபரப்பு பேராயம் அமைப்பு உலகெங்கும் உள்ள மறைப்பணிக் குருமடங்களுக்காக வெளியிட்ட வழிகாட்டுதல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. எனவே, புதுவை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை குருமடத்தின் வரலாறு என்பது ஒரு கல்வி நிறுவனத்தின் வரலாறு மட்டுமல்ல; இந்தியக் கத்தோலிக்கத் திரு அவையின் தன்னிறைவு, உள்நாட்டுக் குருக்களின் உருவாக்கம் மற்றும் உள்நாட்டுத் திரு அவையின் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் இறையருளின் வரலாறாகும்.