“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்”(யோவா 12:24).
இறைவனின்
அளவற்ற அருளையும் அன்பையும் நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து,
புதுவை மறைப்பணியின் 250-ஆம் ஆண்டு யூபிலியை நாம் கொண்டாடுகின்றோம். 1776-ஆம் ஆண்டு பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை (MEP) மறைப்பணியாளர்கள்
புதுவை மண்ணில் நற்செய்தியின் விதையை விதைத்தனர். இரண்டரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்தச் சிறிய விதை இறைருளால் வேரூன்றி, கிளைபரப்பி, பல தலைமுறைகளின் நம்பிக்கை,
தியாகம், உழைப்பு ஆகியவற்றால் பெரு மரமாக வளர்ந்திருப்பதை நன்றியுடன் நினைவுகூர்கின்றோம். இந்த யூபிலி வெறும் வரலாற்று நினைவுகூரல் அல்ல; இது இறைவனுக்கு நன்றி செலுத்தும் உன்னதமான தருணம். இம்மண்ணில் மறைப்பணி செய்த நம் முன்னோர்களின் தியாகத்தை நினைவுகூரும் புனிதமான நேரம். நிகழ் காலத்தில் நம் பொறுப்பை உணர்த்தும் ஆன்மிக விழிப்புணர்வுக்கான காலம். மேலும், இது எதிர்கால மறைப்பணிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் அழைப்பும் ஆகும்.
முதலில்,
நமது நன்றியை எல்லாம் வல்ல இறைவனுக்குச் செலுத்துவோம். வரலாற்றின் ஏற்றத் தாழ்வுகளிலும் சோதனைகளிலும் எதிர்ப்புகளிலும் புதுவை மறைப்பணியைத் தம் அருளால் வழிநடத்தியவர் இறைவனே. “நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே வளரச் செய்தவர்”
(1கொரி 3:6) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் இம்மறைப்பணியின் 250 ஆண்டுகால வரலாற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
புதுவை மறைப்பணித்தளத்தில்
331 MEP மறைப்பணியாளர்களின் தியாகச்சுவடுகள்
கடந்த
இரண்டரை நூற்றாண்டுகளில் ஆயர் பிரிகோ முதல் அருள்தந்தை ஒலிவியர் வரை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையைச் சேர்ந்த 331 மிஷனரிகள் புதுவை மறைப்பணித்தளத்திற்கு வருகை தந்து, மறைப்பணிக்காகத் தங்களையே முழுமையாக அர்ப்பணித்துப் பணிசெய்துள்ளனர். அவர்கள் தங்கள் தாய்நாடு, குடும்பம், வசதிகள் ஆகியவற்றை விட்டுவிட்டு, அறியாத மொழியும் பண்பாடும் கொண்ட தொலைதூர நாட்டிற்குப் புறப்பட்டு வந்தனர். கடல்களைக் கடந்து, நீண்ட பயணங்களை மேற்கொண்டு, வசதிகளற்ற சூழல்களில் வாழ்ந்து, தொலைதூரக் கிராமங்களை அடைந்து, நோய், வறுமை, அரசியல் குழப்பம் மற்றும் சமூகச் சவால்களுக்கிடையே நற்செய்தியை அறிவித்தனர். ஆலயங்கள், பள்ளிகள், குருமடங்கள், மறைக்கல்வி நிலையங்கள், மருத்துவ மற்றும் சமூகநல நிறுவனங்கள் எனப் பல தளங்களில் அவர்கள்
உழைத்தனர்; மொழிகளைக் கற்றனர்; நூல்களைப் படைத்தனர்; உள்ளூர் குருக்களை உருவாக்கினர்; ஏழைகள் மற்றும் நோயாளிகளின் துயரங்களில் பங்கெடுத்தனர்.
அவர்களின்
வியர்வையும் கண்ணீரும் தியாகமும், சில நேரங்களில் இரத்தமும் இம்மண்ணோடு கலந்தன. அவர்களின் வாழ்க்கை, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலைத் தரும்”
(யோவா 12:24) என்ற இயேசு ஆண்டவரின் வார்த்தைக்கு உயிருள்ள சாட்சியாக அமைந்தது. அவர்களுடைய பயணம் எளிதானதல்ல; போர்கள், அரசியல் மாற்றங்கள், பஞ்சங்கள், தொற்றுநோய்கள், பயணச் சிரமங்கள், மொழித்தடைகள், பண்பாட்டு வேறுபாடுகள், மத மற்றும் சமூக
எதிர்ப்புகள் ஆகியவற்றை அவர்கள் எதிர்கொண்டனர். வரலாற்றை நேர்மையுடன் அணுகும்போது, அவர்களும் வரலாற்றிற்குள் வாழ்ந்த மனிதர்கள் என்பதையும், அவர்களுடைய முயற்சிகளில் மனித வரம்புகளும் குறைபாடுகளும் இருந்திருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவர்களின் அர்ப்பணிப்பின் வழியாக இறையருள் செயல்பட்டு, தென்னிந்தியத் திருச்சபையின் வளர்ச்சிக்கான வலிமையான அடித்தளத்தை அமைத்தது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்தியத் தலைமையின்
கீழ்
தொடர்ந்த
மறைப்பணி
பாரிஸ்
அயலக மறைபரப்புச் சபையினரின் கரங்களிலிருந்து பெறப்பட்ட முத்தாய்ப்பான பணிகளை 1955-ஆம் ஆண்டு முதல் இந்தியப் பேராயர்கள் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர். நான்கு இந்தியப் பேராயர்கள், ஓர் அப்போஸ்தலிக்க நிர்வாகி மற்றும் தற்போதைய பேராயர் ஆகியோரின் தலைமையில் முன்னோர் விதைத்த விதைகள் நேர்த்தியாகப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. மேய்ப்புப்பணி பரந்து விரிவடைந்துள்ளது. குருத்துவம் மற்றும் துறவற அழைத்தல்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. கல்வி, மருத்துவம், சமூகநீதி மற்றும் சமூகநலப் பணிகள் வலுப்பெற்றுள்ளன. காலம் மாறினாலும் நற்செய்தியை அறிவித்து, கிறிஸ்துவின் அன்பை வாழ்வில் வெளிப்படுத்தும் திரு அவையின் பணிகள் மாறவில்லை. இன்று MEP மறைப்பணியின் பாரம்பரியம் எதிர்காலச் சந்ததிக்கு மிகப்பெரிய பொறுப்பாக அமைந்துள்ளது.
250 ஆண்டுகள் - நினைவுகூர்வதற்காக
மட்டுமல்ல;
மாறாக,
புதுப்பிப்பதற்காக!
250-ஆம் ஆண்டு
யூபிலி என்பது கடந்த காலத்தைப் போற்றுவதற்கான விழா மட்டுமல்ல; எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இறையழைப்பு என்பதை நாம் நினைவுகூரவேண்டும். ஆனால், இந்த அழைப்பு நினைவுகளில் மட்டும் இருந்து விடக்கூடாது; மாறாக, நன்றியின் செயலாக மாற வேண்டும்; நம் முன்னோர்களைப் போற்ற வேண்டும்; அவர்கள் விட்டுச் சென்ற பணியை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செய்யவேண்டும்.
இன்றைய
உலகம் புதிய சவால்களை முன்வைக்கிறது. சமயச்சார்பின்மை, நுகர்வு கலாச்சாரம், வறுமை, இடப்பெயர்வு, குடும்பச் சிக்கல்கள், சமூகப் பாகுபாடுகள், இளைஞர்களின் எதிர்காலம் குறித்த குழப்பங்கள், சுற்றுச்சூழல் நெருக்கடி, தொழில்நுட்ப மாற்றம் மற்றும் ஆன்மிக வெறுமைநிலை ஆகியவை நமது முன்னால் நிற்கின்றன.
இந்தச்
சூழலில் நமது MEP முன்னோரிடம்
இருந்த துணிவு, தியாகம், படைப்பாற்றல், இறைநம்பிக்கை மற்றும் மறைப்பணி ஆர்வத்தை நாம் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
எனவே, இந்த யூபிலியின் புனித தருணத்தில் நமது குருக்கள், துறவியர், குருமட மாணவர்கள், இளைஞர்கள், குடும்பங்கள் மற்றும் அனைத்துப் பொதுநிலை நம்பிக்கையாளர்களும் தங்கள் அழைத்தலுக்கேற்ற பணியின் அர்ப்பணிப்பைப் புதுப்பித்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.
• நமது பங்குகள் நற்செய்தியின் உயிர்த்துடிப்பான மையங்களாக மாறட்டும்.
• நமது குடும்பங்கள் உண்மையான இல்லத் திரு அவைகளாக விளங்கட்டும்.
• நமது கல்வி நிறுவனங்கள் அறிவோடு மனித மாண்பையும் விளைவிக்கட்டும்.
• நமது இளைஞர்கள் நம்பிக்கையின் தூதுவர்களாக எழுச்சி பெறட்டும்.
• நமது துறவியர் இரக்கத்தின் முகங்களாகத் திகழட்டும்.
•
நமது குருக்கள் கிறிஸ்துவின் மேய்ப்புப் பணியைத் தங்கள் வாழ்வால் வெளிப்படுத்தட்டும்.
• ஒவ்வொரு திருமுழுக்குப் பெற்றவரும் தாம் ஒரு திருப்பணியாளர் என்ற உணர்வுடன் தமது நம்பிக்கையை வாழ்ந்து காட்டட்டும்.
ஒரு பாரம்பரியம்
- ஒரு
பொறுப்பு
- ஒரு
புதிய
பயணம்
• 331 MEP மறைப்பணியாளர்களின்
தியாகப் பணிகளுக்கு நாம் மிகுந்த நன்றியுடன் தலை வணங்குகிறோம்.
• அவர்கள் நமக்கு ஆலயங்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை; நம்பிக்கையை விட்டுச் சென்றனர்.
• பள்ளிகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை; அறிவின் ஒளியை விட்டுச் சென்றுள்ளனர்.
• சொத்துகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை; வருங்காலத் திரு அவைக்கான அடித்தளத்தை விட்டுச் சென்றனர்.
• நூல்களை மட்டும் எழுதவில்லை; நற்செய்தியை மக்களின் மொழியில் பேசக் கற்றுக்கொடுத்தனர்.
• குருக்களை மட்டும் உருவாக்கவில்லை; மாறாக, உள்ளூர் திரு அவையின் எதிர்காலத்தை உருவாக்கியுள்ளனர்.
• அவர்கள் நமக்கு ஒரு வரலாற்றை மட்டும் அளிக்கவில்லை; ஒரு புனிதப் பொறுப்பையும் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.
எனவே,
அவர்களின் புனித மரபு கடந்த காலத்தின் நினைவுச் சின்னமாக மட்டும் இருக்கக் கூடாது; அது நமது வாழ்வில் தொடரவேண்டிய உயிருள்ள மறைப்பணி அழைப்பாக மாறவேண்டும். இந்த 250-ஆம் ஆண்டு யூபிலியில் நாம் அனைவரும் ஒரு புதிய உறுதிமொழி எடுப்போம்:
நம்பிக்கையில்
வேரூன்றி, நம்பிக்கையில் உறுதியாக நின்று, அன்பில் ஒன்றுபட்டு, நீதிக்காகக் குரல் கொடுத்து, ஏழைகளுடன் பயணித்து, இளைஞர்களை வழிநடத்தி, நற்செய்தியைத் துணிவுடன் அறிவித்து, அடுத்த தலைமுறைக்கான திரு அவையை உருவாக்குவோம்.
புதுவையின்
மறைப்பணியின் முதல் 250 ஆண்டுகள் நமக்கு ஒரு மகத்தான கடந்தகாலத்தை அளித்துள்ளன. அடுத்த 250 ஆண்டுகளுக்கான நற்செய்தியின் விதைகளை விதைக்கும் பொறுப்பு இன்றைய தலைமுறையின் கரங்களில் உள்ளது என்பதை ஆழமாக உணர்வோம்.
அன்னை
மரியா, திரு அவையின் தாய், நமது MEP முன்னோருடன்
இப்புதுவை மறைப்பணியின் பாதைகளில் பயணித்தவர், நம்மையும் வழிநடத்துவாராக. இம்மண்ணில் நம்பிக்கையின் விதைகளைத் தங்கள் வாழ்வால் விதைத்த புனிதர்களும் மறைச்சாட்சிகளும் நமக்கு முன்மாதிரிகளாக இருப்பார்களாக. 250 ஆண்டுகளுக்கு முன்பு நற்செய்தியின் விதையை இம்மண்ணில் விதைத்த இறைவன், இன்று நமது கரங்களின் வழியாக புதிய விதைகளை விதைக்க அருள்புரிவாராக.
MEP மறைப்பணியாளர்களின் வியர்வையால் ஈரமான இந்த மண்ணில், நமது அர்ப்பணிப்பால் புதிய நம்பிக்கையின் மலர்கள் மலரட்டும். அவர்களின் நம்பிக்கையால் கட்டப்பட்ட திரு அவை, நமது ஒன்றிப்பால் மேலும் வலுப்பெறட்டும். அவர்களின் தியாகத்தால் தொடங்கிய மறைப்பணி, நமது புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பால் புதிய தலைமுறைகளை கிறிஸ்துவிடம் வழிநடத்தட்டும்.
ஆண்டவரே,
நீர் தொடங்கிய நற்செயலை நிறைவுறச் செய்யும்வரை எங்களைப் பயன்படுத்தும்.
Ad Majorem
Dei Gloriam - அனைத்தும்
இறைவனின் மாபெரும் மகிமைக்காக!