பாரிஸ் மறைபோதகக் குருக்கள் அன்றைய சமூகத் தில் புரையோடிக் கிடந்த பல சமூகச் சீர்கேடுகளை, சமூகப் பிரச்சினைகளைக் களைந்து, இயேசுவைப் போலவே அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், நல்வாழ்வு ஆகிய உயரிய விழுமியங்களின் அடித்தளத்தில், ஒரு புதிய சமூகத்தைக் கட்டியெழுப்ப அரும்பாடுபட்டனர். அதற்குச் சான்றாக பல வரலாற்று நிகழ்வுகளை நாம் மேற்கோள்காட்டலாம்.
வறுமை, பஞ்சத்தில்
உயிர்
காத்த
உத்தமர்கள்
1876-இல் ஒரு
கொடிய பஞ்சம் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளை வாட்டி எடுத்தது. மக்கள் உணவின்றி, உயிரிழந்து கொண்டிருந்த காலகட்டம் அது. மீண்டும் 1898 மற்றும் 1899 ஆண்டுகளிலும் மக்கள் கொடிய பஞ்சத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்தக் காலகட்டங்களில், பல்வேறு பங்குத்தளங்களில் பணியாற்றிய பாரிஸ் அயல் நாட்டு மறைப்போதகக் குருக்கள், மக்களுக்கு கோதுமை, மாவு, எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கி உயிரைக் காத்தனர். குறிப் பாக, அணிலாடி பங்கிலும், அதைச் சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களிலும் அருள்தந்தை கோதெக், திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அருள்தந்தை கோம்ப், மேல்-சித்தாமூர் பகுதிகளில் அருள்தந்தை ஷாவனோல் ஆகியோர் தங்கள் உடைமைகளை விற்றும், பிரான்ஸ் நாட்டில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் மக்களிடமிருந்து உதவிகளைப் பெற்றும் மக்களின் உயிரைக் காத்தனர். மதங்களைக் கடந்த அவர்களின் மனித நேயச் செயல்கள் அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டன. அதில் பலர் கிறித்தவ மதத்தைத் தழுவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமன்றி, ஏறக்குறைய பஞ்சம் தலைவிரித்தாடிய அனைத்துக் கிராமங்களிலும் பணியாற்றிய MEP அருள்பணியாளர்கள்
இத்தகைய உதவிகளைச் செய்து மக்களைக் காத்தனர் (History of Pondicherry
Mission an outline, p.215).
அனாதை இல்லங்கள்,
மருத்துவ
மையங்கள்
பஞ்சத்தில்
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் மீது கனிவு கொண்ட பாரிஸ் மறைப்போதகக் குருக்கள், பல இடங்களில் அனாதை
இல்லங்களை உருவாக்கி, இந்தக் குழந்தைகளின் உணவு, இருப்பிடம், கல்வி, தொழிற்கல்வி போன்ற அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு தந்தனர். குறிப்பாக, அருள்தந்தை கோம்ப் முதன்முதலாக திண்டிவனத்தில் 1896-லிருந்து 1898 ஆகிய காலகட்டங்களில் மாணவருக்கான ஓர் அனாதை இல்லத்தை உருவாக்கினார். அந்த மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்க, தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார்.
MEP மறைப்பணிகளின் தலைவராக (Vicar of Pondicherry Mission) இருந்த ஆயர்
பொனான், 1850-லிருந்து 1856-வரை உள்ள காலகட்டத்தில், குளூனி மற்றும் கொன்சாகா சபை அருள்சகோதரிகளின் உதவியோடு பெண் குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களைப் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கினார். பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை ஒளிரச்செய்தார். Holy Childhood அமைப்பின்
மூலம் பெறப்பட்ட உதவிகள் இந்த அனாதை இல்லங்கள் தொடர்ந்து நடைபெற உதவின. அனாதை இல்லங்களோடு மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவ முதலுதவி மையங்களும் இந்த அருள்சகோதரிகளைக் கொண்டு தொடங்கப்பட்டன (HPM, p.162)
காலரா
போன்ற கொள்ளை நோய்கள் மக்களைத் தாக்கியபோதும், பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் மக்கள் தவித்தபோதும் MEP மறைப்பணியாளர்களின்
மதத்தைக் கடந்த மனிதநேய உதவிகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக, 1854-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மற்றும் அத்திப்பாக்கம் பகுதிகளில் பரவிய காலரா நோயினால் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். அப்போது ஆயர் பொனான் அனைத்து மறைப்பணி யாளர்களின் உதவியோடு மக்களின் உயிர்காக்க பல மருத்துவ உதவிகளைச்
செய்ய அறிவுறுத்தினார் (HPM,158).
முகவரி இல்லாத
மக்களின்
முகவரியாக
MEP
சமுதாயத்தில்
உரிய அடையாளம் இல்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு மதத்தின்வழி மனித மாண்பினை மீட்டெடுப்பதன் மூலமாகப் புதிய அடையாளத்தை வழங்கியவர்கள் MEP மறைப்பணியாளர்கள்.
அன்றைய ‘சனாதன’ சமூகத்தினரால் சாதிய அமைப்பில் சேர்க்கப்படவே தகுதியற்றவர்களாக வாழ்ந்தவர்கள்தான் ‘தலித்துகள்’ அல்லது
‘ஹரிஜன்கள்’.
தலித்துகளுக்குள்
தலித்துகளாக(Dalit among the Dalits), தொட்டால்
மட்டுமல்ல ‘பார்த்தாலே தீட்டு’ என்று ஒதுக்கப்பட்டு, மக்களோடு மக்களாக வாழத் தகுதியற்றவர்களாக, ஊருக்கு வெளியே ஓரங் கட்டப்பட்டு வாழ்பவர்கள்தான் ‘சலவைத் தொழிலாளர்கள்’ (புதிரை
வண்ணார்கள்). இத்தகைய மனிதர்களை முதன்முதலில் தேடிச்சென்றவர்கள் MEP மறைப்பணியாளர்கள்.
குறிப்பாக, இன்றைய விழுப்புரம், திண்டிவனம், விருத்தாச்சலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாழ்ந்த மக்களைத் தேடிச்சென்று, அவர்களுக்குப் பொருளாதார உதவிகள், மருத்துவ உதவிகள், கல்வி உதவிகளைச் செய்துவந்தனர். எந்தக் கோவிலுக்குள்ளும் நுழையவோ, சமய வழிபாடுகளில் கலந்துகொள்ளவோ முடியாமல் இருந்த இவர்களுக்கு, கிறிஸ்துவை அறிமுகம் செய்து வைத்து, புதியதொரு சமய வழியைக் காட்டிவர்கள் MEP குருக்கள்.
‘ஊருக்கு ஒரு குடி’ என்று வாழ்ந்து வந்த சலவைத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒரே இடத்தில் குடியமர்த்தப் பெரும் முயற்சிகளைச் செய்து, அதில் வெற்றி கண்டவர் அருள்தந்தை ரெனே ஷொவே அவர்கள். ஏறக்குறைய 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிதறிக் கிடந்த சலவைத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, அரசின் உதவியுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நைனார்பாளையம் என்ற ஊரின் எல்லையில் ஏறக்குறைய 300 ஏக்கர் நிலத்தை வாங்கி, தற்போதைய பாத்திமா பாளையம் என்ற கிராமத்தை 1957-ஆம் ஆண்டில் உருவாக்கினார். அவர்களின் குலத் தொழிலை மாற்றி, விவசாயத்திற்கு அறிமுகப்படுத்தி வாழ்வாதாரத்தை உறுதிசெய்தார்(Parish Record,
Fathima palayam).
1936 முதல் 1946-ஆம்
ஆண்டுவரை அருள்தந்தை டெல்ப்ரெய் கள்ளக்குறிச்சி பங்கின் பங்குத் தந்தையாகப் பணியாற்றினார். அங்கு இருந்த கிறித்தவர்கள் பெரும்பாலும் சலவைத் தொழிலாளர்களும், ஆதிதிராவிட மக்களுமே ஆவர். குறிப்பாக, ‘திருடர்கள்’ என்று
வகைப்படுத்தப்பட்டு, எப்பொழுதும் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மக்களின் முகவரியை மாற்றி, அவர்களை ஒழுக்கமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்களாக அடையாளப்படுத்திய பெருமை அருள்தந்தை டெல்ப்ரெய் அவர்களையே சாரும் (Parish Record,
Chinna salem).
பெரும்
பணக்காரர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கி மீள முடியாமல், பெரும் இன்னலுக்கு உள்ளான மக்களை மீட்டெடுத்துப் புதுவாழ்வு தந்தவர் அருள்தந்தை டெல்ப்ரெய். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அகரகோட்டாலம், அக்கராப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கடன் சுமையைக் குறைக்க, குறைந்த வட்டிக் கடன் கொடுக்கக் கூட்டுறவு சங்கங்களை அறிமுகப்படுத்தினார். பல கிராமங்கள் இந்தத்
திட்டத்தை ஏற்றுக் கொண்டன. இதன் மூலமாக மக்கள் பெரும் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைந்தனர். தாங்களாகவே விவசாயம் செய்து, வாழ்வில் முன்னேற்றம் காணும் அளவுக்கு அவர்களை உருவாக்கினார் (Parish Record, Chinna salem)
சாதியத்தை எதிர்த்த
சமத்துவவாதிகள்!
MEP மறைப்பணியாளர்களின் பணிக்காலத்தில் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவினர். கிறித்தவர்களுக்குள்ளும் சாதியப் பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்தன. கிறித்தவத்தில் ஊடுருவிய தீண்டாமைச் செயல்களை MEP மறைப்பணியாளர்கள் வன்மையாக எதிர்த்தனர்; அதனைக் களையவும் அரும்பாடுபட்டனர் என்பதற்கு ஒருசில முக்கிய நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம்.
i) பாண்டிச்சேரியில்
மிக முக்கிய ஆலயமாக உள்ள நெல்லித்தோப்பு ஆலயத்தின் குறுக்கேயும், கல்லறையிலும் தலித் மக்களை மற்ற உயர்சாதி மக்களிடமிருந்து பிரிக்கவேண்டும் என்பதற்காக ‘தீண்டாமைச் சுவர்’ எழுப்பப்பட்டது. இந்தத் தீண்டாமைச் சுவர் பல ஆண்டுகள் ஆலயத்தில்
இருந்தது. இதனால் பல குழப்பங்களும் பிரச்சினைகளும்
எழுந்தா லும், இந்தச் சுவர் அகற்றப்படவில்லை. இதனை எதிர்த்த மறைப்பணியாளர்கள் பலர் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இறுதியில் ‘சமதர்ம
உள்ளம் கொண்டவர்’
என்று புகழப்படும் அருள்தந்தை ஷொவே அவர்களின் பணிக்காலத்தில் (1936-1946)
அவருடைய விடாப் பிடியான கடின முயற்சியால் ஆலயத்தில் தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்டது. ஆனால், கல்லறையில் உள்ள சுவரை அகற்ற இயலவில்லை.
ii) பாண்டிச்சேரி மறைமாவட்டத்தின்
முதன்மை ஆலயமான புனித ஜென்மராக்கினி பேராலயத்திலும் (Cathedral) தலித் கிறித்தவர்கள் மற்ற சாதி கிறித்தவ மக்களோடு சமமாக அமர்ந்து வழிபாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்தத் தீண்டாமைச் செயலைக் களைய பேராயர் லவேனான் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக, ஆலயத்தின் இருக்கைகளில் அமர்வதற்கும், இறப்பின்போது ஆலய மணி ஒலிப்பதற்கும் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டுவந்தார். இதனால் தலித் மக்களும் கட்டணம் செலுத்தி இருக்கைகளை முன் பதிவு செய்தனர். இதனைச் சகித்துக்கொள்ள இயலாத பிற சாதி கிறித்தவர்கள் ஆயருக்கு எதிராகப் பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, ஆண்கள் ஆலயத்திற்கு வருவதையே தவிர்த்தனர். ஆனாலும், ஆயர் தன் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. ஆலயத்தில் அனைவரும் சமமாக அமரும் நிலை வந்தது. இந்த நிகழ்வு தீண்டாமையை ஒழிக்க ஆயர் எடுத்த பெரும் முயற்சியின் வெற்றியாகவே கருதப்பட்டது (HPM, p.188).
iii) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்
உள்ள மிக முக்கிய ஊரான எறையூர் பங்கில் தலித் கிறித்தவர்கள் கோவிலில் மற்ற மக்களோடு ஒன்றாக அமர்ந்து வழிபாட்டில் கலந்துகொள்ள இயலாத நிலை இருந்தது. தலித் மக்கள் தனியாக ஒருபக்கம் அமரவேண்டும். இந்தத் தீண்டாமைப் பாகுபாட்டைக் களைய பெரும் முயற்சி எடுத்தவர் அருள்தந்தை நோயல். 1935-முதல் 1955-வரை 16 ஆண்டுகள் எறையூர் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றியவர் இவர். ‘அனைத்து மக்களும் ஆலயத்தில் சமமாக அமர்ந்து வழிபாட்டில் கலந்துகொள்ளவேண்டும்’ என்ற
பேராயர் கோலாஸ் அவர்களின் ஆணையை நடைமுறைப்படுத்துவதில் உறுதியோடு இவர் இருந்தார். அது மட்டுமல்லாமல், தலித் மக்கள் வாழ்ந்த பகுதிக்குச் சென்று அவர்களின் இல்லங்களைச் சந்தித்த முதல் குரு இவரே. மேலும், தலித் மாணவர்கள் கல்விகற்று வாழ்வில் முன்னேற வழிவகைகளைச் செய்தார்.
அருள்தந்தை
நோயல் அவர்களின் இத்தகைய சமத்துவ சமதர்மச் செயல்களைச் சகித்துக்கொள்ள இயலாத பிற சாதிக் கிறித்தவர்கள் இவரைக் கடுமையாக எதிர்த்தனர். எனவே, இவருக்குச் சாவு மணியடித்துப் பங்கை விட்டு வெளியேற்றினர். இதன் காரணமாக 1955-ஆம் ஆண்டு எறையூர் ஆலயம் சில காலம் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
MEP மறைப்பணியாளர்கள் தங்களின் பணிவாழ்வில் மதத்தை மட்டுமே பரப்பவேண்டும் என்ற அடிப்படைவாதக் கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை. ‘இறையரசு’ என்ற புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பத் தளராமல் உழைத்தனர். மதத்தையும் சமூகத்தையும் பணிவாழ்வின் இரு கண்களாகப் பார்த்தனர் என்றும், மக்களின் ஆன்மாவைக் காப்பதில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வின் துன்பங்களைக் களைவதிலும், சமரசம் இல்லாமல் உழைத்துப் பல சாதனைகளைச் செய்தனர்
என்றும், சமத்துவச் சமூகமே இவர்களின் கனவு என்றும் வரலாறு இவர்களைப் பதிவு செய்திருக்கிறது.