திருப்பலி முன்னுரை
அன்புமிக்க
சகோதரிகளே, சகோதரர்களே! ஆண்டவரின் துணையை நம்பி, துணிவோடு பயணிக்க ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு திருப்பலி நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.
வாழ்க்கை
என்னும் கடலில் துன்பங்கள், கடன் தொல்லைகள், வறுமை, நோய்கள் எனப் பேரலைகள் மோதி நம்மைத் திணறடிக்கும்போது, இயேசு நம்மைப் பார்த்து ‘துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்!’ என்று உரக்கக் கூறுகிறார். பல நேரங்களில் சோதனைகள்
தொடரும்போதும், நம்பியவர்கள் கைவிடும்போதும், யாரும் நம்மைப் புரிந்துகொள்ளாமல் தனித்து விடப்படும்போதும் நாம் விரக்தி அடைகிறோம். இறைவனின் உடனிருப்பை மறந்துவிடுகிறோம். ஆனால், எத்தகைய புயல் வீசினாலும் இயேசுவின் கரங்களை ‘சிக்கென’ப் பிடித்துக்கொள்ளும்போது, நம் வாழ்வின் அனைத்துச் சிக்கல்களும் அவிழ்ந்துபோகும்.
எனவே,
குழப்பமான சூழல்களில் நம் பாதைக்கு ஒளியாக விளங்கும் இறைவார்த்தையை வாசிப்போம். சுமையால் மனம் கலங்கும் நேரங்களில், ‘ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!’ என்று முழு நம்பிக்கையோடு கூப்பிடுவோம். இல்லாமையிலும் இயலாமையிலும் ஆண்டவரிடம் சரணடைவோம். அச்சமின்றி, துணிவோடு இயேசுவின் பாதையில் பயணிக்கவும், இமைப்பொழுதும் நம்மைவிட்டு நீங்காத அவரோடு இணைந்து வாழவும் தேவையான வரங்களை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.
முதல் வாசக
முன்னுரை
ஆண்டவரின்
அமைதியான பிரசன்னத்தை உணரவும், அக அமைதியைப் பேணவும்
இன்றைய முதல் வாசகம் அழைப்பு விடுக்கிறது. சோர்வுற்றிருந்த இறைவாக்கினர் எலியாவுக்கு ஆண்டவரின் மெல்லிய குரல் ஆறுதலையும் புதுப் பலத்தையும் தந்தது. சோதனைக் காலங்களில் கடவுளின் குரல் நம்மையும் வழிநடத்தும் என்ற நம்பிக்கையோடு இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
மக்களின்
மீட்பிற்காகத் தன்னையே தியாகம் செய்யத் துணியும் திருத்தூதர் பவுலின் ஆழ்ந்த அன்பையும் பொறுப்புணர்வையும் இவ்வாசகம் வெளிப்படுத்துகிறது. பிறர்மீது உண்மையான அன்பும் தியாக உள்ளமும் கொண்டு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. ‘துணிவோடிருங்கள்’ என்ற ஆண்டவரே! திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் துன்பங்களில் சோர்ந்துவிடாமல், உம்மீது கொண்ட நம்பிக்கையில் தொடர்ந்து செயலாற்ற வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ‘அஞ்சாதீர்கள்’ என்ற ஆண்டவரே! உம் பிள்ளைகளாகிய நாங்கள் துன்பங்கள், இழப்புகள் மற்றும் வெறுமைகளிலும் உம்மைவிட்டுப் பிரியாமல், உமது கரம் பற்றி உயர்ந்து வாழ வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘நான் உங்களோடு
இருக்கிறேன்’ என்ற
ஆண்டவரே! எம் குடும்பங்களிலும் பங்கிலும் நோய்களால் துன்புறுவோர் உடலிலும் மனத்திலும் விடுதலை பெற்று, மகிழ்ச்சியோடு வாழ, உமது குணமாக்கும் கரங்களை நீட்ட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. துணிவைத்
தரும் ஆண்டவரே! எம் இளையோரும் - இளம் பெண்களும் உலக மாயைகளில் வீழாமல், உம்மைக் கண்டடைந்து, பங்குப் பணிகளில் ஆர்வத்தோடு பங்கேற்று, உயிரோட்டமுள்ள திரு அவையைக் கட்டியெழுப்ப வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.