news-details
சிறப்புக்கட்டுரை
மொழியியல் மற்றும் இலக்கியத் தொண்டு

18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் குறிப்பாக, பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு, பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை (MEP) குருக்கள் ஆற்றிய இலக்கிய மற்றும் மொழியியல் பணிகள் தமிழ்மொழியின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன. சமயப் பணிகளுக்காகத் தமிழைத் தழுவவேண்டிய கட்டாயத்தில் இருந்த இவர்கள், அச்சு ஊடகம் வழியாகத் தமிழ் உரைநடைக்கும், அகராதித் துறைக்கும் புதிய பரிமாணத்தை அளித்தனர்.

1. அகராதியியல்

MEP மறைப்பணியாளர்களின் மிக நீடித்த மற்றும் முக்கியமான பங்களிப்பு அகராதித் துறையாகும். அருள்பணி. லூயி சவினியன் துப்புயி (Louis Savinien Dupuis) மற்றும் அருள்பணி. லூயி-மரி மூசே (Louis-Marie Mousset) இருவரும் இணைந்து 1846-இல் இலத்தீன்-பிரெஞ்சு-தமிழ் அகராதி(Dictionarium Latino-Gallico-Tamulicum) என்ற மும்மொழி அகராதியை வெளியிட்டனர்.

தொடர்ந்து 1855-1862 காலகட்டத்தில், இரண்டு தொகுதிகளாக வெளிவந்ததமிழ்-பிரெஞ்சு அகராதி(Dictionnaire Tamoul-Francais) தமிழ் மொழியியல் வரலாற்றில் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். இதில் இலக்கியத்தமிழ் (செந்தமிழ்) மற்றும் பேச்சுத் தமிழ் (கொடுந்தமிழ்) ஆகிய இரண்டையும் இணைத்து வழங்கினர். இது பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின்தமிழ் லெக்சிகன்உருவாக முதன்மை ஆதாரமாக அமைந்தது.

அருள்பணி. ஜான்-பாப்டிஸ்ட் லாப் (Jean-Baptiste Lap)பிரெஞ்சு-தமிழ் அகராதிமற்றும்தமிழ்-பிரெஞ்சு சிற்றகராதி(1886) ஆகியவற்றை அச்சிட்டு வெளியிட்டார். பேராயர் சார்போனோ (Msgr. Etienne Louis Char
-bonnaux)
1200 பக்கங்களைக் கொண்டஇலத்தீன்-கன்னடம்அகராதியைத் தனது ஓய்வு நேரத்தில் உருவாக்கினார்.

மொழிபெயர்ப்புகள்

தமிழ் இலக்கியங்களை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்துவதிலும், மேலைநாட்டு மெய்யியல் சிந்தனைகளைத் தமிழுக்குக் கொண்டு வருவதிலும் இவர்கள் பாலம்போலச் செயல்பட்டனர். அருள்பணி துபுவா இந்திய நீதிநெறிக் கதைகளானபஞ்ச தந்திரக் கதைகளைபிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து, 1826-இல் பாரிசில் வெளியிட்டார். மேலும், வீரமாமுனிவரின் நகைச்சுவைப் படைப்பான பரமார்த்த குரு கதைகளை முதன் முதலில் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து ஐரோப்பிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அருள்பணி. லூயி சவினியன் துப்புயி வீரமாமுனிவர் இயற்றிய கடினமானதேம்பாவணிகாப்பியத்தைப் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டார்.

சமய இலக்கியம் மற்றும் மறைக்கல்வி நூல்கள்

சமயப் போதனைகளுக்காக இவர்கள் எளிய உரைநடையில் பல நூல்களை உருவாக்கினர். மறைக்கல்வி நூல்களான துப்புயி அடிகளார் இயற்றியசின்னக் குறிப்பிடம்என்ற அடிப்படை மறைக்கல்வி நூல் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. பேராயர் சார்போனோ அவர்கள் பல்வேறு மெய்யியல் உரையாடல்கள் மற்றும் மறைக்கல்வி கையேடுகளைத் தமிழில் அச்சிட்டார்.

அருள்பணி. ஜான்-பாப்டிஸ்ட் லாப் கத்தோலிக்கக் கோட்பாடுகளை விளக்கும் ஏழு தொகுதிகளைக் கொண்ட விரிவான படைப்பை எளிய தமிழ் உரைநடையில் வழங்கினார். மேலும், 1893-இல் ‘A Choice of 93 Tamil Songs’ என்ற பெயரில் 93 தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் இசைப்பாடல்களின் தொகுப்பை வெளியிட்டு, கத்தோலிக்க வழிபாட்டில் உள்ள இசை  வடிவங்களை இணைத்தார்பாண்டிச்சேரி மிஷன் அச்சகம் வழியாகத் திருவிவிலியப் பகுதிகள், செபநூல்கள் மற்றும் திருமுழுக்கு, நற்கருணை தொடர்பான பல அறநெறி நூல்கள் அச்சிடப்பட்டுப் பரப்பப்பட்டன.

ஆய்வுப்பணிகள்

இந்தியச் சமூகம் மற்றும் சமயத் தத்துவங்கள் குறித்து இவர்கள் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டனர். அருள்பணி துபுவாவின்இந்துகளின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்என்ற நூல் 19-ஆம் நூற்றாண்டின் தென்னிந்திய சமூக வாழ்க்கை குறித்த முதன்மையான ஆய்வு ஆவணமாக இன்றும் கருதப்படுகிறது.

பேராயர் லாவேனான் அவர்கள் 1885-இல் வெளியிட்ட ‘Du Brahmanisme Et de Ses Rapports Avec Le Judaisme Et Le Christianisme’  (பிராமணியமும் யூதமும் கிறித்தவமும்) என்ற இரண்டு தொகுதிகள் கொண்ட ஒப்பாய்வு நூல் பிரெஞ்சு அகாதெமியின் ‘Prix Bordin’ விருதைப் பெற்றது. இது இந்தியச் சமயச் சிந்தனைகளை மேலை உலகுக்கு விளக்கிய முன்னோடி முயற்சியாகும்.

இவர்கள் தமிழ் இலக்கண அமைப்பை மேலை நாட்டு மொழிக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, பல பிரெஞ்சு - தமிழ் இலக்கண நூல்களையும் வெளியிட்டனர்.

இதழ்கள் மற்றும் பத்திரிகைகள்

கத்தோலிக்கக் கோட்பாடுகளைப் பரப்பவும், மற்ற சபையினரின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கவும் இவர்கள் இதழியல் துறையில் கால் பதித்தனர்.

சர்வ வியாபி(Sarva Vyabi) 1907-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்ட வார இதழ். இந்த இதழ் மிகவும் புகழ்பெற்றது. பேராயர் காந்தி மற்றும் மறைப்பணி அச்சக மேலாளர் திசாந்தியே அடிகளார் ஆகியோரின் முயற்சியால் இது உருவானது. இதன் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருள்பணி. பால் வோ (Paul Veaux) தனது கட்டுரைகளில் திருக்குறள், நாலடியார் போன்ற தமிழ் இலக்கியங்களை மேற்கோள்காட்டிப் புகழ் பெற்றார்.

மேலும், MEP சபையினர் 1885 முதல் தங்களது மறைப்பணி அனுபவங்கள் மற்றும் கடிதங்களை ஆவணப்படுத்தும் பல்வேறு இதழ்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

அச்சகம்

பாண்டிச்சேரியில் இயேசு சபையினர் ஓர் அச்சகத்தை நடத்திவந்தனர். ஆனால், ஆங்கிலேயர் 1761-இல் புதுச்சேரியை பிரான்ஸ் அரசிடமிருந்து கைப்பற்றினர். அப்போது அவர்கள் பயன்படுத்திய  அச்சு இயந்திரத்தையும், அதனை இயக்கி வந்தவரையும் சென்னைக்குக் கொண்டு சென்றனர். இதனால் கிறித்தவர்களுக்கென்று தனி அச்சுக்கூடமில்லை. அதனால் பாண்டிச்சேரி மறைப்பணித் தளத்திற்கென்று ஓர் அச்சகம் தொடங்க மேதகு பொனான் ஆண்டகை 1840-இல் பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சு அரசிடம் அனுமதி பெற்றார். பிரெஞ்சு அரசு ஒரு பழைய அச்சு இயந்திரத்தையும், அச்சு மையையும் கொடுத்து உதவியது. எனவே, 1841-இல் சட்டப்பூர்வமான அனுமதியை உரோமையிலிருந்து பெற்றபின்பாண்டிச்சேரி சென்ம இராக்கினி மாதா அச்சகம்என்ற பெயரில் அச்சகத்தை அருள்பணி. துப்புயி தொடங்கினார். இது பிற்காலத்தில்மிஷன் அச்சகம்(Mission Press) என்று பெயர் பெற்றது.

மறைவிளக்க நூல்கள், செப நூல்கள், திருவழிபாட்டுப் பாடல்கள், நூல்கள், பக்திப் படங்கள் என்று இங்கு அருள்பணி. துப்புயி தனது காலத்தில் பதிப்பித்த நூல்கள் 125 என்று ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. சமயச் சார்பு நூல்கள், அறநெறி நூல்கள், பாடநூல்கள், தமிழ்மொழி நூல்கள், பிறமொழி நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என்று அவர் பதிப்பித்த நூல்களை வகைப்படுத்தலாம்.

1. சமயச்சார்புடைய நூல்கள் - 38

2. அறநெறி நூல்கள் - 10

3. வரலாற்று நூல்கள் - 18

4. செபப் புத்தகங்கள் - 05

5. பாட நூல்கள் - 12

6. செய்யுள் - 13

7. உரைநடை நூல்கள் - 03

8. அகராதி - 05

9. இலக்கணம் - 06

10. உரைகள் - 01                                        

11. பஞ்சாங்கம் - 02                               

12. பிறமொழி நூல்கள் - 07                             

13. மொழிபெயர்ப்பு நூல்கள் - 05

பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை (MEP) குருக்களின் பணி வெறும் நற்செய்தி அறிவிப்போடு நின்றுவிடாமல், ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழைக் காகித அச்சிற்கு மாற்றி, அகராதிகள் மற்றும் உரைநடைகள் மூலம் தமிழை ஒரு நவீனச் செம்மொழியாக உலக அரங்கில் நிலைநிறுத்த உதவியது.