பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன்
அடிசேரா தார் (குறள் 10)
குறள் விளக்கம்:
இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கிறவர்,
பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சிந்தனை: ‘கடவுள் வாழ்த்து’
என்ற அதிகாரத்தின் பத்தாவது குறளை நாம் சிந்திக்கின்றோம். ஒரு சொற்பொழிவாளர் கூறிய கருத்து இது. திருவள்ளுவர் ஒரே கருத்தைப் பத்து குறள்களில் விளக்குகின்றார். கடவுளைப் பற்றிச் சொல்ல பத்து குறள், கல்வியைப் பற்றிச் சொல்ல பத்து குறள். அப்படியென்றால், நம் அனைவரையும் பற்றி அவர் சிறப்பாக அறிந்திருக்கின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
இந்த
மனிதர்களுக்கு ஒரு
கருத்தை ஒருமுறை சொன்னால் போதாது; அதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்; இவர்களிடம் பத்து முறை சொன்னால்தான் மண்டையில் ஏறும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு தலைப்பிலும் பத்து குறள்கள் கொடுத்திருக்கின்றாரோ... என்று எண்ணத் தோன்றுகிறது.
பத்தாவது
குறளில், இந்த வாழ்க்கை கடலைப் போன்றது. அதுவும் பெருங்கடல் என்று குறிப்பிடுகின்றார் வள்ளுவர். கடல் என்று சொல்கின்றபோது, அதன் ஒரு கரை மட்டுமே நமக்குத் தெரியும் மறுகரை நம் கண்களுக்குப் புலப்படாது. இதுதான் நமது வாழ்க்கை. நம் வாழ்க்கையில் இக்கரையாகிய பிறப்பு நமக்குத் தெரியும்; அக்கரையாகிய இறப்பு நமக்குத் தெரியாது. எனவேதான் இந்த வாழ்க்கையைப் பெருங்கடல் என்கிறார்.
ஒருவர்
இந்த வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கரையைக் கடக்க வேண்டுமென்றால், அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டும். இறைவனின் பாதத்தைப் பற்றிப் பிடிக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாகக் களிப்பர் என்பதைக் குறிப்பிடுகின்றார்.
இறைவன்
பாதம் சேராதவர்கள் அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்க்கையை நடத்த முடியாது என்கிறார்.
இன்றைய
நடைமுறை வாழ்க்கையில், இறைநம்பிக்கையாளர்களின் வாழ்க்கைக்கும், இறைநம்பிக்கை அற்றவர்களின் வாழ்க்கைக்கும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது அல்லவா!
பிறவிப்
பெருங்கடலைக் கடக்க இறைநம்பிக்கை அவசியம் எனச் சிந்திக்கும்போது, மாற்கு நற்செய்தி 6:47-51 வரையிலான இறைவார்த்தைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன:
“பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால், அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து
செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல் வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘அது பேய்’ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில், எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ‘துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்’ என்றார்.
பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிக மிக மலைத்துப் போயினர்.”
சீடர்கள்
பெருங்காற்றைக் கண்டு அஞ்சியபோது, அந்நேரத்தில் ஆண்டவர் கடல்மீது நடந்து அவர்களிடம் வந்தார். அவர் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.
இயேசு
தம் சீடர்களிடம் வந்ததும் அவர்கள் துன்பம் விலகியது. அவர்கள் பயணம் அமைதியில் தொடர்ந்தது. எனவே, நம் வாழ்க்கைப் பயணத்தில் இறைவன் நம்மோடு இருப்பாரெனில், நம் வாழ்க்கை பேரும் புகழுமாய் திகழும்.
நாமும்
மகிழ்வோடு கடந்து செல்வோம்; இறைவனின் திருப்பாதத்தைப் பற்றிக்கொள்வோம்.