அக்டோபர் ஆறாம் தேதி மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளன. 2026 - சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இவ்விரு தொகுதிகளிலும் வென்றது. வெற்றி வேட்பாளர்கள் சட்டசபையைக் கூட எட்டிப் பார்க்காமல் எண்ணி இருபது நாள்களில் தங்கள் பதவியைத் துறந்தார்கள். ‘ஏன் பதவி விலகினார்கள்?’ என்ற கேள்விக்கு அவர்களிடமோ, எவரிடமோ பதில் இல்லை.
எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தல்கள் குதிரைபேர அரசியலின் பிரதிபலிப்பு என்கிறார்கள். இடதுசாரிகள், ‘பாரதிய சனதா கட்சியின் குதிரை பேரத்திற்கும், அ.தி.மு.க.-வின் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன; அதைக் குதிரைபேரம் என்று உறுதியாகக் கூறமுடி யாது’ என வெளியிலிருந்து வழக்கம்போல் ஆதரவு தருகிறார்கள். இருப்பினும், ‘இந்த இடைத்தேர்தல் இயற்கையானது அல்ல; திணிக்கப்பட்ட தேர்தல்’ எனவும் இடதுசாரிகள் வர்ணிக்கிறார்கள்.
இடதுசாரி அணியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் மற்றும் லெனினிஸ்ட்) கட்சிகள், இணைந்து புதிய கூட்டணியாகக் களம் காண்கிறார்கள். சில தமிழ்த் தேசிய அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
தமிழ்நாட்டு இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. கூட்டணி, ‘நாம் தமிழர்’ கட்சி என நான்கு அணிகளோடு, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நடைபெறுகிறது. த.வெ.க. வினர் கடைசி இரண்டு நாள்களில் ஒரு தொகுதிக்கு ஒருநாள் என நடைபெறும் முதல் வரின் ‘மாஸ்’ பிரச்சாரத்தால் வெற்றி பெறுவோம் என அதீத நம்பிக்கையில் உள்ளார்கள்.
விதிவிலக்கு நிகழ்வுகளைத் தவிர்த்து, அண்மைக் காலங்களில் நடந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது, ஆளுங்கட்சிக்குச் சாதகமானது என்பதால், அந்தப் பொன் விதியை த.வெ.க.-வினர் முழுவதும் நம்புகிறார்கள். த.வெ.க. முன்னோடிகளுக்கு ஆளும் அரசு அறுதிப் பெரும்பான்மை பெறுவதில் இவ்விரு தொகுதிகளின் வெற்றி முக்கியம், என்பதால் ஆள், அம்பு, சேனை என வலுவாகக் களம் வருவார்கள்.
தி.மு.க.-வைப் பொறுத்தவரை, ஆளுங் கட்சியை அசைத்துப் பார்க்க கிடைத்த வாய்ப்பை நழுவவிடமாட்டார்கள். ஐம்பது வாக்காளருக்கு ஒரு கழகப் பொறுப்பாளர் எனத் தங்கள் நுண் மேலாண்மைத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். கடந்த தேர்தலில் தாராபுரத்தில் ஒன்றிய அமைச்சர் முருகனைத் தோற்கடிக்க சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் என மொத்த வாக்கு வங்கிகளைக் குறிவைத்து ஒருங்கிணைத்த முன்மாதிரியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.
அ.தி.மு.க. வென்ற தொகுதியை விட்டுவிட முடியாது. இவ்விரு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிகளும் கட்சித் தொண்டர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் என்பதால் அ.தி.மு.க.வும் களத்தில் போராடும். மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி வாக்குகள் அ.தி. மு.க.வை வெற்றிக்கோட்டிற்கு நகர்த்தும் என நம்புகிறார்கள். உள்கட்சிப் பூசல்கள் என்ற பின்னடைவை மறுக்க முயலாது எனப் பத்திரிகை நண்பர்கள் மெல்ல கூறுகிறார்கள்.
‘நாம் தமிழர்’ கட்சியின் தேர்தல் பிரச்சாரம், பொதுக் கருத்து உருவாக்கம், தமிழ் - தமிழர் என்பதில் களம் நெருப்பாய் இருக்கும். ஐந்தாவது அணியான இடதுசாரிகள் மற்ற பெரும் கட்சிகளின் அழுத்தங்களை மீறி கரையேறுவது கடினம்.
2026
- சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி வாக்குகளை ஆய்வோம்.
அ.தி.மு.க., தி.மு.க., த.வெ.க. என மூன்று அரசியல் கட்சிகளும் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒன்றையொன்று மெதுவாகக் கீழ் இழுத்துள்ளன. ஆகவே கூட்டணிகள் மாற்றத்தால் எதுவும் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
2026-சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் (தனி) அ.தி.மு.க. வேட்பாளருக்கும், அடுத்து வந்த தி.மு.க. வேட்பாளருக்கும் 16,727 வாக்குகள் வித்தியாசம் உள்ளன. அடுத்த த.வெ.க. வேட்பாளர் வெற்றி வேட்பாளரைவிட 34,662
வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். இப்பெரு வெற்றி வாக்குகளை எப்படி தி.மு.க. மற்றும் த.வெ.க. மெல்லத் தள்ளி முன்னேறும் என்பது பெருங்கேள்வியாகும்.
2026
- சட்டமன்றத் தேர்தலுக்கும், அக்டோபர் மாதத் தேர்தலுக்கும் ஏறக்குறைய ஆறு மாதங்கள் இடைவெளி உள்ளன. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெருங்கூட்டணியாக இருந்த தி.மு.க., தே.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் கட்சி, மக்கள் நீதிமையம், இரு இஸ்லாமிய அமைப்புகள் எனத் தேர்தல் களத்தில் நிற்கிறது. அ.தி.மு.க. அணியோ, எந்த மாற்றங்களும் இல்லாமல் இடைத் தேர்தலில் பலம் காட்டுகிறது.
த.வெ.க.-வைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி என்ற அரசு இயந்திர பலத்தோடு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி தி.மு.க., ஐ.யூ.எம்.எல்.ஏ. எனத் தன் புதிய கூட்டணியோடு இரு தொகுதிகளிலும் வென்றுவிடுவோம் என மார்தட்டுகிறார்கள்.
த.வெ.க. ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் கடந்து, ஐந்தாவது மாதம் நடக்கிறது. இடைப்பட்ட இந்த நாள்களின் நாட்டு நடப்பைக் காண்போம். மக்களின் முக்கியப் பிரச்சினை விலைவாசி உயர்வாகும். உணவுப் பொருள்களின் விலை 20 விழுக்காடு உயர்ந்துவிட்டது. விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை என்பதே உண்மையாகும். 200 யூனிட் இலவச மின்சாரம் என்றாலும், மின் கட்டணம் இரு மடங்காகிவிட்டது என்ற பொதுமக்களின் குரல்களைப் பின்தள்ள இயலாது. மாநிலம் முழுவதும் பல மணிநேர மின்வெட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் என்ற புகார்களுக்கு விடிவு இல்லை என்பதே நடப்பாகும். கடந்த ஆட்சியில் நடந்த சட்டம்-ஒழுங்கை விமர்சித்த முதல்வர், இன்று அது சமூகம் சார்ந்த பிரச்சினை, தனிமனித ஒழுக்கம் சார்ந்தது, போதைப் பழக்க விளைவுகள் எனப் பின்வாங்குகிறார்.
விவசாயக் கடன் ரத்து, காவிரி நீரில் கர்நாட காவில் இருந்து உரிய பங்கைப் பெறாமல் விட்டது, மேகதாது அணை பிரச்சினை, முதல்வரின் உள்வட்ட நபர்களுக்கு அரசு பதவி வழங்கியது எனக் கடும் குற்றச்சாட்டுகளை த.வெ.க. அரசு எதிர்கொண்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களின் மொழியறிவு, அடிப்படை அறிவு குறித்த சட்டசபை நிகழ்வுகள், வெறுப்பு அரசியல் என்ற வாதங்கள் அடுக்கப்படுகின்றது. நடைபெறுகிற இடைத்தேர்தல்கள் கூட குதிரைபேர அரசியலின் பின்விளைவு எனக் கண்டனங்கள் எழுகின்றன.
த.வெ.க. ஆட்சிக்கு வந்த பின்பு வரும் இடைத் தேர்தல் என்பதால் மாநில அரசின் மீதான மக்கள் கொண்ட நம்பிக்கையின் ‘எடைத் தேர்தலாகும்.’ ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தல் பிரச்சாரங்களில் தங்கள் தரப்பு நியாயங்களை வைக்கலாம். தேர்தல் சனநாயகத்தில் மக்களே இறுதி எஜமானர்கள் என்பதால் அவர்கள் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும்.
ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வாக்கின் வலிமையை அறிந்து வாக்களித்தால், இந்திய சனநாயகம் வலிவும் பொலிவும் பெறும். அது இடைத் தேர்தல்களுக்கும் பொருந்தும்.